"தேசபக்திக்கு அர்த்தம் மனிதர்களை வெறுப்பதல்ல"
பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம்
கன்னையாகுமார்
தமிழில்: வெ.ஜீவானந்தம்.
என்சிபிஹெச் வெளியீடு
விலை ரூ.110
(4வது சென்னை புத்தகத்திருவிழா, ராயப்பேட்டை YMCA)
பீகாரின் மஸ்னத்யூரில் பிறந்த கன்னையாகுமார் பாட்னாவில் கல்லூரிப்படிப்பை நிறைவு செய்து ஜவகர்லால்நேரு பல்கலையில் மாணவர் தலைவனாக மாறி அரசின் வெறுப்புக்கு இலக்காகி சிறை சென்று மீளும் கதை.
எளிய கல்விச்செலவுகளை சமாளிக்க முடியாத பீகார் குடும்பத்து சிறுவன், இந்தியாவிலுள்ள பல்வேறு சமூக ஏற்றத்தாழ்வுகளை முரண்பாடுகளை எப்படி கவனித்து வளர்கிறான் என்பதை படிக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. பள்ளியில் கற்பிக்கும் சமத்துவம், சகோதரத்துவத்தை பள்ளி வளாகத்தை விட்டு வெளிவந்தவுடன் அதேவிஷயங்களை சுற்றியுள்ள சமூகம் எப்படி உடைக்கிறது என்றும் தன் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள் வழியாக சொல்லும்போது அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருங்கே ஏற்படுகிறது.
வெ.ஜீவானந்தம் மொழிபெயர்ப்பில் தேர்தல் சமயத்தில் அவர் ஆதரித்த கட்சி குறித்து எழுதும் இடங்களில் சில காப்பி பேஸ்ட் பிழைகள் தவிர்த்திருக்கலாம். மற்றபடி சுயவரலாறு நாவலின் சாகச அனுபவத்தோடு முதல் அத்தியாயத்தில் தொடங்குவது புதுமை. நூல் நாம் இன்று எதிர்கொள்ளும் எதிர்காலத்தில் வளர்ச்சி என்ற பெயருக்கு கொடுக்கவிருக்கும் விலையை ஓரளவு புரிந்துகொள்ளும்படி விளக்கியுள்ளது.
உயர்கல்வி ஒதுக்கீட்டை 17 சதவிகிதமாக்கியது, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை குறைத்தது, விடுதி வசதிகளை மேம்படுத்தாதது என சீரழிவுகள் தொடங்கியதை எதிர்த்ததோடு மாணவர்களையும் கூர்மையான முறையில் பொய்களையும் வதந்திகளையும் கூறி பிரிக்கும் நயவஞ்சக போலி தேசபக்தர்களையும் கன்னையாகுமார் தெளிவாக அடையாளம் கண்டு எதிர்த்த விழிப்புணர்வு அவசியம் கற்கவேண்டிய ஒன்று.
-கோமாளிமேடை டீம்