அக்கறை கொள்ளாதவர்களின் வாழ்க்கை!
ஒருபடம் ஒரு ஆளுமை - லிஜி
இறுதி அத்தியாயம்!
விமானத்தை விட வேகமாக பறந்துகொண்டிருக்கும் நம் வாழ்க்கைப் பயணத்தில்
திசைகளின்றி, மொழிகளின்றி, நம்பிக்கையின்றி, உணர்வுகளின் வழியாக மென்மையாக... மிகவும்
மெதுவாக நம்முடன் சிலரும் பயணிக்கின்றனர். அவர்களின் இருளும், மௌனங்களும் நிறைந்த வாழ்க்கைப்
பயணத்தில் வெளிச்சமாக இருக்க வேண்டியவர்கள் அவர்களைச் சுற்றியிருக்கும் நாம் தான்.
ஆனால், நம் பயணமே சரியான இலக்கின்றி பல நெருக்கடிகளுக்குள் சுழன்று கொண்டிருக்கும்போது
எதிரே வருபவரையே நம்மால் கண்டுகொள்ள இயலாமல் போய்விடுகிறது. ஆனால், ஒரு கலைஞன் அதைக்
கண்டுகொள்கிறான். நாம் கண்டுகொள்ளாத, தவறவிட்ட, அக்கறை காட்டாத ,இழந்து விட்ட வாழ்க்கையை
தன் கலையினூடாக நமக்கு ஞாபகபடுத்துகிறான்.
நாம் கண்டுகொள்ளாமல், அக்கறை
காட்டாமல் விட்டவர்களின் வாழ்க்கையைப் போல நமக்கும் கிடைத்திருந்தால் வாழ்க்கை எப்படி
இருந்திருக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி, அந்த வெளிச்சத்தின் முன்னால் நம்மையெல்லாம்
குற்றவாளியாக நிறுத்த வைக்கிறான் ஒரு சிறந்த கலைஞன். இந்த மாதிரி நாம் கண்டுகொள்ளாமல்
விட பட்ட பலரில் ஒருவர் தான் பினி ஸ்டிராபெங்கர் பினியின் இருளும் மௌனங்களும் நிறைந்த
வாழ்க்கைப் பயணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய கலைஞன் ஹெர்சாக்.
இதுவரைக்கும் நாம் அனுபவித்திராத,
உணர்ந்திராத, தெரிந்திராத துயரங்களும்,வலிகளும் நிறைந்த ஒரு வாழ்க்கைக்குள் அழைத்துச்
செல்கிறது பினி ஸ்டிராபெங்கரின் தனிமை.
பினி குழந்தைப்பருவத்தில்
படிகளில் இருந்து கீழே தவறி விழுந்து விடுகிறார். விழுந்ததில் தலையிலும்,கழுத்திலும்,உடலின்
பின் பகுதியிலும் பலத்த அடிபடுகிறது .. சிகிச்சைக்குப் பிறகு சில நாட்களில் பினியின்
பார்வை பறிபோகிறது ,பார்வை பறிபோன சில வருடங்களில் காதும் கேட்காமல் போய்விடுகிறது.
பினி படுக்கையில் முப்பது
வருடங்கள் தன்னந்தனியே யாரையும் சந்திக்காமல் ,யாருடனும் அதிகமாக பேசாமல் இருக்க நேரிடுகிறது.
அம்மா மட்டுமே பினிக்கு ஆதரவாக இருக்கிறார்.
இந்த தனிமையிலும் வாழ்க்கையின்
மீதான நம்பிக்கையை பினி இழக்கவில்லை. தனக்குக் கிடைத்த வாழ்க்கையை மிக அற்புதமான ,அழகான
ஒன்றாக மாற்றிகாட்டியவ்ர் அவர். முப்பது வருடங்களுக்குப் பிறகு படுக்கையை விட்டு வெளியே
வரும் பினி, தன்னைப்போலவே பார்வையில்லாத,காது கேட்காத மனிதர்களைச் சந்திக்கிறார். அவர்களுக்கு
வேண்டிய உதவிகளைச் செய்கிறார். இந்த தருணங்களில் தன் தனிமையை உணருவதில்லை என்கிறார்.
பினி ஒரு இடத்தில் சொல்கிறார்
‘‘யாராவது என் கைகளைப் பிடித்து தொடு மொழியில் என் மனதோடு உரையாடும்போது மட்டுமே அவர்கள்
எனக்கு அருகில் இருக்கிறார்கள் என்று உணர்கிறேன். அவர்கள் என் கையை விட்டு விலகிச்
சென்று எவ்வளவு அருகில் நின்றாலும் அவர்கள் ஆயிரம் மைலைத் தாண்டி இருப்பதை போல உணர்வே
எனக்குள் ஏற்படுகிறது...
நான் படுக்கையில் இருந்தபோது
நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறேன் என்று சொன்னார்கள். யாருமே வரவில்லை. இந்த வாழ்க்கை
தரும் மகிழ்ச்சியும், துயரமும் என்னைப் பெரிதாக பாதிப்பதில்லை. என்னைப் போன்ற மனிதர்களுக்கு
உதவியாக இருப்பதிலும், சந்திப்பதிலும் என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருப்பதை உணர்கிறேன்...’’
