தனது அப்பா செய்த தவறை காதலால் சரிசெய்யும் ஆனந்த்!

 












ஆனந்த்

ராஜா, கமாலினி முகர்ஜி

இயக்கம் சேகர் கம்முலா

 

தெலுங்கில் இயக்குநர் மணிரத்னம் போல படம் இயக்க முயற்சிக்கும் ஆள்தான் சேகர் கம்முலா. இவரது பட கதாபாத்திரங்கள் நல்ல வேலையில் இருப்பார்கள் . பிறகுதான் காதலிப்பார்கள். அதில் வரும் பிரச்னைகள்  என கதை நகரும். ஆனால் இந்தப்படம் அந்த ரகத்தில் வராது

படத்தில் ரூபாவுக்கு பெற்றோர்கள் சிறுவயதில் விபத்தில் இறந்துவிட, தனியாளாகவே வளர்கிறாள். அவளுக்கு துணையாக தோழி ஒருத்தி அருகில் இருக்கிறாள். தான் வேலை செய்யும் அலுவலகத்தில் மார்வாடி பையன் ஒருவனை மணந்துகொள்ள நினைக்கிறாள். கல்யாணச்செலவு கூட அவள்தான் செய்கிறாள். ஆனால், பையன் அம்மா பிள்ளை. எனவே அம்மா சொன்னதைக் கேட்டு ரூபாவை மணம் செய்கிறான். ஏறத்தாழ ரூபாவை வீட்டுக்கு வேலைக்காரி போலத்த்தான் மாற்றிக்கொள்ள கல்யாண சடங்கு. இந்த நேரத்தில் உண்மை தெரிய வந்து ரூபா, கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லி நிறுத்துகிறாள்.

தன்மானம், சுதந்திரம் என்ற காரணத்திற்காகவே கல்யாணத்தை நிறுத்துகிறாள். பிறகு தான் வேலை செய்த பழைய ஆபீசுக்கே மீண்டும் பணிக்குச் செல்கிறாள். ராகுல் என்ற முன்னாள் காதலனை மட்டும் மீண்டும் தவிர்க்கிறாள்.

இந்த நேரத்தில், அவளுடைய வீட்டுக்கு அருகில் ஆனந்த் என்ற இளைஞன் குடிவருகிறான். அவனுக்கு ஒரே நோக்கம், ரூபாவை காதலித்து மணப்பதுதான். பார்வையாளர்களுக்கு ஆனந்த் யார் என முதலில் தெரிந்துவிடுகிறது. நாயகி ரூபாவுக்கு அந்த உண்மை தெரிய வரும்போது என்ன ஆகிறது என்பதுதான் இறுதிக்காட்சி.

ரூபாவுக்கு பெற்றோர்கள் இல்லை. இதனால் அடுத்தவர்கள் அவளை ஏதும் சொல்லிவிடக்கூடாது என மற்றவர்களின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்கிறாள். ஆனால் இதுவே அவளது தன்மானம், சுதந்திரத்திற்கு பிரச்னையாகிறது. கல்யாணம் நடைபெறும் காட்சியில், ரூபாவை எதற்கு ஏற்றுக்கொண்டேன் என ராகுலின் அம்மா கூறுவதை கேட்டபிறகும் கூட ரூபா எதற்கு வருங்கால மாமியாரின் காலைத் தொட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். இரங்கிப்போகவேண்டும் என்று தெரியவில்லை. பார்வையாளர்கள் மனதில நினைப்பதை ரூபாவின்தோழி பிரதிபலிக்கிறாள். அவள் முதலிலேயே  சொல்கிறாள். ‘’இனி நீ நீயா இருக்கமுடியாது. நல்லா யோசிச்சுக்கோ’’ என்கிறாள். ஆனால் ரூபா அதை புரிந்துகொள்வதில்லை. கல்யாணத்தை நிறுத்தியபிறகும் பணிந்து போயிருந்தால் கல்யாணம் நடந்திருக்கும் என்ற புலம்புகிறாள்.

