மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டால் விபரீதம்!





நேர்காணல்!

"இந்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டால் அரசு கவிழ்வது உறுதி!"

என்.பைரன்சிங், மணிப்பூர் முதல்வர்.


பாஜகவைச் சேர்ந்த முதல் நபராக என்.பைரன் சிங் மணிப்பூரில் முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். ஆனால் நாகா மக்கள் பிரச்னையால் அரசு கவிழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. டெல்லியின் தன் 30 அமைச்சர்களுடன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம்  ஆலோசிக்க காத்திருந்தவர் தன் பிரச்னைகளை பேசினார்.

நாகா மக்களுக்கான அமைதிப்பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதாக கூறினீர்களே?

இப்போதுள்ள நிலையில் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்க முடியாது. நாகா மக்களின் பிரதிநிதி ஆர்.என்.ரவி, நாகா மக்களின் நிபந்தனைகளை முன்வைத்து பேசியதாக வதந்திகள் கிளம்பின. சிறிய மாநிலமான மணிப்பூரில் கூக்கி, நாகா, மெய்டெய் என பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட மக்கள் மாவட்டந்தோறும் வாழ்ந்து வருகின்றனர். யாரும் எதையும் தியாகம் செய்யமுடியாது என்பதே நிஜம். நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் மக்களை நிச்சயம் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.

2015 ஆம் ஆண்டு இந்திய அரசுடன் மணிப்பூர் கையெழுத்திட்ட NSCN(1M) பற்றி..

முதல்வர் இபோபி சிங் காலத்தில் கையெழுத்தான ஒப்பந்தம் அது. நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பயனிக்கும் திட்டம்தான் என்றாலும் கலாசாரமும் நிலப்பகுதியும் பறிபோகிறது என வதந்தியை சமூகவிரோதிகள் பரப்பி வருகின்றனர். மணிப்பூரிலுள்ள வனத்தில் வாழும் சில குழுக்கள் அரசியல் குழப்பத்தை பயன்படுத்த காத்திருக்கின்றனர். இளைஞர்களை ஏமாற்றி தம் படைகளில் சேர்த்து அரசுக்கு எதிராக ஈடுபடுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அச்செயல்பாடு நிறைவேறாது.
அரசு ஏன் அக்குழுக்களோடு அமைதி பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது?
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதக்குழுக்கள் தம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண்டைந்தன. சரணடைய விரும்புவர்களை அரசு இம்முறையில் வெளிப்படையாகவே நடத்தும். டெல்லியிலுள்ள அதிகாரிகள் இவ்விஷயத்தில் இன்னும் தெளிவாக முடிவெடுக்கவில்லை என்பதால்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளை தொடங்க முடியவில்லை.

இந்திய அரசிடம் எதுமாதிரியான கோரிக்கைகளை வைக்க நினைக்கிறீர்கள்?

வெளியிலிருந்து மாநிலத்திற்குள் வாழ வரும் அகதிகளை ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம். மத்திய அரசு இதற்கு உதவி செய்தால் மட்டுமே பழங்குடி மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.

உள்துறை அமைச்சரிடம் பிரச்னை குறித்து விவாதித்தீர்களா?

மணிப்பூரிலுள்ள NSCN(IM) அமைப்பு, மாநில அரசுக்கு நிகரான ஆட்சி நடத்தி ராணுவத்தினரை கொன்று குவித்து வருகிறது. மக்கள் மூன்றுமடங்கு வரிகட்டி நொந்துள்ளனர். அனைத்து வாகனங்களையும் ஆயுதக்குழுவினர் தடுத்து பணம் வசூலிக்கின்றனர். இதில பேச்சுவார்த்தை எப்படி சாத்தியம்? உள்துறை அமைச்சர் இதில் உதவும் வழி குறித்து கருணையுடன் ஆலோசித்து வருகிறார்.   

சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தை நீக்குவது குறித்து யோசிக்கவில்லையா?

 ஆயுதக்குழுக்களை தாக்குவது குறித்த ராணுவத்தின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரின் முக்கிய மலைப்பகுதிகள் இன்று அமைதியை தழுவி காட்சியளிக்கினறன. இச்சூழ்நிலையில் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை நீக்குவது சரியான கருத்து. இது குறித்து விரைவில் ஆலோசிக்கவிருக்கிறோம்.

நாகா மக்களுக்கு இந்திய அரசு வழங்கிய சலுகைகள் உரிமைகள் மறுசீராய்வுக்கு உட்படுத்தப்படாது என முடிவெடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?

இந்திய அரசுக்கு அதுபோன்று முடிவு எடுக்கும் அதிகாரம் உண்டு. ஆனால் அப்படி எடுத்தால் அதுகுறித்து மாநில அரசிடம் விவாதிப்பது அவசியம். ஆனால் இந்திய அரசு தன்னிச்சையாக அப்படி முடிவெடுத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு கவிழ்ந்து குடியரசுத்தலைவர் ஆட்சியின் கீழ் மணிப்பூர் செயல்படும் நிலை நேரும்.


தமிழில்:.அன்பரசு

நன்றிநம்ரதா பிஜி அகுஜாதி வீக்.