தமிழ்மொழியை வாசிக்க நேசிக்க உதவும் நூல்!
அறியப்படாத தமிழ்மொழி - கண்ணபிரான் ரவிசங்கர்
அறியப்படாத தமிழ்மொழி கண்ணபிரான் ரவிசங்கர் எழுதிய நூல் தமிழ் குறித்து இதுவரை அறியாத பல்வேறு விஷயங்களை சுவாரசியமான மொழியில் விளக்குகிறது. தமிழ்மொழி குறித்த நூல் எப்படியிருக்கும்?
தொல்காப்பியம் முதல் கலைஞர் எழுதிய திருக்குறள் உரை வரையிலான பெருமைகளை மட்டும் பேசி நிறைவு பெறும். ஆனால் இந்த நூல் தமிழ்மொழி குறித்த கண்மூடித்தனமான நம்பிக்கைகள், பன்ச் டயலாக்குகள், தமிழ் வாழ்க முழக்கங்கள் எப்படி உருவாயின என்பதையும் அதன்மேல் ஏற்றப்பட்ட தவறான சமஸ்கிருத ஏற்றங்களையும் துல்லியமாக உடைத்து பேசுகிறது. மாயோன் சேயோன்(முருகன், திருமால்) எப்படி வரலாற்றுப்போக்கில் சுப்ரமணியன், விஷ்ணு ஆனார்கள், அவர்களுக்கான திணை என்ன, அறுபடை வீடுகள் குறித்த விளக்கங்களும் சான்றுகளோடு கொடுக்கப்பட்டுள்ளன.
பழங்குடிகளின் சிலைகள் எப்படி சிவன் என திரித்து கூறப்பட்டன என்பதோடு தமிழ்மொழியில் சமஸ்கிருதம் உள்ளே நுழைந்து அதனை கரையானாய் அரிப்பது குறித்தும் ஆசிரியர் விளக்கும்போது ஆச்சரியம் பற்றிக்கொள்கிறது. நூல் முழுக்க இணையத்தில் பதிவேற்றப்பட்டதோ என நினைக்கத்தோன்றுகிறது வரிக்கு வரி இதில் வரும் ஸ்மைலிகள், ஆங்கில எழுத்துக்கள். இவை எல்லாம் தாண்டி இந்த நூல் நமக்கு ஈர்ப்பாக இருக்க காரணம், தமிழ்மொழி குறித்த தெளிவான பல்வேறு தரவுகளை தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவற்றிலிலருந்து அளிப்பதோடு தற்காலத்தில் எப்படி அவை திரித்து கூறப்படுகின்றன என்று விளக்கிய விதத்தால்தான்.
நூலினை எழுதிய கண்ணபிரான் ரவிசங்கர், நூலின் உள்ளடக்கம் கெடாமல் இதனை வடிவமைத்த வடிவமைப்பாளர் மெய்யருள் ஆகியோரை எவ்வளவு மெச்சினாலும் தகும்.
-கோமாளிமேடை டீம்