அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு இந்தியாவில் எதிர்ப்பு - அனிகெட் சுலே







Image result for aniket sule


 நேர்காணல்

“இந்தியச்சூழலில் அறிவியல் ஆராய்ச்சிகளை காப்பாற்றுவதே பெரிய சவால்தான்”

அனிகெட் சுலே, ஆராய்ச்சியாளர், ஹோமிபாபா ஆராய்ச்சி மையம்(HBCSE)


2002 ஆம் ஆண்டு மும்பை ஐஐடியில் முதுகலை இயற்பியல் படித்த சுலே, ஜெர்மனியின் பாட்ஸ்டம் பல்கலையில் வானியற்பியலில் முனைவர் பட்டம் வென்றவர், 2007 ஆம் ஆண்டிலிருந்து  ஹோமி பாபா ஆராய்ச்சி கல்விமையத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

மனிதவளத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் சத்யபால் சிங்கிற்கு எதிராக எப்படி கடிதம் எழுதினீர்கள்?

அமைச்சர் கூறிய டார்வினிய அறிவியல் கொள்கை நவீன அறிவியலையே அசைத்து பார்ப்பது என்பதால்தான் கடிதம் எழுதும் முயற்சியை செய்தோம். அதிகாரத்திலுள்ளவர்கள் தாறுமாறாக அறிவியலை தத்துவமாக புரிந்துகொண்டு பேசுவது பின்னாளைய தலைமுறையை பாதிக்கும். வேதியியலில் பென்ஸேன் அமைப்பு அல்லது இயற்பியலில் நியூட்டனின் விதிகளை எப்படி திடுதிப்பென தவறு என கூறுவீர்கள்? அறிவியல் ஆராய்ச்சிகளை காப்பாற்றுவதே இந்திய அரசியல் சூழலில் கடினமாக உள்ளது.

அறிவியலுக்கு எதிரான மனநிலையாக இதனை கருதலாமா?

வரலாறு நெடுக அறிவியலுக்கு எதிரான அரசுகளை நாம் பார்க்க முடியும். சர்வாதிகாரிகள் தம்மை நோக்கி மக்கள் எழுப்பும் எவ்வகையான கேள்விகளையும் விரும்புவதில்லை. ஆனால் நகைமுரணான இதுபோன்ற நாடுகள்தான் விஞ்ஞானத்தில் முன்னுரிமை பெற்று விளங்குகின்றன.

நரேந்திர தபோல்கர் முகம் தெரியாத ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நிலைமை என்ன?

தபோல்கர் படுகொலையாகி ஐந்து ஆண்டுகளாகியும் குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அடுத்ததாக பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், தன் வீட்டிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு கொலையானார். ஆனால் இதெல்லாம் மகாராஷ்டிராவில் ஏன் நடப்பதில்லை என எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

இந்தியாவெங்கும் பொறியாளர்களும், மருத்துவர்களும் நிரம்பிய சூழலில் மூடநம்பிக்கைகளுக்கு மக்கள் இன்றும் பலியாகி வருகின்றனர். ஏன் இந்த நிலைமை?

மருத்துவர்கள், பொறியாளர்களாக உருவாகுபவர்கள் யாரும் நேர்மையான வழியில் அறிவியலின் செயல்பாட்டை புரிந்துகொண்டு தம்மை தயாரித்துக் கொண்டவர்களில்லை. உண்மையில் நாம் கற்றறிந்த சமூகம் என்றால் நாளிதழில்களில் ஏன் ஆன்மிக பத்திகளும் ராசிகளும் வெளியாகின்றன? இவையின்றி பத்திரிகைகளை வெளியிட என்ன தயக்கம்?

பள்ளி மாணவர்களை கணிதம், அறிவியல் இருபாடங்களைக் கண்டும் மிரள்வது தொடர்கதையாகியுள்ளது. என்ன பிரச்னை?

தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களை சரியாக ஊக்கப்படுத்தாமல் இருப்பது. இரண்டாவது, பெற்றோர்களுக்கு கணிதத்தில் ஆர்வமில்லை என்பதால் அதுகுறித்து அக்கறை காட்டாதது ஆகியவை முக்கிய காரணங்கள். ஆசிரியரின் பாடம் நடத்தும் முறை மாணவர்களுக்கு ஏற்ற விதத்தில் இல்லாதது இறுதிக்காரணம். இதன்விளைவாக கணிதம் விரும்பும்/வெறுக்கும் மாணவர்கள் என இருபிரிவினர் வகுப்பில் உருவாகிறார்கள்.

அறிவியலை சந்தைக்கு பயன்படுத்தும் வழிமுறைகளால் பாதகம் ஏற்படுகிறதா?

நிச்சயமாக. அறிவியல்பூர்வமான ஆராய்ச்சி அல்லாத விஷயங்களை லாபத்திற்காக கூறும்போது பாதகங்கள் நிகழ்கின்றன. கிரகண நாளில் நிலவிலிருந்து புற ஊதாக்கதிர்கள் பூமியில் படாததால் பாக்டீரியாக்கள் வளர்ச்சியடைகின்றன என்பதும், பதினொராவது அட்சரேகையில் ஆசிரமம் அமைந்துள்ளதால் நேர்மறை கதிர்களை பெறுகிறது எனும் ஜக்கி வாசுதேவ் போன்றோரின் மூடநம்பிக்கை கூற்றுகள் அறிவியலை மிகவும் எதிர்மறையாக்குகின்றன. 

-Sanjukta sharma, Livemint.com


தமிழில்: ச.அன்பரசு