2018 மறக்க முடியாத பெண் போராளிகள்
சக்தி 2018
நிர்ப்ரீத் கவுர்(50)
1984 சீக்கியர்கள் படுகொலை யாராலும் அந்த களங்கங்களை மறைக்க முடியாது. காங்கிரஸ் தொண்டர்கள் செய்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய பெண்மணி வீடு, வாசல், நிலம், நகை என அனைத்தையும் விற்று காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு தண்டனை பெற்று கொடுத்திருக்கிறார்.
கவுரின் பதினாறு வயதில் அக்கொடூரம் நிகழ்ந்தது. அவரின் தந்தையை கட்டிப்போட்டு அடித்து சித்திரவதை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொன்றனர். “நிச்சயம் என் தந்தையை நான் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அவரை எரித்துக்கொன்றுவிட்டு அவர் துடித்து சாவதை பக்கத்திலேயே நின்று ரசித்தனர்” என்று கூறுவதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. அந்நிகழ்விற்கு பிறகு கவுர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்து உயிர்பிழைத்திருக்கிறார்.
காங்கிரஸூக்கு எதிராக வழக்கு போட்டு வெல்வது சாத்தியமா? காலிஸ்தான் ஆதரவாளர் என பதினொரு ஆண்டுகள் சிறையில் தள்ளி சித்திரவதை செய்தது அரசு. ஆனால் கவுர் தளரவில்லை. சிபிஐ, நானாவதி கமிஷன் மீது நம்பிக்கை வைத்து குறைந்தபட்சம் சஜ்ஜன்குமாருக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால் நீதிக்கான போராட்டத்தில் இழந்த ஆண்டுகளை யாரால் பெற்றுத்தர முடியும்?
அதுனிகா பிரகாஷ்(34),
பெரிய போராட்டக்காரர் கிடையாது. கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாய் அவ்வளவுதான். கடந்த நவம்பரில் குழந்தையோடு மாலுக்கு சென்றார். குழந்தை பசியால் அலற, அங்கேயே பால் கொடுத்திருக்கிறார். உடனே கோபமான மால் அதிகாரி வீட்டுக்குப் போய் பால் கொடுங்க, நாகரிகம் வேண்டாமா என எகிற அதுனிகா தனது செயலுக்கு நியாயம் தேடி இணையம் புகுந்தார். உடனே மால் அதிகாரிக்கு எதிராக இந்தியாவே கண்டனங்களை குவித்தது. பின் மால் நிர்வாகம் எதிர்ப்புக்கு பணிந்து மன்னிப்பு கேட்டது.
சோபா சாஜூ(36)
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சோபா சாஜூவுக்கு ஐடி சட்டங்களை பற்றி அணுவளவும் தெரியாது. ஆனால் தனது நேர்மையை, தூய்மையைக் காக்க போரிட்டு வென்றிருக்கிறார். திருமணம் செய்த கணவர், பெற்ற குழந்தைகள் என யாருமே இன்று அவரிடம் இல்லை. ஆனாலும் உண்மை வென்றது அதுபோதும் என சிரிக்கிறார். நமக்கு வலிக்கிறது.
2016 ஆம் ஆண்டு சோபாவின் கணவரின் நண்பர், மார்பிங் செய்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் ஏற்றி சோபா சாஜூ என பெயரிட்டு பலருக்கும் அனுப்பினார். விளைவு, உடனே கணவர் விவாகரத்து கேட்டு விலகினார். கூடவே குழந்தைகளையும் அழைத்து சென்றுவிட்டார். மூன்று ஆண்டுகள் அப்புகைப்படங்கள் போலி என நிரூபித்து சாதித்திருக்கிறார். ஆனாலும் நெருங்கிய பலரும் இவர் கூறியதை காது கொடுத்து கேட்காத துயரம் குரலில் வழிகிறது. “சிரமமாக இருந்தது. ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை. போலி புகைப்படம் வெளியானதிலிருந்து நான் தனியாகத்தான் வாழ்கிறேன். என் பெயருக்கான களங்கத்தை நான் நீக்கிவிட்டேன்.” என வலியுடன் சிரிக்கிறார். உண்மை தனியாகத்தான் நிற்கவேண்டும் போல.
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா