கதவுக்கு மறுபுறம் என்ன இருக்கிறது?
தி அதர் சைட் ஆப் தி டோர்
பாசமும், குற்றவுணர்ச்சியும் ஒரு குடும்பத்தை குழிதோண்டி புதைக்கிறது. இதுதான் ஒன்லைன். இதில் சில ஆவிகளைச் சேர்ந்தால் படத்தை பயத்துடன் பார்த்து ரசிக்கலாம். மரியா, கதையின் நாயகன், நாயகி இவர்தான். இந்தியாவில் வாழும் இவருக்கு தன் மகன் ஆலிவரை விபத்தில் காப்பாற்ற முடியாமல் கொன்று விட்டோம் என்ற வலி குற்றவுணர்ச்சி தினந்தினம் அவரைக் கொல்கிறது.
தற்கொலை முயற்சியும் கூட செய்கிறார். ஆனால் கணவர் காப்பாற்றிவிடுகிறார். மிச்சமுள்ள மகளையும் கணவரையும் காப்பாற்ற நினைக்கிறார். அப்போது வீட்டு நிர்வாகம் செய்பவர், தொலைதூரத்திலுள்ள இந்து கோவிலுக்கு சென்று வரச்சொல்கிறார். அப்போதுதான், இறந்த ஆன்மாவை விட்டு நாம் வெளியே வரமுடியும் என்பவர் ஆலிவரின் உடைகளை தீயிட்டு கொளுத்த கோருகிறார். ஆனால் மரியா உடைமைகளை கொளுத்த மறுத்துவிட்டு கோவிலுக்கு செல்கிறார். கோவிலில் பிரார்த்திக்கும்போது என்ன சத்தம், மிரட்டல் வந்தாலும் தாழிட்ட கதவை திறக்ககூடாது என்பதே விதி. ஆனால் பாசத்தின் முன் எப்படி விதிகள் வெல்லும்? மகனின் குரல் கேட்டதும் நரகத்தின் கதவை திறந்துவிடுகிறார். ஆலிவரின் அழிச்சாட்டிய ஆவியுடன் நரகத்தின் காவலாளியான தேவியும் கூடவே மரியாவின் வீட்டுக்கு வந்துவிடுகிறார். அதற்கப்புறம் கதை உங்களுக்கே புரிந்திருக்குமே?
ஒருவர்மேல் ஒருவர் வைத்த பாசத்திற்காக குடும்பமே அழிகிறது. இதில் பேய், அதற்கான பயமுறுத்தல்கள் இருந்தாலும் அதைத்தாண்டி இதனை கவனிக்க வைப்பது மரியாவின் நடிப்பும், கணவரின் மீதான கொள்ளைக் காதலும்தான். முழுக்க மரியா படம் முழுக்க நடித்து தீர்த்திருக்கிறார். பிறர் இவர் அளவுக்கு நடிக்க வாய்ப்பில்லை.
இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆங்கில நடிகர்கள் நடித்துள்ள படம் என்பதற்காக நீங்கள் பார்க்கலாம். தப்பில்லை. படத்தை பார்த்தாலே இதில் பேய் என்பதைவிட உயிரைக்கொல்லுவது அதீத பாசம், பற்று என யாரும் புரிந்துகொள்ள முடியும்.
- கோமாளிமேடை டீம்.