ஜூனியர் கேப்டன் ரெடி!- பிரித்விஷா
ஜூனியர் தலைவன் பிரித்விஷா!
இந்தியாவின் பத்தொன்பது வயதுக்குட்பட்ட(U-19) அணியின்
கேப்டனாக அதிரடி காட்டும் பிரித்விஷாவை இளம்புயல் என்றுதான் சொல்லவேண்டும். பார்க்க
பக்கத்துவீட்டுப் பையன் போல தோற்றம். களமிறங்கினால் பவுலர்களின் பந்துகளை ஃபோர், சிக்ஸ்
என வெளுத்துக்கட்டும் ரன்மெஷின்.
2013 ஆம் ஆண்டு மும்பையின் ஆசாத் மைதானத்தில் பிரித்விஷா
ரிஷ்வி ஸ்பிரிங்ஃபீல்ட் பள்ளி சார்பாக களமிறங்கி, செயின்ட் ஃபிரான்சிஸ் டி அசிசி போரிவலி
அணிக்கு எதிராக 546 ரன்கள்(330 பந்துகள்) அடித்து இந்தியாவையே யார் இவன்? என உற்றுப்பார்க்க
வைத்தார். 85 ஃபோர்கள், 5 சிக்ஸ் என பிரித்விஷா காட்டிய அதிரடிக்கு பின்னால் அவரது
தந்தை பங்கஜின் ரத்தம் சதையுமான உழைப்பும் கலந்திருக்கிறது.
ஃப்ளாஷ்பேக் ரகளை!
மும்பை ரஞ்சி அணியில் மினி சுட்டியாய் வலம் வரும்
பிரித்விஷாவுக்கு சோட்டு என்று பெயர். அக்.2017-18 போட்டியில் காலிறுதியில் கர்நாடகாவோடு
மோதிய மும்பை தோற்றுப்போனது. "நாங்கள் தோற்றாலும் அணியின் வெற்றிக்காக கடுமையாக
முயற்சி செய்தோம். தனிப்பட்டரீதியில் என்னை ஒவ்வொரு மேட்சிலும் மேம்படுத்த கடுமையாக
பயிற்சி செய்கிறேன்" என பக்குவமாக பேசுகிறார் பிரித்விஷா.
2016-17 சீசனில் ரஞ்சி போட்டிகளில் விளையாடிய எட்டு
மேட்சுகளில் ஐந்து சதம், மூன்று அரைசதம் என ரன் தாண்டவமாடியதில் அடுத்த சச்சின் என
பேசத்தொடங்கிவிட்டனர். அப்போது கர்நாடகாவுக்கு எதிராக மும்பை விளையாடிய மேட்சை நாக்பூரில்
பார்க்க வந்த இந்திய அணியின் முன்னாள் கோச் ஜான் ரைட், "சச்சினுக்கும் பிரித்விக்கும்
வயதுதான் வித்தியாசம். அவர் பதினைந்து வயதில் செய்த சாதனைகளை பிரித்விஷா தன் பதினேழு
வயதில் நம் கண்முன்னே மேஜிக் போல நிகழ்த்திக் காட்டுகிறார்" என்று பாராட்டியது
உச்சபட்ச அங்கீகாரம்.
சாதனை மேல் சாதனை!
மும்பையின் ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்கி விளையாட ஆள்
தேடிவந்த மும்பை அணியின் தேர்வுக்குழு தலைவர் மிலிந்த ரெகே, பிரித்வியின் திறமையைக்
கண்டு மகிழ்ந்து அணியில் தேர்ந்தெடுத்தார்." பிரித்வியின் கிரிக்கெட் ஐக்யூ செம
ஸ்பெஷலானது. ட்ராவிட்டின் வழிகாட்டுதலில் அவர் எதிர்காலத்தில் நட்சத்திர ஆட்டக்காரராக
மாற வாய்ப்புண்டு" என்கிறார்.
கடந்த செப்டம்பரில் நடந்த துலீப் கோப்பை போட்டியில்
அறிமுகமான பிரித்விஷா அப்போட்டியில் அடித்த ரன்கள் 154. சச்சினுக்கு அடுத்தபடியாக துலீப்
கோப்பையின் முதல் ஆட்டத்தில் சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான்.
நாயகன் வருகிறான்!
மும்பையின் விரார் பகுதியில் பிறந்த பிரித்விஷா
பீகாரின் கயா பகுதியை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரித்விஷாவின் அம்மா
அவரின் நாலு வயதில் இறந்துபோக தந்தை பங்கஜ், அவரை தாயுமானவனாக தாங்கி வளர்த்தார். "உள்ளூர்
மேட்சுகளில் பிளாஸ்டிக் மற்றும் டென்னிஸ் பந்துகளில் பிரித்வி சிறப்பாக விளையாடுகிறான்
என்று பலரும் சொல்ல, மும்பையில் அதற்கான கோச்சை தேடிப்போனேன்." என்கிறார் பங்கஜ்.
விரார் டூ மும்பை என தினசரி நான்குமணிநேர ரயில்பயணம்
பிரித்வியின் பயிற்சிக்கு தேவைப்பட்டது. தன் டெக்ஸ்டைல் பிசினஸை கைவிட்டு, கையிலிருந்த
சேமிப்புடன் பிரித்வியை பேட்ஸ்மேனாக ரெடி செய்யத்தொடங்கினார். சப்பாத்தி சப்ஜியை காலை
உணவாக தயாரித்து பாந்த்ரா-பாயன்தார் ரயிலை பிடித்தால் மட்டுமே சர்ச்கேட்-விரார் ரயில்
நெரிசலில் சிக்காமல் பயிற்சிக்கு சென்று வர முடியும். "அப்போது எங்களிடமிருந்தது
அப்படி சென்று வரும் வசதிதான்" என புன்னகையுடன் பேசுகிறார் பங்கஜ்.
