சென்னை சீக்ரெட்ஸ்! - மேயர் பதவி நீக்கப்பட்டது!







சென்னை சீக்ரெட்ஸ்
- பிகே

நீக்கப்பட்ட மேயர் பதவி!

மெட்ராஸின் முதல் மேயராக இருந்த நத்தானியேல் ஹிக்கின்சனே எலிஹு யேலுக்கு பிறகு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால், நகரின் சுத்தத்திற்கும், பாதுகாப்புக்கும் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
பின்னர், 1721ல் நகராட்சி மேயர், உறுப்பினர் போன்றவர்களைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் வகுக்கப்பட்டன. பின்னர் 1726ம் ஆண்டு நடைபெற்ற மெட்ராஸ் நகராட்சியின் மறுசீரமைப்பினால் நகராட்சிக்கும், மேயரின் நீதிமன்றத்திற்கும் கூடுதல் அதிகாரம் கிடைத்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை நிர்வாகம் சாசனம் மூலம் உறுதிப்படுத்திய வ்வதிகாரத்தை தனது புதிய சாசனம் மூலமும் உறுதிபடுத்தினார் முதலாம் ஜார்ஜ் மன்னர்.

1727ஆம் ஆண்டு புதிய மேயரும், உறுப்பினர்களும் பெத்தநாயக்கன்பேட்டையில் இருந்த கம்பெனியின் தோட்ட இல்லத்தில் பதவியேற்று கவர்னரின் தடபுடல் விருந்தில் பங்கேற்று மகிழ்ந்தனர். பின்னர் மன்னர் வெளியிட்ட சாசனப் பட்டியல், ‘மெட்ராஸ் பட்டிணத்தின் முதல் நவீன ேமயராக ரிச்சர்ட் ஹிக்கின்சன் நியமிக்கப்பட்டுள்ளார்என அறிவித்தது. இவர் வேறுயாருமல்ல; முதல் மேயராகவும், பின்னர் ஆளுநராகவும் இருந்த நத்தானியேல் ஹிக்கின்சனின் மகன்தான். ஆனால், இச்சாசனம் அரங்கேறும் முன்பே ரிச்சர்ட் துரதிர்ஷ்டவசமாக இறக்க, முதல் நவீன மேயராக கேப்டன் பெளனி பதவியேற்றார்.

பின்னர் 1746 முதல் 1749 வரையிலான காலகட்டத்தில்  மெட்ராஸ் பிரஞ்சு அரசிடம் இருந்ததால் நகராட்சியில் எப்பணியும் நடக்கவில்லை.

1753ல் மன்னர் இரண்டாம் ஜார்ஜ் வெளியிட்ட ஆணைப்படி மீண்டும் மேயர் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் பதவிகள் உருவாயின.  
இதன்பிறகு மாநகராட்சியின் அடுத்தக்கட்ட வளர்ச்சி 1792ம் ஆண்டு நிதானமாக ஏற்பட்டது.

இந்தியக் மக்களிடம் வீட்டு வாடகையின் ஆண்டு மதிப்பில் நூற்றுக்கு 5% வரி வசூலிக்க இங்கிலாந்து பாராளுமன்றச் சட்டம் கம்பெனிக்கு அதிகாரம் தந்தது.  இந்நேரம் பதிவாளர் நீதிமன்றம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டு மேயர் நீதிமன்றத்தை அதனுடன் இணைத்தனர். 1801ம் ஆண்டு மேயர், நகராட்சி உறுப்பினர்கள் பதவிகளும் ஒழிக்கப்பட்டுவிட்டன. தொடங்கிய 113 ஆண்டுகளிலேயே இப்பதவிகள் நகரை விட்டு மறைந்துபோன பிறகெப்படி நகராட்சி செயல்பட்டது?


பிரபலமான இடுகைகள்