ஓய்வூதியத்தில் இலவச பேருந்து - அசத்தும் டாக்டரின் சேவை!


ஓய்வூதியப் பணத்தில் மகளிர் பேருந்து



Image result for rajastan dr.rameshwar prasad yadav



வயதான காலத்தில் கிடைக்கும் பென்ஷன் பணத்தை மருத்துவம், ஆன்மிக பயணம் என ஜாலியாக செலவு செய்வதை பார்த்திருப்போம். இலவசபேருந்தை மாதச்செலவு செய்து இயக்குவார்களா? ராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் பென்ஷன் பணத்தில் பெண்கள் கல்லூரிக்கு செல்ல பேருந்தை இயக்கி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காரில் ராமேஷ்வர் பிரசாத் தன் மனைவியுடன் ராஜஸ்தானிலுள்ள சுரி என்ற பூர்விக கிராமத்துக்கு சென்றார். வழியில் மழை பெய்யத்தொடங்க, காரின் வேகத்தை குறைத்தவர் சாலையோரத்தில் பேருந்தை எதிர்பார்த்து கல்லூரி செல்வதற்காக தவிப்புடன் நின்ற மாணவிகளைப் பார்த்தார். விபரம் கேட்டு காரில் ஏற்றிக்கொண்ட ராமேஷ்வர்பிரசாத் யாதவ், பதினெட்டு கி.மீ தொலைவிலுள்ள காட்புட்லியிலுள்ள கல்லூரியில் அவர்களை இறக்கிவிட்டார்.

காரில் மாணவிகளிடம் பேசும்போதுதான் தினசரி கிராமத்திலிருந்து பேருந்து நிறுத்தம் வரவே 6 கி.மீ நடக்கவேண்டுமென்பதும் அதன்பிறகு அரசு பேருந்துக்கு மணிக்கணக்கில் காத்திருந்து இளைஞர்களின் கேலி கிண்டல்களை சகித்து கல்லூரிக்கு வரவேண்டுமென்பதும் ராமேஷ்வர் தெரிந்துகொண்டார். இதற்கு ஏதாவது செய்யலாமா? என அவரது மனைவி தாராவதி கேட்க,  கல்லூரி பெண்களுக்கான பேருந்து திட்டம் பிறந்தது. “பேருந்து வாங்க முடிவு செய்ததும் பென்ஷனிலிருந்து ரூ.17 லட்சமும், சேமிப்பிலிருந்து ரூ. 2 லட்சமும் எடுத்து பேருந்தை வாங்கினோம். இறந்துபோன எங்களது மகள் ஹேமலதாவின் உருவத்தை கல்லூரி செல்லும் பெண்களின் முகத்தில் பார்த்து மகிழ்கிறோம்” என்கிறார் ராமேஷ்வர்.

ராமேஷ்வரின் குழந்தை ஹேமலதா சிறுவயதாக இருந்தபோது, உடலில் செலுத்திய ஊசி மருந்து தவறுதலாக செயல்பட இறந்துபோனார். தாராவதி இதனை நினைவுபடுத்தி ஹேமலதா கல்லூரி செல்லும் வயதில் இருந்தால் அவளுக்கு நாம் செலவு செய்வதை கஷ்டத்திலுள்ள பெண்களுக்கு செய்வோமே என்று கூற ராமேஷ்வர் அதிலுள்ள நியாயத்தை உணர்ந்து ஒப்புக்கொண்டார். 


ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள பவாலா, காயம்புரா பாஸ், பனேதி, சுரி ஆகிய ஊர்களிலுள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு செல்ல ராமேஷ்வரின் இலவச பேருந்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

தினசரி தாமதமாக கல்லூரிக்கு சென்று வருகைப்பதிவு இழந்தவர்களும், கல்லூரி தொலைவிலிருந்ததால் படிப்பை கைவிட நினைத்தவர்களும் கூட இன்று மகிழ்ச்சியாக இலவச பேருந்தில் பயணித்து படிப்பை தொடர்ந்து வருகிறார்கள். அதேசமயம் மாதம்தோறும் பேருந்திற்கான டீசல் செலவு ரூ.36 ஆயிரம், ஒட்டுநர், நடத்துநர் சம்பளம், சாலைவரி ரூ. 5 ஆயிரம் என எகிறும் செலவுகளை முகம் சுளிக்காமல் அரசை எதிர்பார்க்காமல் செய்து வருகிறார் மனிதநேய மருத்துவர் ராமேஷ்வர் பிரசாத் யாதவ்.

ஆக்கம்-தொகுப்பு: ச.அன்பரசு
நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
 - ச.அன்பரசு
ச.அன்பரசு

பிரபலமான இடுகைகள்