குழந்தைகளை வலிமையாக்கும் மிராக்கிள் பவுண்டேஷன்!






குழந்தைகளுக்கு வானம் தேவை! - ச.அன்பரசு




குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றும் அமைப்பு!


அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் பௌட்ரியாக்ஸ் டிவி ஸ்டேஷனில் வேலை செய்துவந்தார். இந்தியாவுக்கு ஜாலி சுற்றுலாவாக தோழி கிறிஸ் மான்ஹெய்ம் உடன் கிளம்பினார். அப்போது கூட அவரது வாழ்க்கை மாறப்போவதை கரோலின் நினைத்து பார்த்திருக்கவில்லை. கரோலினின் தோழி மானுஸ் என்ற சிறுவனுக்கு நிதியுதவி செய்து வந்தார். அவனை சந்திக்கத்தான் அந்த கோடைக்கால ட்ரிப். கிறிஸ் தனது சேமிப்பு பணத்தை வெட்டியாக செலவழிக்கிறார் என்று கரோலின் அவரிடமே கூறினார்தான். ஆனால் கிறிஸ்ஸை வரவேற்ற கிராமத்தையும் ஆதரவற்றோர் இல்லத்தையும் பார்வையிட்டு பேரதிர்ச்சி அடைந்தார் கரோலின்

“எனது நாயைக்கூட அங்கு வசிக்கவிடமாட்டேன். அப்படியொரு மோசமான சூழலில் ஆதரவற்றோர் காப்பகம் நடந்துவந்தது. குழந்தைகளின் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு உட்குழிந்த வெறுமையான கண்களால் எங்களைப் பார்த்தனர். அந்த நினைவு என்னை தீவிரமாக தாக்க சில மாதங்களிலேயே எனது வேலையை விட்டு விலகி மிராக்கிள் பவுண்டேஷனை தொடங்கினேன்” என்கிறார் கரோலின்.





2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மிராக்கிள் பவுண்டேஷன் பதினைந்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் காப்பகங்களுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது. பிரான்சைஸ் முறையில் மிராக்கிள் பவுண்டேஷன் பெயரில் உள்ளூர் காப்பகங்களை தொடங்கும் திட்டத்தையும் கரோலின் தொடங்கி குழந்தைகளை அரவணைக்கத் தொடங்கினார். “நீ பெரியவளாகி என்னவாக போகிறாய்? என்றால் குழந்தைகள் போலீஸ் அல்லது ஆசிரியர் என்ற பதிலையே திரும்ப திரும்ப சொன்னார்கள். ஆனால் இன்று இந்தியாவின் பிரதமர் என்று மகிழ்ச்சியான பதில்கள் கிடைப்பது நம்பிக்கையின் நல்வரவுதானே?” என உற்சாகமாக பேசுகிறார் கரோலின். நல்ல வீடு, பளபள சொகுசு கார் என நம் அனைவருக்குள்ளும் இருந்த ஆசை கரோலினுக்கும் இருந்தது. ஆனால் வீடு, உணவு ஏன் உடலை மறைக்க உடைகூட இல்லாமல் பொசுங்கி கிடந்த குழந்தைகளின் நிலை கரோலினின் மனதை மாற்ற குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றும் மிராக்கிள் பவுண்டேஷன் பதினெட்டு ஆண்டுகளை சேவையில் நிறைவு செய்துள்ளது.

“ஆதரவற்றோர் காப்பகத்தில் சந்தித்து ஷிபானி என்று சிறுமியின் நிலை, என் வாழ்க்கையை குறித்து யோசிக்க வைத்தது. உணவும், கல்வியும் வறுமையிலுள்ளவர்களின் வாழ்வில் வெளிச்சம் தரும் என அதற்கான முயற்சிகளை செய்யத் தொடங்கினேன். உலகம் முழுக்க 80 லட்சம் பேர் ஆதரவற்று காப்பகங்களில் வாழ்கின்றனர். நாம் அனைவரும் அக்குழந்தைகளுக்கு தோள் கொடுத்தால் அவர்கள் சிறகடிக்கவும்  வானம் கிடைக்கும் ” எனும் கரோலின் பெண் குழந்தைகளுக்கான கல்வி, ஆரோக்கியத்தை காக்க பல்வேறு செயல்பாடுகளை அரசுடனுடன் உள்ளூர் தன்னார்வ அமைப்புகளுடனும்  இணைந்து மேற்கொண்டு வருகிறார்.  

-ச.அன்பரசு
நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா