இலக்கியங்களைத் தேடும் சினிமா உலகம்!







சினிமா இலக்கியம்! - ச.அன்பரசு

திடீரென வந்த திரைப்பட நிறுவன அழைப்பை சாய்ஸ்வரூபா, நண்பர்கள் யாரோ கிண்டல் செய்வதாகவே நினைத்தார். பிறகுதான், தான் ஆன்லைனில் வெளியிட்ட இ-புக்கின் உரிமைக்கான ஒப்பந்த அழைப்பு என புரிந்துகொண்டு பரவசமானார். இது சின்ன உதாரணம்தான். தற்போது டிஜிட்டல் வடிவில் டிவி சீரியல்களுக்கு நிகராக இணையத்தில் உருவாகும் டஜன் கணக்கிலான நிகழ்ச்சிகள், தொடர்களுக்கு பல்வேறு இணைய எழுத்தாளர்களின் படைப்புகள்தான் முதுகெலும்பு.
பல்வேறு இணைய எழுத்தாளர்களின் புதுமையான பரவலாக வாசிக்கப்படும் நாவல்களின் உரிமைகளை வாங்க நெட்ஃபிளிக்ஸ், அமேஸான் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் நீயா?நானா? என போட்டியிட்டு வருகின்றனர். இவ்வாண்டில் வெளியாகி இந்தியாவெங்கும் சூப்பர்ஹிட்டான ‘ராஸி’ திரைப்படம் எழுத்தாளர் ஹரீந்தர் சிக்காவின் காலிங் ஷெமத் என்ற நாவலைத் தழுவியது இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

“இது எழுத்தாளர்களுக்கான பொற்காலம். சினிமாவுக்கான கதையில் நிறைய கதாபாத்திரங்கள், திருப்பங்கள், அடுத்தடுத்த பாகங்களுக்கான விஷயங்கள் இருப்பது அவசியம். குறைந்தபட்சம் கதையில் கதாபாத்திரங்களின் குணாம்சங்களேனும் ஈர்க்கவேண்டும்” என்கிறார் ஸ்டோரிஇங்க் நிறுவன இயக்குநரான சித்தார்த் ஜெயின். இந்த ஆண்டில் மட்டும் எழுத்தாளர்களுக்கும் சினிமா நிறுவனங்களுக்கும் இடையே 40 ஒப்பந்தங்களை முடித்திருக்கிறார் சித்தார்த்.

சேட்டன் பகத், சல்மான் ருஷ்டி என புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நாவல்களை தேடி சினிமா செய்தவர்கள் இன்று கதை நன்றாக இருந்தால் புது எழுத்தாளர்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த ஆண்டில் நடைபெற்ற மும்பை திரைப்படவிழாவில் 27 இந்திய பதிப்பகங்கள் பங்கேற்றது நம்பிக்கை முயற்சி. “ஹாலிவுட்டில் நாவல்களை படமாக்குவது சாதாரணம். மேலும் ஆஸ்கர் விருதுகளில் தழுவிய படைப்பு என்ற பிரிவில் விருதும் உண்டு. இந்தியாவில் இச்செயல்பாடு ஒருங்கிணைப்பட்டதாக இல்லை. விரைவில் நிலைமை மாறும்” என புன்னகைக்கிறார் திரைப்படவிழா இயக்குநரான ஸ்மிருதி கிரண்.

இந்தியாவில் பிரபல எழுத்தாளர் என்றால் 50 ஆயிரம் பிரதிகள் விற்கிற நூல், அறிமுக எழுத்தாளர் என்றால்  3 ஆயிரம் பிரதிகள் விற்றாலே பெரிய விஷயம். தற்போது இணையம் மற்றும் சினிமா உலகில் ஏற்பட்டுள்ள கதைப்பஞ்சம் புது எழுத்தாளர்களுக்கு அட்டகாச வருமான வாய்ப்பை அளித்துள்ளது. 

ரூ.10 லட்சத்திலிருந்து 1 கோடி வரையில் திரைப்பட உரிமைகள் காசு கொடுத்து வாங்கப்பட்டு வருகின்றன. அனுஜா சௌகான், சஞ்சய் பாரு, சித்ரா பானர்ஜி, ஆனந்த் நீலகண்டன், அஸ்வின் சாங்வி, அர்னாப் ரே, சசிதரூர், அர்விந்த் அடிகா ஆகியோரின் படைப்புகள் சின்னத்திரை, வெள்ளித்திரை, இணையம் என பல்வேறு ஊடக வடிவங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அப்புறம் என்ன? பேனாவை எடுங்க, காசை பிடிங்க!
  





பிரபலமான இடுகைகள்