ஏழைகளாக இருப்பதற்கு தண்டனையா?
"அரசு அமைப்புகள் காப்பகங்களில் தொடர்ச்சியாக கண்காணித்து தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்"
முகமது தாரிக், டாடா சமூக அறிவியல் கழகம்
பீகாரிலுள்ள முசாபர்நகரிலுள்ள காப்பகங்களில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுவதாக புகார்கள் கிளம்ப முதல்வர் நிதிஷ்குமாருக்கு மெல்ல வியர்த்துக்கொட்ட தொடங்கியுள்ளது. இந்த ஊழலை டாடா சமூக அறிவியல் கழகம் வெளியிட்ட அறிக்கை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
பிரஜேஸ் தாக்கூரின் பலிகா கிரிகா காப்பகத்தில் பாலியல் வல்லுறவு, சித்திரவதைகள் நிகழ்கிறதென எப்படி கண்டுபிடித்தீர்கள்?
எந்த அமைப்பின் அலுவலகத்திற்குள்ளும் நுழைந்து பார்த்தாலே அதன் நிலைமை வெட்டவெளிச்சமாகிவிடும். அங்கு நாங்கள் சென்றபோது அந்த இடமே ஒழுங்கின்றி குழப்பமான சூழலில் காணப்பட்டது. ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் நம்பவே முடியாத அமைதி பரவிக்கிடக்க வரிசையாக அமர்ந்திருந்தனர்.
பீகாரில் மொத்தம் 110 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு நீங்கள் சென்ற விசிட்டில் வேறு என்ன விஷயங்களை பார்த்தீர்கள்?
முசாபர்நகர் தவிர்த்த வேறு சில காப்பகங்களில் பாலியல் வல்லுறவு, சித்திரவதைகள், அடி, உதை ஆகிய பிரச்னைகளும் இருப்பதை கண்டோம். சில காப்பகங்கள் முன்பை விட பெருமளவு வசதிகளில் மேம்பட்டிருந்ததையும் பார்த்தோம். பதினைந்து காப்பகங்கள் உடனே நடவடிக்கை எடுத்து மீட்கப்படவேண்டிய அவசியத்தில் இருந்தன. எட்டு காப்பகங்கள் சிறப்பாக செயல்பட்டிருந்ததையும் அறிக்கையில் எழுதியிருந்தோம்.
காப்பகங்களை மேம்படுத்துவதில் அரசு ஏதேனும் ஆர்வம் காட்டியதா?
டெல்லி அரசு சில நாட்களுக்கு முன்பு எங்களை அணுகியது. பீகார் காப்பங்களையும் பாதுகாப்பு வசதிகளை எப்படி மேம்படுத்தலாம் என்ற அறிவுறுத்தல்களை வழங்க தயாராக உள்ளோம். ஆனால் மாநில அரசுகள் எங்களுடைய அமைப்பின் உதவியை விரும்பவில்லை. காப்பகங்களிலுள்ளவர்கள் நமது குழந்தைகள் . குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்யும் சமூக தணிக்கை குற்றங்களை தவறுகளை தடுக்க உதவும்.
காப்பகங்களில் பாலியல் வல்லுறவுகள் நடைபெறுவது தொடர்கதை நிகழ்வாகியுள்ளது. என்ன காரணம்?
நிர்வாகம், நிதி ஆகியவற்றை மட்டும் அரசு கவனம் கொள்வதுதான் காரணம். இதனால் பாலியல் வல்லுறவு நிகழ்வுகள் அரசின் கவனத்தை ஈர்ப்பதில்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் காப்பகங்களில் சமூக தணிக்கை நடைபெறாதது பல்வேறு குற்றச்சம்பவங்களை அதிகரிப்பதாக உள்ளது.
டெல்லியில் பிச்சை எடுப்பதை குற்றம் இல்லையென நீதிமன்றம் அறிவித்துள்ளது. வீடற்றவர்கள், பிச்சை எடுப்பவர்களின் உரிமைக்காக நீங்கள் மாணவராக இருந்த போதிலிருந்தே போராடி வருகிறீர்கள்.
மாணவராக இருக்கும்போது கோஷிஷ் என்ற திட்டத்தை தொடங்கினோம். இதன் லட்சியம், வீடற்றவர்களை அரசின் பிடியிலிருந்து காப்பாற்றுவதுதான். ஏழைகளாக உள்ளவர்களை அக்காரணத்திற்காகவே தண்டிப்பதில் என்ன நியாயம் உள்ளது? கைவிடப்பட்டவர்கள், தினக்கூலிகள், மனநலன் குறைபாடுள்ளவர்கள், பிழைக்க வாய்ப்பற்று பிச்சைக்காரர்களான பழங்குடிகள் அரசின் கையாலாகத்தனத்தினால் கைது செய்யப்படும் சூழல் முன்பிருந்தது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் இனி பிச்சைக்காரர்கள்
சுதந்திரமாக வாழ முடியும்.
தமிழில்: ஜெய்ஷன் மணி
நன்றி: மொகுவா தாஸ், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா