மணி என்னப்பா? - மயிலாப்பூர் டைம்ஸ்
மணி என்னப்பா?
எல்லாநேரத்திலும் ஒருவர் எப்படி விழிப்பாக இருக்க முடியும். ஆனால் கேள்விகள் வின்சென்டைப் பொறுத்தவரை பொறுத்தவரை குறைவதில்லை. நண்பருடன் ஜாலியாக டீ சாப்பிடச்சென்றார். டீ டைம் முடிந்தும் பதட்டம் குறையாமல் இருந்தார். ஏன் பாஸ்? எடிட்டர் ஆறுமணிக்குள் கட்டுரை கேட்டாரா என்ன? என்று கேட்டால் என்னை எரிப்பது போல பார்த்தார். கதையின் ஒன்லைன் சிம்பிள், வின்சென்ட் எங்கு சென்றாலும் அவரை மனநலம் பாதித்தவர்கள் மணிகேட்கிறார்களாம்.
என்ன ஒரு வீக்எண்ட் காமெடி என நினைத்தேன். பிளானிங்காக அல்ல; எதார்த்தமாக அவரின் நண்பர் மனோவை கேட்டபோதுதான் விபரீதம் புரிந்தது. அவரும் புதியதாக வாட்ச் வாங்கியிருந்த சமயத்திலும் வின்சென்டிடம் போகும்போது ஒருமுறை வரும்போது ஒருமுறை என மணி கேட்டு மிரட்டியுள்ளனர் பித்தர்கள்.
ஆகா, முன்னோர்கள் சாபம் விட்டுட்டாங்க, தேவனே என்னை திகைக்க வைக்காதீரும் என பைபிள் வாசகங்களை வானத்தை நோக்கி பேச ஆரம்பித்தார் வின்சென்ட். என்ன செய்வது, அவரவர் கர்மம் என விட்டுவிடமுடியுமா? என கட்டிப்பிடித்து தேற்றி ஆல் இஸ் வெல் சொன்னேன். உண்மையில் இது சற்று வித்தியாசமான பிரச்னைதான்.
வாட்சே கட்டாமல் போனால் என்ன கேட்பார்கள் என குயுக்தியாகவெல்லாம் தோன்றியது. ஆனால் இது ஒரு நினைவூட்டல் போலவே எனக்கு தோன்றியது. காலம் பற்றிய கவலை இல்லாமல் வின்சென்ட் எலந்தவடை , கமர்கட் வாங்கி சாப்பிடும்போதெல்லாம் இதுபோல கேள்வி வந்ததாக எங்களது குளோகல் ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்தது.
மணி என்ன என்று மயிலாப்பூரில் மாமாக்கள், அத்தைகள் கேட்கலாம். போயும் போயும் பித்தர்கள் கேட்டால் என்ன சொல்வீர்கள்? மணி கேட்பவர்கள் சில பாத்திரங்கள் மாறினால்தானே நமக்கும் நன்றாக இருக்கும். ஆனால் வின்சென்ட் விஷயத்தில் தூர்தர்ஷன் சீரியல்போல எப்போதும் மாறாத கேரக்டர்கள்தான். எனிடைம் தம்புரா வாசிப்புதான். என்ன செய்வது?
பஞ்சாயத்து முருகன், சீரியல் சூர்யா, பிஜேபி வெங்கட் வரை கிண்டல் செய்யும் வின்சென்ட், மணி என்று கேள்வி கேட்டால் மட்டும் கம்மென முகம் சுருங்கி உம்மென ஆகிவிடுவார். அதேசமயம், அறையிலும் வாட்ச்சை கழற்றாமல் கட்டியிருக்கும் டைம் கீப்பர்.
மணி பார்ப்பதும், புதிய வாட்ச்சுகளை தேடி வாங்குவதும், அவை குறித்து நெட்டில் தேடுவதும் வின்சென்ட்டின் முக்கியமான பணி. இது சாபம்தான் என வின்சென்ட் புலம்பி, புலம்பி நானும் ஒருகட்டத்தில் அப்படித்தான் இருக்குமோ என நினைக்க தொடங்கினேன். நானும் அவரும் கணபதி மெடிக்கல் அருகே டீ குடித்துக்கொண்டிருந்தோம். பத்துரூபாய் நோட்டு பிச்சைக்காரி வேறு தொந்தரவு தந்துகொண்டிருந்தாள். சில்லறை கொடுத்த ஒருவரின் முகத்திலேயே அதனை வீசியெறிந்தாள். வெளியேவந்து கமர்க்கட் வாங்கியபோது சீறலாக வந்த அந்த கேள்வியைக் கேட்டேன். மணி என்னப்பா? என உறுமிய குரல் முதுகுத்தண்டையே சில்லிட வைத்தது. நான் கவனமாக வின்சென்டில் கண்களைப் பார்த்தேன். அதில் மெல்ல நீலம் பரவிக்கொண்டிருந்தது.
ச.அன்பரசு
தொகுப்பு: மனோபாலா, சலீம் பாஷா