துரந்தோ எலி!-இழப்பீடு வழக்கு என்னாச்சு?
பாகிஸ்தானில் வென்ற இந்து!
அண்மையில் பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட்
வீரரும் அரசியல்வாதியுமான தெரீக் இ இன்சாப் கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று
வென்றுள்ளது. இந்து ஒருவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக வென்றுள்ளது
மிராக்கிள் நியூஸாக பகிரப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மகேஷ்குமார் மலானி, தெற்கு சிந்துபகுதியிலுள்ள தர்பார்கர் தொகுதியில் மக்களின் மனதை வென்று 37 ஆயிரத்து 245 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அராப் ஸகாவுல்லா என்ற வேட்பாளரை தோற்கடித்துப் பெற்ற
வெற்றி, சிறுபான்மையினத் தலைவர் மலானியை பிரபலப்படுத்தியுள்ளது. ராஜஸ்தானி புஷ்கரண பிராமின் பிரிவைச் சேர்ந்த மலானி 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டுள்ளார். மாற்றம் நாட்டை வளமாக்கட்டும்!
2
கங்கை சுத்தமாச்சா?
கங்கையை சுத்தப்படுத்துவோம் என்ற கோஷம் ஆட்சி மாறினாலும்
காட்சி மாறாத ஒன்று. பாஜகவின் ஆட்சியில் 1% மட்டுமே தூய்மைப்படுத்தும் திட்டம் முன்னகர்ந்துள்ளது. ஆனால் தேவைப்படும் நிதி 49 ஆயிரத்து 800 கோடி.
ஐந்து திட்டங்கள் பிரமாண்ட விளம்பரத்துடன் தொடங்கப்பட்டாலும்
நிர்வாக குளறுபடி, ஒப்பந்ததாரரின் தாமதம் என எதுவும் கங்கையை தூய்மையாக்க
உதவவில்லை. அதோடு திட்டமதிப்பீடும் தாமதத்திற்கு ஏற்ப 2,341% உயர்ந்துள்ளது(CAG
report). திட்ட இயக்குநரை மாற்றி, திட்டங்களை தீவிரமாக கண்காணித்தால் மட்டுமே திட்டமதிப்பு தொகையை துல்லியமாக கணித்து
அதனை நிறைவேற்ற முடியும் என சிஏஜி அறிக்கை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
3
துரந்தோ எலி!
மும்பை டூ எர்ணாக்குளம் துரந்தோ ரயிலில் பிரீமியம் பணம்
கட்டி பயணித்த ஷீத்தல் கனகியா, தனது பெட்டியில் கூடவே சொகுசாக பயணித்த
எலியைக் கண்டு பீதியானார். சுகாதாரம், சேவை சரியில்லை என நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடந்து ரயில்வேயிடம் ரூ.19 ஆயிரம் இழப்பீடு பெற்றிருக்கிறார்.
2015 ஆம் ஆண்டு பிரீமியம் ரயிலில் நடந்த சம்பவம் இது. பெட்டியில் எலிகளின் நடமாட்டம் குறித்து புகார் அளித்தபோது, "எலிகள் நடமாட்டம் இயல்பானதுதான். மூன்று மணிநேரத்திற்கு முன்புதான் ரயில்பெட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன" என ரயில்வே நிர்வாகத்திடம் பதில் கிடைக்க நொந்துபோன ஷீத்தல்
கனகியா, தெற்கு மும்பை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துவிட்டார். டிக்கெட் விலை 6 ஆயிரத்து 600 ரூபாயோடு மனஉளைச்சல், மருத்துவமனை சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு
இழப்பீடு கேட்டு வென்றுள்ளார் கனகியா.
4
என்கிரிப்ஷன் தேர்வுகள்!
தேர்வுகளுக்கு முன்னதாக கேள்வித்தாள்கள் லீக்காகும் பிரச்னைக்கு
முற்றுப்புள்ளி வைக்க சிபிஎஸ்சி வாரியம், என்கிரிப்ஷன் கேள்வித்தாட்களை தயாரித்து
மாணவர்களுக்கு வழங்கவுள்ளது.
இவ்வாண்டில் சிபிஎஸ்சி நடத்திய எகனாமிக்ஸ் தேர்வுத்தாள்
திடீரென வெளியானதால் மறுதேர்வு நடத்தும் தர்மசங்கடம் உருவானது. இவற்றைத்தவிர்க்கும் முகமாக சிபிஎஸ்சி வாரியத்தின் அதிரடி யோசனைதான் ரகசிய கேள்வித்தாட்கள். இம்முறையில் தேர்வு நடைபெறும் நாளன்றுதான் என்கிரிப்ஷன் கேள்வித்தாட்கள் தேர்வு
மையத்திற்கு இணையம் வழியாக அனுப்பி வைக்கப்படும். அங்கீகாரம் பெற்றவர் அதனை பெற்று உடனே பரபரவென அதனை ஜெராக்ஸ் போட்டு மாணவர்களுக்கு
கொடுத்து தேர்வு நடத்திவிடலாம். ஆனால் தேர்வுமையத்தில் பாயும் புலி
வேகத்தில் இணைய இணைப்பு, பிரிண்டர்கள், ஜெராக்ஸ் மெஷின்கள், காசுக்கு விலைபோகாத ஊழியர்கள் இருக்கவேண்டியது
அவசியம்.
-ரோனி