தாவரங்களை பதிவாக்கும் ஓவியர்!
பெங்களூரைச் சேர்ந்த ஓவியக்கலைஞரான நிருபமா ராவ், தென்னிந்தியாவின் பல்வேறு தாவர இனங்களை ஓவியங்களாக வரைந்து பதிவு செய்து வருகிறார்.
சிறுவயதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா சென்று கோடைக்கால விடுமுறையைக் கொண்டாடிய நிருபமா, தற்போது இன்ஸ்டாகிராமில் பலரும் அறியாத தாவர இனங்களை ஓவியங்களாக பதிவு செய்து வருகிறார். 2016 ஆம் ஆண்டிலிருந்து நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.
2017 ஆம் ஆண்டிற்கான நேஷ்னல் ஜியாகிராபிக் இளம் ஆய்வாளர்களுக்கான உதவித்தொகையை நிருபமா ராவ் வென்றவர். மேற்குதொடர்ச்சி மலைகளிலுள்ள தாவர இனங்களைக் குறித்த நூல்களை எழுதியுள்ளார். அது விரைவில் வெளியாக உள்ளது.
" என் சிறுவயதில் நான் ஓவியக்கலைஞராக உருவாவேன் என்று நினைக்கவில்லை. என் இரு சகோதரிகளோடு இணைந்து நூல்களை படிப்பதும் எழுதுவதுமாக கொண்டாட்டமாக இருந்தோம். நூல்களுக்கான அட்டை, இசை விழாவிற்கான போஸ்டர்கள் என பல்வேறு விஷயங்களை நாங்கள் உருவாக்கினோம்" என்கிறார் நிருபமா ராவ்.
"தாவர ஆராய்ச்சி எங்களது தாத்தா மூலம் எங்களுக்கு அறிமுகமானது. கர்நாடகாவிலுள்ள தாத்தாவின் பண்ணைதான் தாவரங்கள் மீதான ஆர்வம் பெருக காரணம். நான் வரையும் படங்கள் தாவர இனங்கள் ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பாடுபட்ட ஆராய்ச்சியாளர்களுக்கான அஞ்சலி" என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் நிருபமா ராவ். இங்கிலாந்தில் வார்விக் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்தவருக்கு, சகோதரரும் ஆராய்ச்சியாளருமான சித்தார்த் மசாடோ காட்டிய புகைப்படம் ஓவியம் வரைய தூண்டியது.
பில்லர்ஸ் ஆப் லைஃப் எனும் தாவரங்களின் படங்களைக் கொண்ட படப்புத்தகத்தை மைசூரு இயற்கை பவுண்டேஷன் அமைப்பின் உதவியுடன் உருவாக்கியுள்ளார்.