குடும்ப வன்முறையை ஆதரிக்கும் ரஷ்ய அரசு!









நேர்காணல்!

"அரசுக்கு சாதாரண தாக்குதல்களுக்கும் குடும்ப வன்முறைக்கும் வேறுபாடு தெரியவில்லை"

யூலியா கார்புனோவா, ஆய்வாளர்(மனித உரிமை கண்காணிப்பகம்)

தமிழில்: ச.அன்பரசு








ரஷ்ய பெண்களுக்கு வீட்டில் இழைக்கப்படும் வன்முறைச்சம்பவங்களுக்கு தண்டனை கிடையாது என்பது உண்மையா?

ரஷ்யாவில் குடும்ப வன்முறைகளுக்கென தனிச்சட்டம் கிடையாது. பெண்களை தாக்குபவர்களுக்கு தாக்குதல் சட்டப்பிரிவில் தண்டனை உண்டு. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அரசு இந்த சட்டத்தையும் பலவீனமாக மாற்றியுள்ளது சரியான அணுகுமுறை அல்ல. குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு இனி தீர்வு கிடைப்பது மிக கடினம். அரசு, தாக்குதல்களுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும் உள்ள வேறுபாடு புரியாததே இதற்கு காரணம்.






சட்டத்தின் தண்டனையை சற்று விளக்குங்களேன்.
குடும்பத்திலுள்ள ஒருவர் பெண்களை தாக்கினால் அவர் ஓராண்டுக்கு கைது செய்யப்படமாட்டார். பார்க்கிங் குற்றத்திற்கு விதிக்கப்படும் வகையில் சிறிய அபராதத்தை கட்டினால் போதும். இது கணவர்களுக்கு உங்கள் மனைவியை தாக்கினாலும் பிரச்னையில்லை என க்ரீன் சிக்னல் கொடுத்தது போலத்தான். தற்போது ரஷ்யாவில் 90% பெண்கள் மூன்று மடங்கு குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு சட்டமாக குடும்ப வன்முறையை ஏற்றால் இனி பெண்கள் எப்படி தங்கள் புகாரை அரசு முன் வைக்க முடியும்?

குடும்ப வன்முறை பற்றி ரஷ்யாவில் பேசத்தொடங்கியிருக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். என்ன மாற்றங்கள் நடந்துள்ளன?

குடும்ப வன்முறை குற்றம் அல்ல என்று கூறியது ரஷ்யாவில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இங்குள்ள பெண்ணுரிமை அமைப்புகள் பல்லாண்டுகளாக குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வுக்காக உழைத்து வருகின்றன. 2012-14 காலகட்டத்தில் வழக்குரைஞர்கள் இதற்கான சட்டவரைவை தயாரித்தும் அரசின் நாடாளுமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்தீர்களா?
கணவர்களால் பற்கள் உடைக்கப்பட்டும், இரும்புக்கம்பி, மரச்சாமான்களால் தாக்கப்பட்டும், தீக்காயங்களோடும் உள்ள பெண்களின் கதைகளை கேட்டேன். கர்ப்பிணியாக இருக்கும் சமயத்திலும் கணவர்களால் தாக்கப்பட்டு உள்ள பெண்கள் வேறுவழியின்றி குடும்ப வாழ்வை தொடர்கிறார்கள். ஆனால் இதை தடுக்கவேண்டிய அரசு, பாதிக்கப்படும் அவர்களையே வன்முறைகளுக்கு காரணம் என சுட்டிக்காட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது? பெண்களுக்கு உதவுபவர்களை குற்றம்சாட்டி குடும்ப விவகாரம் என ஒதுங்குவது எதிர்கால அபாயமாக மாறும்.

பாதிக்கப்படும் பெண்கள் வசிக்க அரசு காப்பகங்கள் செயல்படுகிறதா?

உண்டு. ஆனால் அரசு கேட்கும் ஆவணங்களை கொடுத்து அங்கு தங்குவது சாத்தியமல்ல. மருத்துவம், குடியுரிமை, வருமானச்சான்றிதழ் என ஏராளமான ஆவணங்களை அரசு கேட்கிறது. ஆவணங்களை ஏற்றாலும் தங்க அனுமதி வாங்க பல வாரங்கள் ஆகும். தன்னார்வ நிறுவனங்களின் காப்பகங்களை அரசு வெளிநாட்டு ஏஜெண்ட் என அவதூறு செய்வதால் அவற்றின் செயல்பாடும் சிக்கலில் உள்ளது.

பெண்கள் தங்கள் மீதான தாக்குதலை போலீசுக்கு புகார் அளிப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது என முயற்சித்தால் என்னாகும்?

பெண்கள் தங்கள் மீதான புகாரை போலீசில் பதிவு செய்தால் அவர்கள் அதனை பெறமாட்டார்கள். பெண்களை பழித்துபேசுவதே அங்கு நடக்கும். சமூகசெயல்பாட்டாளர்கள் சமரசம் செய்து பெண்களின் கணவருக்கு ஆலோசனை தருவார்கள்.

வழக்குரைஞர்கள், சாட்சிகள், நீதிமன்ற செலவு என சமாளித்து வழக்கு நடத்தும் திறன் மிக்க பெண்கள் இங்கு குறைவு. 23 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வன்முறையால் விவகாரத்து பெற்ற பெண், கோர்ட்டில் இதற்காக வழக்கு தொடர்ந்தார். நான்குமுறை வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் அவரது கணவர் கோர்ட்டுக்கு வெளியே தன் மனைவியை தாக்கினார். இது செய்தியானாலும் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

நன்றி: Philippa H Stewart ,hrw.org