ஆரஞ்சு இந்தியாவில் மக்கள் வாழ முடியுமா?



Image result for bhima koregaon



பிரதமர் மோடியை கொலை செய்ய முயற்சித்த சதிக்கு காரணம் என குற்றம் சாட்டி ஐந்து பேர்களை மகாராஷ்டிராவின் புனே போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தற்போது கடந்த மூன்று மாதங்களில் மனித உரிமை ஆர்வலர்களை சல்லடை போட்டு தேடி கைது செய்து வருகிறது காவல்துறை.

Image result for bhima koregaon


ஃபரிதாபாத்தின் சுதா பரத்வாஜ், டெல்லியைச் சேர்ந்த கௌதம் நவ்லகா, மும்பையைச் சேர்ந்த வெர்னோன் கன்சால்வ்ஸ், அருண் பெரிரா, ஹைதராபாத்தைச் சேர்ந்த வரவர ராவ், கிராந்தி தெகுலா ஆகியோரின் வீடுகள் போலீசாரால் சோதனை செய்யப்பட்டு பின்னர் மேற்கூறிய மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தலித் மற்றும் ஆதிவாசிகள் தொடர்புடைய செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கியவர்கள் என்பது ஒன்றே அரசு இவர்களை சிறைப்படுத்தி சித்திரவதை செய்யக் காரணம்.

இதற்கு போலீஸ் கூறும் காரணம், பீமா கோரேகான் பேரணி வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதுதான். கடந்த ஜூனில் வழக்குரைஞர் சுரேந்திர கட்லிங், பேராசிரியர் சோமா சென், மனித உரிமை செயல்பாட்டாளர் மகேஷ் ராவத்(நாக்பூர்), தலித் செயல்பாட்டாளர் சுதீர் தவாலே(மும்பை), ரோனா வில்சன்(டெல்லி) ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி என தேசபக்தி காரணம் இக்கைதின் பின்னணியாக கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம்(UAPA) வில் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் ஜனவரி 1 அன்று நடைபெறும் தலித் பேரணியில் மகர் சாதியைச் சேர்ந்தவர்கள் லட்சங்களில் அணிதிரண்டு வருவது வழக்கம். இவர்கள் பேஷ்வா வீரர்களை வென்ற நிகழ்வை(1818) கொண்டாடி வருகின்றனர். ஆனால் இவ்வாண்டில் பல்வேறு இந்து அமைப்புகள் இதனை தடுக்க முயற்சிக்க, மோதல் வெடித்தது. இதற்கு காரணம் என சம்பாஜி பிடே(கைது இல்லை), மிலிந்த் ஏக்போடே(பெயிலில் வெளியே உள்ளார்) உள்ளிட்ட ஆர்எஸ்ஸின் சகோதர அமைப்புகளைச் சேர்ந்த இருவரை மட்டும் பெயருக்கு கைது செய்ததாக கூறியது காவல்துறை.

ஆனால் தலித் பேரணியை ஏற்பாடு செய்த எல்கார் பரிஷத் அமைப்பை உடைக்க, மாவோயிஸ்டுகளிடம் பணம் பெறும் அமைப்பு என அவதூறை புனே துணை கமிஷனர் ரவீந்திர கடம் உறுதியாக தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை மனித உரிமை ஆர்வலர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட கடிதங்களின் உண்மைத் தன்மையை இதுவரை நிரூபிக்கவில்லை.