குழந்தைகளுக்கு கதை சொல்லும் ஊடகவியலாளர்!
ஆப்பிரிக்காவின் ஊடக ஒளி!
இரவுணவுக்கு தோழியின் வீட்டுக்கு சென்றபோது, ஏனோ தட்டிலிருந்த உணவை பயோலா ஆலபியால் சரியாக சாப்பிடமுடியவில்லை. “ஆப்பிரிக்காவில் பசி,பட்டினி பிரச்னைகள் தீர்ந்துவிட்டதா என்ன?” என்ற தோழியின் அம்மா கேட்டகேள்வி ஆலபியின் நெஞ்சை விட்டு நீங்கவேயில்லை.
இன்று ஆப்பிரிக்காவின் உள்ளூர்மொழிகளில் இயங்கும் ஏழு டிவி சேனல்களை வேட்கை குறையாமல் உருவாக்கியிருக்கிறார் ஆலபி. சின்சினாட்டி, லாகோஸ், நைஜீரியாவில் பெற்றோருடன் வசித்தவர், தென்கொரியாவின் சியோலில் கல்வி உதவித்தொகை பெற்று படித்தார். டாக்டர் கனவுடன் இருந்த ஆலபி, ஊடகத்தின் பக்கம் மக்களுக்காக திரும்பினார். எம்நெட் ஆப்பிரிக்கா எனும் ஊடக நிறுவனத்தை தொடங்கி, உள்ளூர் மொழிகளில் நிகழ்ச்சிகளை உருவாக்கி டிவிகளுக்கு வழங்கத் தொடங்கினார். 2015 ஆம் ஆண்டில் கன்சல்டன்சி தொடங்கி கலைஞர்களுக்கு நிதியுதவியும் அளித்தார்.
நைஜீரியாவின் நோலிவுட்டிலும் பெண்களின் பிரச்னைகள் பற்றி பேசவைத்தது ஆலபியின் தன்னிகரற்ற சாதனை. 2012 ஆம் ஆண்டு சக்திவாய்ந்த ஆப்பிரிக்க பெண்கள் பட்டியலில் இடம்பெற்றாலும் குழந்தைகளுக்கான கல்வி நிகழ்ச்சிகளை தயாரிப்பதே ஆலபிக்கு மனநிறைவு தருகிறது. “நாம் அனைவரும் நமக்கான பங்கை செய்தாலே மாற்றம் நிகழும்” என்கிறார் ஆலபி.