"கலைப்படங்களை எடுப்பதற்கான இடம் சுருங்கிவிட்டது" - கிரிஷ் காசர்வல்லி







Image result for girish kasaravalli




கிரிஷ் காசர்வல்லி....






 கன்னடத்தில் இலக்கியங்களை தழுவிய பனிரெண்டு  படங்களை இயக்கி பதினான்கு தேசிய விருதுகளை வென்ற முக்கியமான இயக்குநர். மருந்தியல் படித்துவிட்டு திரைப்படக்கழகத்தில் படிக்க விண்ணப்பித்து ஆச்சரியம் தந்தவர். யூ.ஆர். அனந்தமூர்த்தி, பூர்ணசந்திர தேஜஸ்வி, எஸ்.எல். பைரப்பா ஆகியோரின் நாவல்களை சிறுகதைகளை வலுவான திரைப்படங்களாக்கினார் காசர்வல்லி.

பதினான்கு தேசிய விருதுகளை வென்றிருக்கிறீர்கள். கலைப்படங்களை எடுப்பதற்கு எளிய சூழல் என்று இதனைக் கூறலாமா?

கர்நாடகாவில் கலைப்படங்களை எடுப்பது சரியான வழியல்ல. முதலில் இங்கு தயாரிப்பு செலவு என்பது குறைவாக இருக்கும். ஆனால் இன்று நிலைமை  அப்படியல்ல. அரசு படம் உருவாக்க உதவுகிறது என்றாலும் தயாரிப்புசெலவு பலமடங்கு அதிகரித்துவிட்டது. திரைப்பட தயாரிப்பாளர் தன் முதலீட்டை எப்படி எடுப்பார் என்பதே எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

2011 ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றை உருவாக்கினேன். சினிமா சூழல்கள் படங்களை உருவாக்குவதற்கான நம்பிக்கையை தரவில்லை என்பதால் பலர் வற்புறுத்தியும் நான் அடுத்த படத்தை எடுக்கவில்லை. மலையாளம் , மராத்தி வட்டாரங்களில் வலுவான திரைப்படங்களை எடுக்கிறார்கள். ஆனால் கன்னடத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த படமும் வரவில்லை என்பதே வருத்தமளிக்கும் உண்மை(Thithi தவிர). நான் உருவாக்கிய கூர்மவதாரா என்ற படத்திற்கும் கூட சரியாக வெளியிட முடியாத வருத்தம் உள்ளது.

கர்நாடகாவின் தனித்துவம் என்ன?

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத மாதிரி ஏழு மொழி திரைப்படங்கள் இங்கு வெற்றிகரமாக ஓடுகின்றன. சிலசமயங்களில்  கன்னடப்படங்களை விட தமிழ், தெலுங்கு படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெறுகிறது.

நீங்கள் உருவாக்கிய படங்களுக்கு பின்புலம் பெரும்பாலும் இலக்கியங்கள்தான்....   

நான் உருவாக்கிய எட்டு படங்கள் பெண்களை மையப்படுத்தியவை. நாவலை படித்து அதன் கருத்து, சில சிந்தனைகளை எடுத்து என்னுடைய பாணியில் திரைக்கதையை எழுதுவேன். பிறகு அதனை எழுத்தாளர்களிடம் காட்டுவேன். நான் திரைப்படங்களை உருவாக்குவது இம்முறையில்தான்.

தற்போதைய திரைப்படங்களில் உங்களை ஆச்சரியப்படுத்திய படங்கள் எது?

கோர்ட், திதி ஆகிய படங்கள் எனக்கு பிடித்திருந்தன. தற்போது திரைத்துறைக்கு வரும் புதிய இயக்குநர்கள் புகழ்பெற்ற இயக்குநர்களை விட திறமையாக படங்களை உருவாக்கி கவனிக்க வைக்கிறார்கள்.


ஒரு கதையை திரைப்படமாக்க தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் அதன் முக்கிய அம்சங்களாக எதனை கருதுவீர்கள்?

மதம், வளர்ச்சி, ஒழுக்கம், கலாசாரம் என்ற பெயரில் தனிமைப்படுத்தப்படுவது என்னுடைய படங்களில் தொடர்ந்து வருவதாக கருதுகிறேன். ஒருவருடைய கனவை அழிப்பது, ஒதுக்குவது உடலளவில் ஒருவரை காயப்படுத்துவதை விட மோசமானது. இதுதொடர்பான அழுத்தமான கேள்விகளை என் படத்தில் கேட்டுள்ளேன். குலாபி படத்தில் வரும் பெண் கதாபாத்திரம், கனசெம்பா குடுரேயானேரி படத்தில் இர்யாவின் நம்பிக்கை அவரது அடிப்படையான ஒன்று. அது குலைக்கப்படும்போது மனித வாழ்க்கையில் வேறு என்ன இருக்கிறது?

தாயி சாஹிபா, படத்தில் நாம் சமூகமாக வாழ உருவாக்கிய விதிகள் மனித வாழ்க்கையை சுதந்திரமின்றி எப்படி அழிக்கிறது என்பதை கூற முயற்சித்தேன்.

தமிழில்: ச.அன்பரசு
நன்றி: சம்ஸீர் யூசப், பவுன்டைன் இங்க்