என்கிறார்.
பினி இந்த மாதிரி கண் தெரியாத,
காது கேட்காத கென்ரிச் என்ற 51 வயதான ஒருவரைச் சந்திக்கிறார். அவருக்கு 35 வயதில் தான்
பார்வை போகிறது. காது சின்ன வயதில் இருந்தே கேட்பதில்லை. குடும்பம் அவரை ஒதுக்கி வைக்கிறது,
சுற்றியுள்ள மனிதர்களும் அவரை கண்டுகொள்வதில்லை. அவரின் அம்மா மட்டுமே ஆறுதலாக இருக்கிறார்.
குடும்பத்தையும், சமூகததையும்
வெறுத்து ஒதுக்கி, யாருடனும் எந்தவித ஒட்டு உறவுமில்லாமல் ஐந்து வருடமாக ஒரு தொழுவத்தில்
மாடுகளுடனும் ,பறவைகளுடனும்,மரங்களுடனும் பேசிக்கொண்டும்,உறவாடிக்கொண்டும் வாழ்ந்து
வருகிறார்.
அவர் வீட்டைவிட்டு வெளியே
மெதுவாக நடந்து வந்து ஒரு மரத்தை வாஞ்சையுடன் தொடுவார். கொஞ்ச நேரம் அந்த மரத்தின்
ஒவ்வொரு பகுதியையும்,இலையையும்,கிளைகளையும் வருடுவார். இந்தக் காட்சியும்,அந்த உணர்வுகளும்,பின்னணியாக
ஒலிக்கும் இசையும் தரும் அனுபவம் அற்புதமானது. மனிதன் தன்னை மறந்து இயற்கையுடன் இயற்கையாக
கரைத்துக்கொள்ளும் அந்தக் காட்சி ஒரு அற்புதமான உணர்வையும் அந்த மனிதனை போன்ற பலரின்
நிலையையும் நமக்குள் ஆழமாக செலுத்துகிறது .
அவரின் முகத்தில் அவர் வாழ்ந்த
துயரமான வாழ்வின் சுவடுகளை நாம் பார்க்கும் போது இவரை போல பலரை நாம் எப்படி இதுவரைக்கும்
இலகுவாக கடந்து சென்றோம்? ஏன் இவர்களை நாம் கண்டுகொள்ளாமல் விட்டோம் ? என்ற கேள்விகள்
எழுகிறது.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில்
யாருடைய சிறு உதவியும் இன்றி எளிதாக ,சுலபாக கடந்துவிடுகின்ற உணவு உண்பது,குளிப்பது,
எங்கேயாவது பயணம் செய்வது ,கருத்துகளை பரிமாறிக்கொள்வது போன்றவை கூட இவர்களின் வாழ்க்கையில்
எவ்வளவு கடினமாக ,சிக்கல் மிகுந்ததாக ,கடினமான ஒன்றாக இருக்கிறது என்பதை கேமரா தன்னுடைய
மென்மையான நகர்வின் வழியாக நமக்கு உணர்த்துகிறது
இவர்களின் மனதில் என்ன மாதிரியான
ஆசைகள்,விருப்பங்கள்,ஏக்கங்கள் ,உணர்வுகள் இருக்கும் என்பதை பினி நம்மிடம் சொல்கிறார்.
‘‘நாங்கள் எல்லோருடனும் பேச விரும்புகிறோம்,எங்களுடன் உரையாடுங்கள்,நாங்களும் உங்களை
மாதிரிதான்.எங்களை தனிமை படுத்தாதீர்கள்,எங்களின் தனிமையில் இருந்து விடுதலை செய்யுங்கள்...’’என்பதுதான்.
தொடரின் ஐடியாவை கூறியதும் எப்போது கட்டுரை வேண்டுமென கேட்ட அன்பு, நண்பர் த.சக்திவேலினுடையது(லிஜி). உலக சினிமா, உளவியல்ரீதியிலான நூல்கள், தத்துவ நூல்கள் அசர வைக்கும் அறிவுத்திறன் கொண்ட அவருக்கு முத்தாரத்தில் ஒதுக்க முடிந்தது இரண்டு பக்கங்கள்தான். இதற்குள் தான் நினைத்தை எழுத முடியுமா என்பவரை தைரியமூட்டி எழுதக்கூறி நம்பிக்கை தர முயற்சித்தேன். அதன் பலன் எழுத்துரீதியாக எப்படி இருந்தது வாசித்தவர்கள் கூறவேண்டும். இன்று இதழ்களில் எழுதினாலும் நாளை த.சக்திவேலின் இடம் வேறாகவும் இருக்கலாம்.
தற்போது இத்தொடர் முடிந்தாலும் பின்னர் முத்தாரத்தில சக்திவேல் எழுதக்கூடும். காலத்தில் பயணத்தில் எதுவேண்டுமானாலும் நிகழலாம். த.சக்திவேலின் எதிர்கால பயணங்களுக்கும் முன்னேற்றங்களுக்கும் நான் அட்வான்சாகவே வாழ்த்துகளை தெரிவித்துவிடுகிறேன்.
-ச.அன்பரசு
உதவி ஆசிரியர், முத்தாரம்