சாலை விபத்தில் ஒருவரைக் கொன்றுவிட்டு குற்றவுணர்ச்சியில் தவிக்கும் நாயகன்!
எலா செப்பனு
தருண், ஷிரியா சரண்
ஜெர்மனி, இந்தியாவில் ஆந்திரம் என இரு நாடுகளில் பயணிக்கிற கதை. தற்செயலாக நடைபெறும் விபத்தால் நாயகி மணம் செய்துகொள்ளப்போகும் அவளது காதலன் இறந்துபோக, நாயகன் காதலனின் இழப்பை எப்படி ஈடுகட்டுகிறான் என்பதே கதை. இறந்துபோனவர் நடத்தும் தொழில், குடும்பம், சமூகம் என அனைத்து இடங்களிலும் தன்னை நாயகன் பொருத்திக்கொண்டு சாப விமோசனம் தேடுகிறார். இந்த நேரத்தில் தன்னால் வாழ்க்கை இழந்த நாயகியையும் சந்தித்து, அடையாளம் மறைத்து அவரைத் தேற்றுகிறார். தொழிலை மேலே மீட்டு கொண்டுவருகிறார். இந்த நேரத்தில் அவர் மெல்ல நாயகியை காதலிக்கத் தொடங்குகிறார். நாயகியும் அப்படித்தான். இவர்களது காதல் ஒன்று சேர்ந்ததா, நாயகன் பற்றிய உண்மை நாயகிக்கு தெரிந்ததா, காவல்துறை அதிகாரி நாயகனின் தற்செயல் விபத்துக்காக அவரை கைது செய்தாரா இல்லையா என்பதே கதையின் இறுதிப்பகுதி.
படத்தில் ஷிரியா சரணுக்கு நடிக்க நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அவரோ எங்கோ பராக்கு பார்ப்பது போல நிற்கிறார். ஒரு நிறுவனத்தை தனது காதலனோடு சேர்ந்து நடத்தியவர், அவனை உருக உருக காதலித்தவருக்கு, ஒருவர் எந்த கண்ணோட்டத்தில் தன்னோடு பழகுகிறார் என்று தெரியாதா? நிறுவன பங்குகளை எதற்கு ஒருவர் திடீரென வாங்கி உதவுகிறார் என புரியாதா?
சேகர், தனது காதலனைக் கொன்றவன் என்பதை அறிந்து பெரிதாக அவர் துயருகிறார் என்று கூற முடியாது. அதைக் கடந்த துயரம் தன்னுடைய காதலை சேகர் நிராகரித்து விட்டான் என்பதில்தான் அவருக்கு இருக்கிறது. இதனால், நாயகன் சேகர் குற்றவுணர்ச்சியாக கருதி தவித்து வந்த விஷயம் பெரிய விளைவு ஒன்றும் ஏற்படுத்தாமல் போகிறது. இறுதியாக அவனுக்கு நேரும் சாலை விபத்து கூட நாடகத்தனமான இறுதிக்காட்சிக்கு உதவுகிறது அவ்வளவேதான்.
கடனில் இயங்கும் நிறுவனத்தை சேகர், தூக்கி நிறுத்த உதவுகிறான். ஆனால், நிறுவனத்திற்கு தலைவர் ஷிரியாதான். அவரை மிஞ்சி சேகர் தானே தலைவர் போல முன்னே நடந்து செல்கிறார். வருகிறார். இதை எப்படி ஒருவர் சகித்துக்கொள்ள முடியும் என்று புரியவில்லை. இறுதியாக தனது முடிவுக்கு கட்டுப்படாத சேகரை வேலையில் இருந்து தூக்கும் முடிவுக்கு ஷிரியா வருவது பெரிய எதிர்பாராத திருப்பம் எல்லாம் கிடையாது.
சேகர் பாத்திரத்தில் தருண் நடித்திருக்கிறார். படத்தில் அவரை விட இன்னொரு நாயகனுக்கு அதிக வாய்ப்பு தந்திருக்கிறார்கள். அவர் ஷிரியாவோடு பாடல் கூட பாடுகிறார். ஆடுகிறார். இறுதியில் அவரை தியாகி ஆக்குகிறார்கள். உண்மையில் அவரை மணப்பது கூட பொருத்தமானதுதான். ஏனெனில் சேகரை ஷிரியாவிற்கு பிடித்திருப்பதற்கு விஷேச காரணம் ஏதுமில்லை. அவன் அவளது நிறுவனத்தை, அதாவது வர்மா இண்டஸ்ட்ரீஸை மேலே கொண்டு வர உதவுகிறான். இறந்தவனின் குடும்ப சோகத்தை நீக்க பாட்டு பாடுகிறான். எல்லாம் சரிதான். ஆனால், விபத்தில் அவன் கார் மோதி இறந்துபோனது ஒரு உயிர். அதுவும் ஷிரியா சில வாரங்களில் மணம் செய்துகொள்ளவிருந்த ஆருயிர் காதலன். சேகரையே ஷிரியா மன்னித்து ஏற்றாலும் கூட அந்த வாழ்க்கை இழந்துபோன ஒன்றை நினைவுபடுத்தவே வாய்ப்புகள் அதிகம்.
சேகரைப் பிடிக்க ஜெர்மனிக்கு வரும் இந்திய காவல்துறை அதிகாரி, குடும்ப டிராமாவை பார்த்து மனம் கலங்கி கேஸ் குளோஸ்டு என்று எழுதிவிட்டு கிளம்புகிறாராம். அடேய் ஏண்ட்ரா இதி? தணிகெலா பரணி எனும் நல்ல நடிகனை வீணடித்துவிட்டார்கள். விபத்தை செய்துவிட்டு குறைந்தபட்சம் இப்படி விபத்து நேர்ந்துவிட்டது என்று அனாமேய தகவலைக் கூட தராமல் ஓடி மறைந்தவன்தான் நாயகன் சேகர். அவனுக்காக தனது கடமையை விட்டுக்கொடுக்கிறார் அதிகாரி. சாலா பாகுந்தி சாரே!!!
சுனில், பிரம்மானந்தம் காமெடி சற்று ஆசுவாசமாக உள்ளது. ட்ராஜடி டிராமாதான். எனவே பெரிதாக சொல்ல ஏதுமில்லை. படத்தின் தலைப்பை போலவேதான் படம் பார்த்த பார்வையாளர்கள் நிலைமையும்... எப்படின்னு சொல்லுவேன்???? என்னன்னு சொல்லுவேன்????
குற்றவுணர்ச்சியும் பரிகாரமும்...
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக