ஜெயில் கஃபே- கைதிகளின் உணவகம் எங்கேயிருக்கிறது?
காந்தியின் வழியில் ஒபாமா!
தென்னாப்பிரிக்கா தலைவரான அமரர் நெல்சன் மண்டேலாவின் நூறாவது
பிறந்தநாளில் பங்கேற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, மகாத்மா காந்தியின் சமத்துவம், நீதி, சுதந்திரம் உள்ளிட்ட கொள்கைகளே தன்னை வழிநடத்துவதாக பேசினார்.
" நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர்கிங், மகாத்மா காந்தி, ஆபிரஹாம் லிங்கன் ஆகியோரின் தொலைநோக்கு பார்வை, சுதந்திரம், பல்வேறு கலாசார மக்களுக்கான ஜனநாயகம் சமத்துவம் ஆகியவற்றை
அனைத்து மக்களும் பெற தகுதியானவர்கள் என்று கூறிய மேற்கண்ட தலைவர்களை நான் உறுதியாக
நம்புகிறேன்." என்றவர் நாட்டு மக்களின் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும்
எதிரான கருத்துக்களை பேசி வரும் ட்ரம்ப்பை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்ததை பல்லாயிரக்கணக்கான
மக்கள் கேட்டு ரசித்தனர்.
கைதிகளின் கஃபே!
இமாச்சல பிரதேசத்திலுள்ள சிம்லாவில் கைதிகளால் நடத்தப்படும்
புக் கஃபே டூரிஸ்டுகளை பெருமளவு ஈர்த்து வருகிறது.
புக் கஃபேயுடன் ஆறு மொபைல் வாகனங்களை சிம்லா, நாகன், தர்மஸ்தலா ஆகிய இடங்களில் மொபைல் கேன்டீன்களாக்கி டூரிஸ்டுகளை
ஈர்க்க முயற்சித்து வருகிறது சிறைத்துறை. இதற்கு 135 கைதிகளே பொறுப்பு. டகா பென்ச் அருகிலுள்ள புக் கஃபே மற்றும் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள மொபைல் கேண்டீன் ஐடியாவுக்கு
பிரம்மா, சிறைத்துறை தலைவர் சோமேஷ் கோயல். கஃபே கேண்டீன்களில் உணவுவகைகளோடு பேக்கரி பொருட்கள், கைதிகளின் கைத்தறி தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன. "நன்னடத்தை அடிப்படையில் 135 கைதிகளை கஃபே பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். விடுதலை பெறும்போது அவர்களின் மறுவாழ்வுக்கு இப்பணிகள் உதவும்" என்கிறார் சிறைத்தலைவர் சோமேஷ் கோயல். கைதிகளின் கஃபே உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு மூலம் மட்டும் சிறைத்துறைக்கு ரூ.3.5 கோடி லாபம் கிடைத்துள்ளது.
ஆக்கம்: உக்கிரபுத்தன்