நாவலை சினிமாவாக்க கேள்விகளை கேளுங்கள்!
கிரிஷ் காசர்வல்லி...
இரண்டாம் பகுதி...
திரைப்படமாக்கும் கதையை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?
நாவலை சிறுகதையை படித்து அதனை திரும்ப கூறும் தேவையிருக்கிறதாக என யோசிப்பேன். அவ்வளவேதான். அடுத்ததாக தற்போதைய உலகில் கூறும் கதைக்கு பொருந்திப்போகும் நிகழ்வுகள் உண்டா? இன்றைய உலகில் எனது கதை ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துமா? கதையின் நிகழ்வுகளை உணர்ச்சிகளை சினிமா அனுபவமாக வலுவாக மாற்ற முடியுமா? என்பதை கேள்விகளாக எனக்குள் கேட்டு பதில் கிடைத்தால் கதையை திரைப்படமாக உருவாக்குவேன்.
உங்களுடைய வாழ்க்கையிலிருந்து பல்வேறு அனுபவங்களை பெற்றிருப்பீர்கள். குறிப்பாக உங்களது தந்தை குறித்து கூறுங்கள்.
எங்களது கிராமத்தில் எனது தந்தை ஜமீன்தாராக வாழ்ந்து வந்தார். ஆனால் அதேசமயம் காந்தியத்தில் நம்பிக்கை கொண்டவரும் கூட. தலித்துகளை முன்னேற்றும் விதமாக கிணறுகள், பள்ளிகள், வீடுகள் ஆகியவற்றை கட்டித்தந்தவர் ஊரிலுள்ள அனைத்து நிகழ்வுகளிலும் மரியாதையை தரவேண்டிய அந்தஸ்திலான ஜமீன்தாராக பங்கேற்பார்.
மதத்தின் மீது பிடிப்பற்ற என் தந்தை அக்காலத்தில் கிராமத்தில் படித்த நபர் அவர் மட்டும்தான். ஏறத்தாழ என் தந்தையின் குணத்தை திரைப்பட கதாபாத்திரமாக மாற்றினேன். மேலும் மோகன்தாஸ் காந்தியின் வாழ்விலும் என் தந்தையைப் போன்ற இரண்டு ஆளுமைகளின் குறுக்கீடு உண்டு.
திரைப்படமாக்க நாவல், சிறுகதை என எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?
தாயி சாகிபா, த்வீபா, நாயி நீராலு ஆகிய திரைப்படங்கள் நாவலை தழுவி உருவானவை. கடாஷ்ரத்தா, தபர்னா கதே, குலாபி டாக்கீஸ், கனசெம்பா குடுரேயனேரி ஆகிய படைப்புகள் சிறுகதைகளை அடிப்படையாக கொண்டவை.
சிறுகதையை விட நாவலை திரைப்படமாக்குவது சிரமமான பணி. எதை வெளியேற்றலாம், எதை உள்ளே நெய்யலாம் என வாசிப்பின் வழியே முடிவு செய்வேன். இதனால் நான் உருவாக்கிய படங்களை ஒருவகையில் இலக்கியங்களை தழுவியது எனலாம். இல்லையென்றும் கூறலாம்.
திரைக்கதை எழுத எவ்வளவு காலம் எடுத்துக்கொள்வீர்கள்?
படம் தயாரிக்க ஆதரவு தரும்போது திரைக்கதையை எழுத தொடங்குவேன். இடையில் அத்திட்டம் நின்றாலும் நினைத்த கதையை முழுமையாக எழுதிவிடுவேன். ஏனெனில் யாராவது ஒருவர் மூலம் என்னுடைய கதை திரைப்படமாகும் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். தபர்னா கதே திரைப்படத்தை தயாரிக்கிறேன் என்று கூறியவர், நான் திரைக்கதை எழுத தொடங்கியபோது ஆர்வம் இழந்து படம் தயாரிப்பதிலிருந்து விலகிக் கொண்டார். அப்போது NFDC துடிப்பாக செயல்பட்ட காலம். அங்கிருந்த ரவி மாலிக், என்னுடைய கடாஷ்ரத்தா படத்தை பார்த்திருந்தார்.
என்னுடைய ஸ்கிரிப்டை கேட்டார். இன்னும் ரெடியாகவில்லை என்று சொன்னேன். நீ ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து விட்டாய் என்று கேள்விப்பட்டேன் என்று கூறினார். ரஃப் ஸ்கிரிப்ட்டை அவரிடம் கொடுத்தேன். பணம் படத்திற்கு சாங்சனாகி வருவதற்கு நீண்டகாலம் பிடிக்கும். நானும் படம் எடுத்துவிட்டேன். மனே படம் எடுக்கும்போது அப்படத்திற்கான தொகையை ரவிமாலிக் கொடுத்தார்.
கடாஷ்ரத்தா படம் சிறுவன் மற்றும் விதவை இருவருக்குமிடையேயான உறவு குறித்தது. பிராமண ஜாதியில் பெண்களின் அந்தஸ்து பற்றி கூறிய படமும் கூட. எதற்காக அக்கதையை தேர்ந்தெடுத்தீர்கள்?
ஐடியாவுடன் உணர்ச்சிகரமான தன்மையுடனும் கதை இருந்தது. எனக்கு இவ்விரண்டு தன்மைகளுடன் உள்ள படத்தை செய்யவேண்டுமென்பதுதான் ஆசை. கடாஷ்ரத்தா படம் அதனை சரி செய்தது என்பதோடு சினிமாவில் என் அறிமுகத்தை நிகழ்த்த சரியாக இருக்கும் என நம்பியதும் ஒரு காரணம்.
மருந்தியல் பட்டதாரியான நீங்கள் சினிமாவுக்கு வந்த கதையை சொல்லுங்கள்.
கிராமத்திலிருந்த எனக்கு திரைப்படங்களை பற்றி புத்தகங்கள் மூலம் அறிந்தாலும் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. கன்னடம் , தெலுங்கில் சில மாயாஜால படங்களை மட்டுமே பார்த்திருந்தேன். கே.வி . சுப்பண்ணா எனும் என் மாமா திரைப்படக்கழகத்தில் சேர்ந்தபிறகு எனக்கு சத்யஜித்ரே, கடக் குறித்து நூல்களை படிக்க கொடுத்தார்.
மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆசையால் மருந்தியல் படித்தேன். உடுப்பியிலுள்ள புத்தக கடை மூலம் பதேர் பாஞ்சாலி, புவன் சோமே, உஸ்கி ரொட்டி திரைப்படங்களை பற்றிய நூல்களை படித்தேன். அப்போது அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா படத்தை பார்த்தேன். உண்மையில் அப்படம் எனக்கு பிடிக்கவில்லை. அதன் எதார்த்தம் எனக்கு புரிபடவில்லை. நல்ல சுவையை நாம் புரிந்துகொள்ள அதிக காலம் பிடிக்கும் என்பதை பின்னாளில் உணர்ந்தேன். மருந்தியல் படிப்பில் பயிற்சிக்காக சென்று வந்து கொண்டிருந்தபோதுதான். திரைப்பட கழகத்திற்கு அப்ளை செய்தேன். என்னை நேர்காணலுக்கு அழைத்து வாய்ப்பு கொடுத்தார்கள்.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: சம்சீர் யூசப், பவுன்டைன் இங்க்.