குவாய் ஆப் பயங்கரம் - சீனா ஆப்பின் அத்துமீறல்!





குழந்தைகளை வீழ்த்தும் சீன ஆப்ஸ்! – ச.அன்பரசு


பதினைந்து நொடி வீடியோதான். அதிரவைக்கிறது ஆபாச காட்சிகள். வீடியோ காட்சியில் பனிரெண்டு வயது சிறுமி, நீலநிற லெஹங்கா, வெல்வெட் ஜாக்கெட் அணிந்து ஆபாசமான குத்துபாடலுக்கு சிறுவனோடு பாட்டுப்பாடியபடி அந்நியோன்யமாக இழைந்து ஆடுகிறாள். கீழே கமெண்ட்டுகளில் சிறுமி இன்னும் உடையைக் குறைத்து ஆட ஊக்கப்படுத்துகிறது வக்கிரமான இணையவாசிக்கூட்டம். 

இது அமெரிக்காவில் நடக்கவில்லை. இந்தியாவில் ஸ்மார்ட்போன்களில் வைரலாக பெருகிவரும் சீன ஆப்ஸ்களில் ஒன்றான குவாய்(Kwai) கைவண்ணம் இது. பதினைந்து நொடிகளில் ஸ்மார்ட்போனில் அரங்கேறும் ஆபாச வீடியோக்கள் இந்தியாவில் சீன ஆப்ஸ் வழியாக கிடுகிடுவென தரவிறக்கமாகி வருகின்றன. வீடியோக்களை ஜொள்ளு வழிய பார்த்துவிட்டு ஆடைக்குறைப்புக்கு ஆஃபர் கேட்டு கமெண்டுகளை எழுதுபவர்களில் ஆண்களே அதிகம். 





சரி எப்படி குழந்தைகள் இதுபோல நடனமாட ஒப்புக்கொள்கிறார்கள்? 

ஆப்ஸ்கள் இதுபோல நடனமாட பல்வேறு போட்டிகளை நடத்தி ரூ.30 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பரிசுகளை வழங்குகிறார்கள்.

“வைரலாக பரவும் பதினைந்து நொடி வீடியோக்கள் நூதன குழந்தை விபச்சார விளம்பரங்களாகி வருகின்றன” என குண்டைத் தூக்கி போடுகிறார்  Cyber Peace பவுண்டேஷன் அமைப்பின் திட்ட இயக்குநரான நிதிஷ் சந்தன். குவாய், டிக்டொக், கிளிப் ஆகிய ஆப்ஸ்கள் நடுத்தர வர்க்கத்திற்கும் கீழுள்ள மக்களை குறிவைத்து லாபத்தில் கொழிக்கின்றன. சீனாவுக்கு அடுத்த சந்தையாக இந்தியாவை நம்பியுள்ள குவாய்க்கு, இந்தியாவில் 1.5 கோடி வாடிக்கையாளர்கள் உண்டு.
நிறுவனங்களின் அமோகமாக வளரட்டும்; ஆனால் எந்த வழியே தேர்ந்தெடுத்து காசு பார்க்கிறார்கள் என்பது முக்கியம். 




குவாய் உள்ளிட்ட வீடியோ சமூகதளங்கள் பெண்கள், சிறுமிகள் ஆகியோரை இந்தி, பஞ்சாபி மொழி குத்தாட்ட பாடல்களை பாட வைத்து பார்ப்பவர்களை வக்கிர மயக்கத்திற்கு ஆட்படுத்தி பணம் சம்பாதிப்பதுதான் அதிர்ச்சி. வீடியோக்களுக்கு வரும் ஆண்களின் கமெண்டுகள் அனைத்தும் சிறுமிகளின் உடைகளை நேரடியாக களையச்சொல்லி கட்டளையிடுகின்றன. “இந்த வீடியோக்களில் சிறுமியை உடையை களையச்சொல்லி கூறுபவர்கள், பாலுறவுக்கும் அழைத்தாலும் ஆச்சரியமில்லை” என எச்சரிக்கிறார் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜல்ஜித் தொட்டொலி.

வீடியோக்களுக்கு ஆயிரம், லட்சம் லைக்ஸ்கள் என அதிகரிப்பது குறிப்பிட்ட சிறுமிக்கு மாதம் தோராயமாக ரூ.28 ஆயிரம் கிடைப்பதற்கு உதவுகிறது. ஆனால் உடலும் மனதும் வளர்ச்சிபெறாத காலகட்டத்தில் சிறுமிகள் , வக்கிரக்கூட்டத்தில் ஆபாச போதைக்காக ஊறுகாயாக தங்களை பணயம் வைப்பது அவர்களின் எதிர்காலத்தை குலைத்துவிடும்.




குவாய் ஆப்ஸ், வீடியோக்களை பராமரிக்கும் குழு சீனாவின் பெய்ஜிங்கில் இயங்குகிறது. சர்ச்சைக்குரிய சிறுமிகளின் வீடியோ பற்றி கூறி அதனை அவர்கள் நீக்குவது என்பது மிக கடினம். தானியங்கியாக அல்காரிதம் மூலம் செயல்படும் இத்தகைய வீடியோதளங்களை கண்காணிக்க அரசிடமும் சரியான அமைப்புகள் கிடையாது என்பது பெரும் பாதகம். போலிக்கணக்குகளில் வீடியோ பதிவுகள் என்று சொத்தை காரணங்களை சொல்லிவிட்டு கரன்சி தேற்றும் சீன ஆப்ஸ் நிறுவனங்களை இந்திய அரசு கண்காணித்து கறாராக விதிமுறைகளை வகுத்து ஒழுங்குமுறைப்படுத்துவது இந்தியக்குழந்தைகளின் எதிர்காலத்தை காக்கும்.

நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா