ஏழையாக வாழ்வது நாடகமா?
ஏழையின் வாழ்வு நாடகமா?
கல்லூரியில் படிக்கவும் குடும்ப செலவுகளை சமாளிக்கவும்
கேரள இளம்பெண் மீன் விற்றார். இதனை விமர்சித்து ஃபேஸ்புக்கில் ஒருவர்
இட்ட பதிவு அப்பெண்ணின் தினசரி வாழ்வையே புரட்டிபோட்டுவிட்டது.
கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஹனான் ஹனானி என்ற இருபத்தொரு
வயது பெண்தான் இப்போது கேரள ஊடகங்களின் டிஆர்பி டார்லிங். விவாகரத்து பெற்றுவிட்ட பெற்றோர்களால் ஏழாம் வகுப்பிலிருந்தே உழைக்கத்தொடங்கி விட்டார்
ஹனானி. பி.எஸ்சி மூன்றாமாண்டு படிக்கும் ஹனானி, அதிகாலையில் 3 மணிக்கு எழுந்து சம்பக்காரா மீன்மார்க்கெட்டில் சுடச்சுட
மீன்களை வாங்கி தம்மணம் சந்தையில் விற்றுவருகிறார்.
காலை 9.30 க்கு கல்லூரி சென்றுவிட்டு மாலையிலும் மீன் வியாபாரம்
செய்வது வழக்கம். இதனை மாத்ருபூமி நாளிதழ் செய்திக்கட்டுரையாக வெளியிட உடனே
நாடெங்கும் பிரபலமானார் ஹைனி. பண உதவிகளும் குவிந்தன. சும்மாயிருக்குமா உலகம்? உடனே ஃபேஸ்புக்கில் "சிம்பதிக்காக ஹனானியை இப்படி விளம்பரப்படுத்துகிறார்கள் என நூருதீன் ஷேக் என்பவர்
வீடியோ பதிவிட சரி, தவறு என கோஷ்டி பிரிய ஹனானி உடனே தீவிரமாக மோசமானவர் என
அடையாளம் காணப்படத் தொடங்கினார்.
"பள்ளிக்காலத்திலிருந்தே படிப்புக்காக உழைத்து வருகிறேன். யாருடைய பணத்தைப் பெறவும் எனக்கு ஆசையில்லை. என் கணக்கிற்கு பிறர் அனுப்பிய தொகையையும் திரும்பி தந்துவிடுகிறேன்" என பேட்டியளித்து கண்ணீர் விட்டார் ஹனானி. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையிடுமளவு சமூகவலைதளங்களில் விமர்சனம் அதிகரிக்க, வெளியிட்ட 2 வீடியோக்களையும் அழித்துவிட்டார் நூருதீன். தற்போது ஹனானியைப் பார்க்க கூட்டம் கூடுவதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பப்ளிசிட்டிக்காக ஏழைப்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுவது நியாயமா?
- உக்கிரபுத்தன்