அன்பிற்காக ஏங்குகிற பாத்திரம்தான் ரூபாவுடையது. ஆனால் இந்த பாத்திரத்தை சரியாக இயக்குநர் வடிவமைக்கவில்லை. இதனால்தான் கோழி இறைச்சி கடைக்குப் போய் இரண்டு கோழி வேணும் என்று கேட்பது போல காட்சி வைத்திருக்கிறார். இரண்டு கிலோ கறி வேணும்னு  சொல்லி வாங்க கூட தானாகவே தன்னைக் கவனித்துக்கொண்டு  வளர்ந்த பெண்ணுக்கு தெரியாது? ரொம்ப நோகடிக்கிறீங்க சேகர் அண்ணாச்சி?

ஆனந்திற்கு, ரூபாவின் குடும்பம் விபத்துக்குள்ளானது முன்னரே தெரியும். அதற்கு காரணம் யாரென்று கூட தெரியும். இந்த கோணத்தில் இதைப்பற்றி கூறிவிட்டு தனது காதலை அவர் கூறினால், அதன் பெயர் காதலா, கருணை என்று எடுத்துக்கொள்வார்களா? ரூபா எப்படி அதை காதல் என கருதுவாள்? அவளது குடும்பம் இறந்து போலவே தனது அப்பாவுக்கு மனநிலை குறைபாடு ஏற்பட்டுவிட்டது சரி. ஆனால் அவர் குடிபோதையில் கார் ஓட்டிப்போனதை ஏன ஆனந்த் தெளிவாக கூறவில்லை? ஒரு குடும்பத்தில் மூன்று பேர் இறந்ததும், குற்ற உணர்ச்சியால் ஒருவருக்கு மனநிலை பிறழ்ந்து போனதும் ஒன்றாகுமா என்ன?  

கர்நாடக சங்கீதம் படிக்கும் பெண் பிள்ளைகள், நாய் வளர்க்கும் இரண்டு குழந்தைகள், பெண் குழந்தையை தனது தோழியாக்கிக்கொள்ளும் ஆனந்த். தனது தோழி ரூபாவுக்கு எப்போதும் உதவும் ஆத்ம தோழி மற்றும் அவளது நண்பர்கள் என படத்தில் ரசிக்கும் காட்சிகள் நிறைய உள்ளன.

 டாய்லெட் இல்லாத ஒரு அறையை எப்படி வாடகைக்கு விடுவார்கள்? அதில்தான் நாயகன் தங்குகிறான். நாயகி, நாயகியின் தோழி வீட்டுக்கு அவசர நேரத்தில் செல்கிறான். இதெல்லாம் என்ன விதமான காதல் காட்சிகள்?  இந்த படத்தில் நாய்கன் தான் தொழிலதிபர் என பின்னாளில் கூறுகிறான். ஆனால் காதலிக்கும் வரை  சும்மாதான் திரிந்துகொண்டிருக்கிறார். வேறு எதையும் செய்வதில்லை. ரூபாவின் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார். அல்லது அவரின் தோழியுடன் ஜாக்கிங் செல்கிறார்.  

பிறகு எதற்கு இந்தப்படத்தை பார்க்கவேண்டும்? ரூபாவாக நடித்துள்ள கமாலினி முகர்ஜிக்காகவே. அவரின் அழகான முகமும், நடிப்பும் சிறப்பாக உள்ளன. ஏமாற்றம், காதல், விரக்தி. கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். 

 லாஜிக் பற்றி கவலைப்படாமல் படத்தைப் பார்ப்பேன் என்றால் ஆனந்த் உங்களை வருத்தப்பட வைக்கமாட்டான்.

கோமாளிமேடை டீம்

Release date: 15 October 2004 (India)
Director: Sekhar Kammula
Music director: K. M. Radha Krishnan
Budget: ₹30 Lakhs
Distributed by: Amigos Creations

கருத்துகள்