2009 ஆம் ஆண்டு சுப்ரீமோ ட்ராபியில் விளையாடியபோது,
பிரித்வியின் ஷாட்களை வியந்த சிவசேனா கட்சி எம்எல்ஏ சஞ்சய் பாட்னிஸ், பிரித்வி ட்ரெயினில்
மேட்சுகளுக்காக பயணம் செய்வதை அறிந்து பாந்த்ரா கிரவுண்ட் அருகே வகோலாவில் அவர் தங்குவதற்கான
வசதிகளை செய்து தந்தார். "எம்ஐஜி கிரிக்கெட் கிளப்பில் விளையாட சான்ஸ் கிடைத்தது.
அங்கு கோச்களாக இருந்த பிரசாந்த் ஷெட்டி, சந்து பட்கர் ஆகியோர் எனது பேட்டிங் முறையை
நிறைய மாற்றங்களை ஏற்படுத்தினார்கள்" என்று பேசும் பிரித்விஷாவின் கிரிக்கெட்
லைஃபில் அதன்பின்தான் மாற்றங்கள் அன்லிமிடெட்டாக நடந்தன.
ரிஷ்வி ஸ்பிரிங்ஃபீல்டு பள்ளியில் ராஜூ பதக்கின்
கோச்சிங்கில் பட்டை தீட்டப்பட்டார். "பிறருடைய சாயல் தவிர்த்து இயல்பாக விளையாடத்தொடங்கியது
இங்குதான். அர்மான் ஜாஃபர், சர்ஃபராஸ் கான் ஆகியோருடன் பிரஷர் இன்றி விளையாடக் கற்றேன்"
என உறுதியான குரலில் விவரித்தார் பிரித்விஷா. இங்கு அடித்த 546 ரன்கள், இந்தியன் ஆயில்
நிறுவனத்தின் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகையை மாதாமாதம் பெற்றுத்தந்தது அப்பா பங்கஜூக்கு
ஆசுவாசமாக இருந்தது. "பிரித்வி தனது விக்கெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வது,
பேட்டிங்கின் ஆக்ரோஷத்தை விட முக்கியம். மேலும் 5'7" என்ற அவனின் உயரத்திற்கேற்ப
பேட்டிங் உபகரணங்கள் கிடைப்பதில்லை" என்கிறார் பங்கஜ். தற்போது பிரித்விஷாவின்
திறமைக்கு மரியாதையாக எம்ஆர்எஃப் ஆதரவளிக்க முன்வந்திருக்கிறது.
ஃப்யூச்சர்
வீரன்!
நியூசிலாந்தில் ஜூனியர் உலக கோப்பையில் இந்தியாவை
வழிநடத்தி ஆஸ்திரேலியா, பப்புவா நியூகினியா என இரு அணிகளை சரித்து காலிறுதிப் போட்டிக்கு
கொண்டு சென்றதில் பிரித்விஷாவின் பேட்டுக்கு முக்கிய பங்குண்டு. கர்நாடகாவின் மாயங்க்
அகர்வால் ஐந்து சென்சுரிகளோடு 1160 ரன்கள், விதர்பா அணி கேப்டன் ஃபைஸ் ஃபைஸல் 912 ரன்களோடு
ரஞ்சி கோப்பை வென்றிருந்தாலும் ஜூனியர் உலக கோப்பை கேப்டன் பதவி பிரித்விஷாவின் கதவை
தட்டியுள்ளது ஆச்சர்யம்தான். ஜூனியர் அணியிலிருந்து இந்திய அணியில் இடம்பிடிக்க விராட்
கோலி, ரோஹித் சர்மாவுக்கு இரண்டு ஆண்டுகள் தேவை என்றால், பிரித்விஷாவுக்கு தேவைப்படும்
காலம் மினிமம்தான். அவரது பேட்டின் வேகம் சொல்வது அதைத்தான்.
ஸ்கோர்கார்ட்!
மேட்ச் -9(18 இன்னிங்க்ஸ்)
ரன்கள் -
961(50-3,100-5)
அதிகபட்சம் - 154(சராசரி
56.52)
ஜூனியர் எழுச்சி!
1988 ஆம் ஆண்டு எட்டு அணிகளோடு தொடங்கிய கிரிக்கெட்
போட்டி இது. ஜூனியர் உலக கோப்பை 2018 பனிரெண்டாவது எடிஷனாக நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது.
பதினாறு அணிகள் பங்கேற்பில் நடைபெறும் மேட்ச்சுகளின் எண்ணிக்கை 48. இதில் இந்தியா உட்பட
பத்து அணிகள் ஐசிசியின் முழுமையாக இணைந்துள்ளன. 1 செப்.1998 ஆம் ஆண்டுக்கு பிறந்த வீரர்களுக்கு
மட்டுமே அனுமதி. இந்தியா, ஆஸ்திரேலியா இக்கோப்பையை மூன்றுமுறை வென்றிருக்கின்றன. தற்போதைய
சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணி.
-ச.அன்பரசு