இப்பயணம் இப்படியே தொடரக்கூடாதா?



Image result for ready player one




மயிலாப்பூர் டைம்ஸ் 3!

இந்த அத்தியாயம் பயணம் பற்றியது. ஹெட்போன் மாட்டாத, கையில் புக் எடுக்காதபோது, பேச நண்பர்கள் இல்லாதபோது உங்கள் மனம் எங்கு செல்கிறது? இறந்த காலத்திற்குத்தானே? அதுதான் இந்த அத்தியாய கான்செஃப்ட் கூட.

மயிலாப்பூரில் இரு ஆண்டுகளாக படிக்கும்போதும் அதனை முழுமையாக அறியவில்லை. காரணம், நெருக்கடியான படிப்பு அதற்கடுத்து என்னாலேயே புரிந்துகொள்ள முடியாத என்னுடைய மனநிலை முக்கியக்காரணம்.

அறையில் இருந்தவர்கள் அனைவரும் என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்பதோடு அனைவரும் எங்களை விட சாதியில் உயர்ந்தவர்கள். இதனால் அறையில் தங்கியிருக்கும் ஒவ்வொரு கணமும் சீண்டல்கள் அதிகம் இருந்தது. குறிப்பாக ஜீவா, சக்திவேல் என்ற இருவரின் வருகையை தீவிரமாக நான் வெறுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் விலகி ஓடியது எந்தளவிலும் என்னை துணிச்சல்காரனாக மாற்றவில்லை என்பதை இன்று உணர்கிறேன். விலங்கின் வேட்டை குணம் இன்று காலத்திற்கேற்ப வீஆர் வடிவில் மாறியுள்ளது. ரெடி பிளேயர் ஒன் படம் இதனை காட்சிபடுத்துகிறது. அதனை வடிவமைப்பவர் மனிதர்களிடம் பழக அஞ்சி உருவாக்கும் உலகம் அவரின் காலத்திற்கு பின்னர் அத்தனை மக்களுக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. ஆனால் அதிலுள்ள பிரச்னை, திரில்லுக்கு செயற்கை சூழல் ஒத்துவரும் . இயல்பு வாழ்வில் சலிப்புகள் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம். 

அடங்கமறு அத்துமீறு என்கிற திருமாவளவனின் சொல்லை நான் புதிய விஷயங்களை அறிந்துகொள்வது என்ற பொருளில் புரிந்துகொள்கிறேன். பல்வேறு இடங்களுக்கு செல்வதும், புதிய மனிதர்களுடன் பழகுவதும் இன்றுமே எனக்கு சிக்கலாகவே உள்ளது என்பது உண்மை. அன்றிருப்பதை விட வயது அதிகமாவதைவிட அனுபவங்கள் மேலதிகமாக கிடைப்பது நம்மை புடம் போடுகிறது என நம்புகிறேன். அப்படித்தான் இன்று என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் உள்ளனர்.

டைபாய்டு காய்ச்சலில் கிடந்த என்னை தூக்கி ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோனது எனக்கு பெரிய அறிமுகமில்லாத நண்பர்தான். அன்றுதான் நான் நட்பை பற்றி தெரிந்துகொண்டேன் என கடும் கசப்பு காப்பியை பருகியபடி சொன்னவரின் அருண்மொழியின் கண்களில் காலத்தின் ரசத்தை பருகியபடி சிரிக்கும் புத்தனை பார்த்தேன். நூலை படித்தவுடன் யாரும் சித்தார்த்தனாகிவிட முடியாது. அதற்கு முக்கியமாக தேவை நம்பிக்கை. நம்பிக்கையுடன் கடல்நீர் மேல் நடந்து காட்டமுடியாது. ஆனால் மூழ்காமல் எப்படி செல்வது என அறிந்துகொள்ளலாம்.

வேகமெடுத்து திரியும் அதிவேக தார்சாலைகளில் அக்கறையான வார்த்தைகளைக் கேட்க அலைந்து திரியும் ஆத்மாக்கள் அதிகம். அவர்களை அடையாளம் கண்டுகொள்வதுதான் கடினம். பலாப்பழ முட்களின் குத்தல்களை தாங்கினால்தானே, கைகளை ஒட்டும் பிசின் பிரச்னையோடு சுளைகளை பிரிக்க முடிகிறது. ரேடியோசிட்டி லவ் குரு போல பேசுகிறேனோ? அவள் விகடனில் அவருக்கு தோழியாக வழிகாட்டிய மாலா என்ற பெண்மணியைப் பற்றி படித்தேன். உண்மையில் எந்த புள்ளியில் அவர்கள் நட்பானார்கள் என்பது வாசிப்பவர்களின் கற்பனைக்கான விருந்து. ஆனால் அதனை விவரிக்கும் ராஜவேலின் குரலில் வழிவது தாய்மையை தேடும் பரிதவிப்பா? உண்மையான நட்பை கண்டடைந்து விட்ட கர்வமா? நான் இதனை நண்பர் சக்தியிடம் பகிர்ந்தபோது, அவரின் கணவர் இதனை எப்படி எடுத்துக்கொள்கிறார் என கேட்டார். ஆம், நம்மால் இப்படியொரு கேள்வியைத்தான் கேட்கமுடியும். அதுதான் யதார்த்தம் கூட.


ஆக்கம்: ஜெய்ஷன்