விசாவுக்கு சோஷியல்சைட் பதிவுகள் அவசியம்!




Related image



பெண்களால் புனிதம் கெடுகிறதா

நாடெங்கும் பெண்களை கோயில்களில் அனுமதிப்பது குறித்து சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில் உ.பியில் பெண் எம்எல்ஏ விசிட் செய்த கோயில் கங்கை நீரால் சுத்தம் செய்யப்பட்டுள்ள செய்தி பரபரப்பாகி வருகிறது.

.பியின் ஹமிர்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிக்கு நோட்டுப்புத்தகங்களை வழங்க பாஜக கட்சி எம்எல்ஏவான மனிஷா அனுராகி வந்தார். மகாபாரத கால துறவி தூம்ரா ரிஷியின் ஆசிரமம் மற்றும் கோவிலை விசிட் செய்து ஆசிர்வாதம் பெற்றார். பெண்களை அனுமதிக்காத ஆசிரமத்தில் எம்எல்ஏ என்பதால் மனிஷா அனுமதித்த கிராமத்தினர், அவர் சென்றபின் கங்கை நீரால் ஆசிரமத்தை கழுவிவிட்டு துறவியின் சிலையையும் அலகாபாத்திலுள்ள கங்கை ஆற்றில் தூய்மைப்படுத்த முடிவெடுத்துள்ளனர்."இது அரசியலமைப்பு அனுமதித்த உரிமைகளின் படி பெண்களை அவமானப்படுத்தும் செயல்" என மனிஷா அனுராகி எம்எல்ஏ கொதித்துள்ளார்.    


2

ஜூனியர் எஞ்சினியர்

அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியரான தனிஷ்க் ஆப்ரஹாம், பதினான்கு வயதில் பயோமெடிக்கல் எஞ்சினியரிங் பட்டம் பெற்று பிரமிக்க வைத்துள்ளார்.

ஆப்ரஹாம் தன் பதினொரு வயதிலேயே கலிஃபோர்னியா கல்லூரியில் பட்டம் பெற்று சாதித்த ஜூனியர் சாதனையாளர். "பனிரெண்டு வயதில் பொறியியல் படிக்க தொடங்கி இதோ பதினான்கு வயதில் முடித்துவிட்டேன்" என உற்சாகமாகிறார் தனிஷ்க் ஆப்ரஹாம். யுசிடேவிஸ் மெடிக்கல் சென்டரில் பிஹெச்டி படிக்க தற்போது விண்ணப்பம் அனுப்பியுள்ளார். ஆப்ரஹாம் ஐந்து வயதிலேயே ஸ்டான்ஃபோர்டின் சிறப்பு குழந்தைகளுக்கான கல்வியை(EPGY) நிறைவு செய்தவர், வேதியியல், புவியியல், உயிரியல், வானியல் என அனைத்திலும் டாப் இடம் பிடித்தார். இப்படி படிப்பது குழந்தைகளின் இயல்பான தன்மையை பாதிக்காதா? என்று கேட்டால்,  "இயல்பான குழந்தைகளின் தன்மையை ஆப்ரஹாம் இழந்ததாக நாங்கள் கருதவில்லை. இயல்பு, இயல்பற்றது என குழந்தைகளிடம் எதனைக்கூறுவீர்கள்?" என்கிறார் ஆப்ரஹாமின் அம்மா தஜி ஆப்ரஹாம்.



3


விசாவுக்கு சோஷியல் பதிவு முக்கியம்!

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல விசா அப்ளை செய்தவர்கள், சோஷியல் தளங்களில் உஷாராக கருத்துக்களை பதிவிட்டால் மட்டுமே அந்நாடுகளை எட்டிப்பார்க்க முடியும். என்னாச்சு?

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலுள்ள குடியேற்ற அதிகாரிகள் தற்போது விசாவுக்கு விண்ணப்பிப்பவரின் சமூக வலைதளங்களையும் கண்காணித்து தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இல்லை என உறுதிப்படுத்தியபிறகே விசா வழங்குவது என முடிவெடுத்துள்ளனர். மேலும் உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் ஸ்மார்ட்போன், லேப்டாப் ஆகியவற்றையும் திறந்து பார்க்க அவர்களது நாட்டு சட்டப்படி அனுமதி உண்டு. அமெரிக்க குடியேற்றத்துறை இதுவரை சந்தேகவலையில் மாட்டியவர்களின் இருநூறு எலக்ட்ரானிக் பொருட்களை சோதித்துள்ளதை பெர்ரி ஆப்பிள்மேன் அண்ட் லெய்டன் எனும் சட்ட அமைப்பின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே வெறுப்பு வாதம், பிரிவினை என கருத்துகளை பதிவிட்டால் உங்கள் பேரன்களுக்கு கூட அமெரிக்கா செல்லும் பாக்கியம் கிடைக்காது உஷார்!


4


கேரளாவில் பெண்கள் படை!

கேரளாவில் பெண்களை மட்டுமே கொண்ட போலீஸ் பட்டாலியன் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க பெண் மேற்பார்வையாளர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட முதல் பேட்ச் பெண் சிங்கங்களின் படை இது.

என்எஸ்ஜி படையினரைப் போல வனம், ஆயுதம், தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகளை அளித்து 44 பெண்களை தயாராக்கி உள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்ட பெண் வீரர்களிலிருந்து மேற்சொன்ன எண்ணிக்கையில் பயிற்சியளித்து சிறப்பாக செயல்பட்ட பெண்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.  படைத்தலைவர் நிஷாந்தினி  தலைமையேற்க புதிய பெண்கள் பட்டாலியனுக்கு பேரிடர் மேலாண்மை, களறி, யோகா, கராத்தே, நீச்சல்பயிற்சி, கணினிப்பயிற்சி ஆகியவற்றில் தேவையான பயிற்சிகள் கடந்த ஒன்பது மாதங்களாக அளிக்கப்பட்டது. அண்மையில்  முதல்வர் பினராயி விஜயன், போலீஸ்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா ஆகியோரின் முன்னிலையில் பெண்களின் படை அணிவகுப்பு நடைபெற்றது.  



-உக்கிரபுத்தன்