மரபணு எடிட்டிங்கின் சாதனைகள் இவைதான்!
மரபணுவை வடிவமைப்போம்!
மரபணுக்களை வடிவமைத்து தொகுக்கும் CRISPR நுட்பம் கண்டறியப்பட்டதிலிருந்து புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தீர்க்கும் முயற்சிகள் அதிகரித்துள்ளன.
புற்றுநோய்
க்ரீக் மருத்துவரான ஹிப்போகிரேட்ஸ்(கி.பி.460-370) புற்றுநோயை கார்கினோஸ் என குறிப்பிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு சீனாவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு டாக்டர். லூ யூ குழுவினர், CRISPR மூலம் எடிட் செய்யப்பட்ட செல்களை உடலில் செலுத்தி சோதித்தனர். நோயாளியின் ரத்தசெல்களை இதற்கு பயன்படுத்தினர். அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் கார்ல் ஜங் குழுவினர், மெலனோமா, சர்கோமா ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மரபணு சோதனையை அனுமதி பெற்று நிகழ்த்தினர்.
எய்ட்ஸ்
நோய்எதிர்ப்பு சக்தியை உடைத்தெறியும் எய்ட்ஸ் நோய் மாபெரும் உயிர்க்கொல்லிநோய். கட்டுப்படுத்த மருந்துகள் உண்டு. தீர்வுக்கு வழிகள் இல்லை. 2017 ஆம் ஆண்டு மே மாதம் டெம்பிள் மற்றும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மெக் கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சென் லியாங் ஆகியோர் மரபணு மாற்றிய செல்களை உடலில் செலுத்தி ஹெச்ஐவி கிருமியை அழிக்க சோதனைகளை செய்தனர். இக்கட்டுரை the journal Molecular Therapy இதழில் வெளியாகியுள்ளது.
ஹன்ட்டிங்டன் நோய்
அமெரிக்காவில் ஹன்ட்டிங்டன் மரபணுநோயால் 30 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு சீன மருத்துவ அகாடமி, இமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான சூ யாங், ரென்பாவோ சாங் ஆகியோர் எலிகளிடம் CRISPR மூலம் செய்த சோதனையில் நியூரான்களிடம் ஏற்பட்ட ஹன்டிங்டன் நோய் பாதிப்பு குறைந்தது. விரைவில் மனிதர்களிடம் ஆய்வை தொடங்கவிருக்கின்றனர்.
தசைச்சிதைவு நோய்(Duchenne muscular dystrophy)
டெக்சாஸ் மருத்துவமையத்தைச்சேர்ந்த மருத்துவர் எரிக் ஆல்சன் மருத்துவக்குழுவினர், தசைச்சிதைவு நோயை தீர்க்க CRISPR cpf1 என்ற நுட்பத்தை பயன்படுத்தினர். உடலிலுள்ள டிஸ்ட்ரோபின் மரபணு இயக்கத்தில் ஏற்படும் மாறுபாடு தசைச்சிதைவை ஊக்குவிக்கிறது.
பார்வையிழப்பு(Leber congenital amaurosis)
ஒரு லட்சம் பேரில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு குழந்தைப்பருவத்தில் பார்வையிழப்பு பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு 14 மரபணுக்களே காரணம். இதனைத் தீர்க்க இடிடாஸ்(Edidas) எனும் அமெரிக்க பயோடெக் நிறுவனம் CRISPR டெக்னிக் மூலம் முயற்சித்து வருகிறது.