Bleach (42-63) - ருக்கியா காப்பாற்றப்பட்டாளா?









ருக்கியா காப்பாற்றப்பட்டாளா? - போர் ஆரம்பம்



மோடியின் தேர்தல் தோல்வி, யோகியின் கோத்திரம் குறித்த பேச்சு, கருணாநிதியின் சிலை திறப்பு இதையெல்லாம் கடந்து என் மனதுக்குள் கேட்டது ருக்கியாவை இச்சிகோ குரசாகி காப்பாற்றினானா இல்லையா என்பதுதான். யெஸ் ப்ளீச் அனிமேஷன்தான். போனமுறை தொங்கலில் விட்ட கதை 63 ஆவது எபிசோடோடு நிறைவு பெறுகிறது. 

போன எபிசோடுகளில் உருவான கேள்வி, இச்சிகோ குரசாகி மனிதர்களைப் போல இருந்தாலும் மற்றவர்களை விட அவனது ஆன்மா சிறப்பானது. ருக்கியாவை விட சக்திசாலியாக எந்த பயிற்சியும் இல்லாமல் இருப்பது எப்படி? ருக்கியாவை அழைத்துசெல்லும் அவரது அண்ணன் ஹயாகுயா உண்மையில் யார்? ருக்கியாவின் மீது இச்சிகோவை காட்டிலும் கோபமும் பிரியமும் காட்டி அவளை கொல்லப்பார்க்கும் ரெஞ்சியின் கதை என்ன? தொப்பி அணிந்து கிளைமேக்ஸில் வந்து இச்சிகோவையும் ருக்கியாவையும் குறுஞ்சிரிப்புடன் காப்பாற்றும் கிசுகி உரஹரா, பூனையான யோருச்சி ஆகியோர் யார், உரயு இஷிதா ஆன்மா காவலர்களின் மீது வன்மம் கொண்டு அர்ஜூனனாய் அம்பு எய்துவது ஏன்? ஒரிஹிமேயின் சக்தி என்ன? என அத்தனை கேள்விகளுக்கும் நினைத்து பார்க்க முடியாத பல்வேறு ட்விஸ்டுகளையும் அத்தியாயங்களில் வைத்துள்ளது அனிமேஷன் தயாரிப்பு குழு. 





கேரக்டர்களின் வடிவமைப்பு தனித்தன்மை அனைத்துக்கும் மெனக்கெட்டிருகிறார் கலைஞர் டிட்டே குபோ. 

ருக்கியா தனது ஆன்ம காவலர் பணியை இச்சிகோவுக்கு உள் வாடகைக்கு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு உடனே மரணதண்டனை விதிக்கப்படுகிறது. தங்கை என்று ஹயகுயா குச்சிக்கி சொன்னாலும் கொஞ்சம் கூட கலங்காமல் சட்டம் தன் கடமையை செய்யும் என கிளம்பிவிடுகிறார். ருக்கியாவுடன் படித்த ரெஞ்சி அபராய் தன் கேப்டனான ஹயகுயாவை எதிர்க்க முடியாமல் மனதுக்குள்ளேயே ருக்கியா எப்படியாவது உயிர்பிழைச்சுக்கோ என தவிக்கிறான். இந்த நேரத்தில் ரெஞ்சி அபராய், ஹயாகுயாவால் தாக்கப்பட்ட இச்சிகோ உரகுரோவினால் காப்பாற்றப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு ஆன்ம சங்கத்திற்கு வருகிறான். 

ஆன்ம சங்கத்திலும் தலித்துகள், பிராமணர்கள் இரு பிரிவுகள் உள்ளது. அதனை பாதுகாப்பவரோடு முரட்டுத்தனமான சண்டை. இச்சிகோ வெல்கிறான். ஆனால் இச்சிமாருவின் ஆன்ம சக்திக்கு முன் இச்சிகோ தோற்கிறான். அடுத்தடுத்த கேப்டன்களோடு சண்டையிடுகிறான். கன்பாச்சியோடு வெற்றி பெற்றாலும் அவருக்கு பான்காய் சக்தி கிடையாது . 
வாள் சண்டையில் ஷிகாய், பான்காய் என இரண்டு முறைகள் உண்டு. இம்முறையில் இஷிதா, கேப்டன் ஒருவரோடு மோதி தன் ஆன்ம சக்தியை முற்றாக இழக்கிறான். தாத்தாவை கொன்றவர்களை எப்படியாவது அழிக்கவேண்டுமென தன் வாழ்வையே பணயம் வைக்கும் கணம் பார்ப்பவர்களே நெகிழ்ந்து விடுவார்கள். 




இதற்கிடையே கேப்டர் ஐசன் கொல்லப்படுகிறார். இச்சிகோ குரசாகியை சமாளிக்கவேண்டும், ஐசன் எப்படி இறந்தார் என கண்டுபிடிக்கவேண்டும் என ஆன்ம சங்கம் குழப்பத்தில் ஆழ்கிறது. அதேநேரம் சண்டையில் ஹயாகுயாவை தோற்கடிக்க மூன்று நாட்களே இருக்கிறது. விரைவில் பான்காய் கலையை இச்சிகோ கற்கவில்லையெனில் ருக்கியா தூக்கிலிடப்பட்டு வாளால் கொல்லப்படுவாள் எனும் நிலை. 

இதை யோருச்சி எப்படி தடுத்தாள்? இச்சிகோ தன் பயத்தை வென்று பான்காய் கலையை கற்றானா? ஆன்ம சங்க உறுப்பினர்களை படுகொலை செய்த துரோகி யார்? என அத்தனை உக்கிரமான கேள்விகளுக்கு சிரிப்பும் சீரியசுமான காட்சிகளை அமைத்து தெறிக்க விடுகிறார் டிட்கே குபோ. 

இந்த அத்தியாயங்களில் இச்சிகோ, இஷிதா, ஓரிஹிமே, சாட், கான்ஞ்சு, ஹயாகுயா, யோருச்சி என அனைவரும் தங்களின் முழு சக்தியையும் பயன்படுத்தும் கட்டாயம் உருவாகிறது. சிறப்பாக அதனை செய்திருக்கிறார்கள். முழுக்க போர்தான். அடிதான், ரத்தம் பீறிட்டு நம் கண்களை நனைக்கிறது. இதில் ஜென்டில்மேன். ஹயகுயாதான். தங்கை இறந்தாலும் விதி முக்கியம் என்று நினைப்பவர் இச்சிகோவுடன் போரில் தோற்று தங்கையை காப்பாற்ற ஓடிவரும் இடம் ஆசம். 

வில்லன் ஐசன் அட்டகாச வில்லன் அவதாரம். ஒவ்வொரு கேப்டன்களையும் தெறிக்க விட்டு மெகா வில்லனின் பாதத்தை  சரணடைகிறார். நல்லவர் யார் ?கெட்டவர் யார் என ஒட்டுமொத்த ஆன்ம சங்கமே அறிகிறது. 

இதோடு கேள்விகள் முடிந்துவிடவில்லை. ஹாலோ சக்தியை ஹயாகுயாவுடன் தன்னிச்சையாக எப்படி இச்சிகோ வெளிப்படுத்தினான், கேப்டன் ஐசன் அடுத்து என்ன செய்தான்   என்ற கேள்வி உங்கள் மனதை குடைந்தால் நீங்கள் அடுத்த சீரிசை பார்க்க ரெடியாகிவிட்டீர்கள். வாழ்த்துகள். 

- விக்டர் காமெஸி அண்ட் கோ
நன்றி: மீகா மைக்கேல் 















பிரபலமான இடுகைகள்