ஜோம்பி தனது கடந்தகாலத்தை தானே டிடெக்டிவ்வாகி கண்டறியும் கதை!

 

 

 

 

 


 

 

ஜோம்பி டிடெக்டிவ்

கொரிய தொடர்

ராகுட்டன் விக்கி


மருத்துவக் கழிவு கொட்டிக்கிடக்கும் இடத்தில் இருந்து ஒரு உருவம் எழுகிறது. அதுதான் நாயகன் காங் மின்கோ. எழுந்தவர் சிகரெட் பிடிக்கிறார். வாயில் புகைவிட நினைத்தால் வயிற்றில் உள்ள ஓட்டை வழியாக புகை வெளியே செல்கிறது. அப்போதுதான் அவர் வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை உணர்கிறார். அங்கிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் அதிர்ந்துபோகிறார். இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிர் வந்தால் உடல் சதைகள் எப்படி சிதைந்து கிடக்கும். அப்படித்தான் அவர் உடல் முழுக்க பஞ்சர் ஒட்டியது போல சதைகள் கிழிந்து ட்டுப்போடப்பட்டது போல உள்ளன. சுருக்கமாக வாழும் பிணம். அதாவது ஜோம்பி.


அவருக்கு தான் யார், பெயர், ஆதார் எண், வங்கியில் கொடுத்த பான் எண், வீட்டு முகவரி என எதுவுமே நினைவில்லை. தான் யார், எப்படி கொல்லப்பட்டோம். ஏன் ஜோம்பி ஆனோம் என்ற உண்மையை மெல்ல கண்டுபிடிக்கிறார். இந்த கதையை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்கள். அடுத்த பாகம் தொடங்கி ஒளிபரப்பப்பட்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

காங் சன்ஜி என்ற இளம்பெண், டிவி கிரைம் நிகழ்ச்சி ஒன்றில் வேலை செய்கிறாள். அவளது நண்பன் காவல்துறையில் டிடெக்டிவ் என்பதால் எளிதாக அவளுக்கு நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. அதை வைத்து காணாமல் போன குழந்தை ஒன்றை தேடி வருகிறாள். அந்த குழந்தை அவள் வாழும் பகுதியில் உள்ள தொழிலதிபரின் குழந்தை. ஓராண்டுக்கு முன்னர் அவள் காணாமல் போய் பிறகு உடல் ஆற்றின் கரையில் மீட்கப்படுகிறது. அந்த குழந்தைக்கு பாதுகாவலராக இருந்தவரும் அப்போதிலிருந்து காணவில்லை. ஆனால் காவல்துறை இந்த விஷயத்தை இணைத்து பார்த்து குழந்தைக்கு செக்யூரிட்டியாக இருந்தவரையும் சேர்த்து தேடாமல் குழந்தையை கொன்ற கொலையாளியை தேடி வருகிறது. சன்ஜிக்கு நல்ல நோக்கம் இருக்கிறது. ஆனால் எங்கு தொடங்கி எப்படி முடிப்பது என தெரியவில்லை.


உண்மையில் குழந்தையின் பாதுகாவலரைத் தேடி கண்டுபிடித்தால் கதை அங்கேயே முடிந்துவிடும் அல்லவா? அப்புறம் எப்படி பனிரெண்டு எபிசோடுகள் தொடரைப் பார்ப்பது?


ஜோம்பி என்ன செய்கிறார் என்றால் பேசுவதற்கு, நடப்பதற்கு என ஓராண்டுக்கு மேல் பயிற்சி செய்கிறார். உணவுக்கு காட்டில் உள்ள வனவிலங்குகளைப் பயன்படுத்திக்கொள்கிறார். அப்படி பயிற்சி செய்யும்போது ஒருநாள் அந்தக் காட்டில் உள்ள சமாதியில் ஒருவர் வந்து பூக்களை வைத்து அஞ்சலி செய்கிறார். அவரறியாமல் அவர் பின்புறம் வரும் மர்ம மனிதன் அவரை தலையில் அடித்து கொன்று காட்டில் உள்ள மலையின் அடிவாரத்தில் தூக்கி வீசிவிட்டு செல்கிறான். இறந்துபோன மனிதனை தேடிச்செல்லும் ஜோம்பியிடம் சாகும் நிலையில் உள்ள மனிதர் ஒரு சாவியைக் கொடுக்கிறார். அவரது அடையாளத்தை தேடினால் அவர் தனியார் டிடெக்டிவ் என தெரிய வருகிறது. ஜோம்பி, தான்தான் இறந்துபோன ஆளான கிம் மூயங் என்ற அடையாளத்தில் சென்று வாழத்தொடங்குகிறார்.


அது அந்தளவு சுலபமாக இல்லை. தனது அலுவலகத்திற்கு வாடகை, நீர் வரி, மின்சார வரி என ஏகப்பட்ட பில்கள் கட்டவேண்டியிருக்கிறது. போதாக்குறைக்கு ஜோம்பிக்கு மனித இறைச்சிதான் பிடித்தமானது. அந்த வேட்கையைக் கட்டுப்படுத்த ஆடு, கோழி, பன்றிக்கறியை பச்சையாக சாப்பிட வேண்டியதுள்ளது.


டிவி நிகழ்ச்சியில் குற்றவாளியை தேடி வரும் காங் சன்ஜி ஒருகட்டத்தில் என்ன நினைக்கிறார் என்றால், நாம் இன்னொருவருடன் குறிப்பாக டிடெக்டிவுடன் இணைந்து வேலை செய்தால் எளிதாக குற்றவாளியைப் பிடிக்கலாம் என நினைக்கிறார். ஜோம்பியுடன் இணைந்து காங் சன்ஜி வேலை செய்யத் தொடங்குகிறார். பணக்கார டிவி நடிகை ஒருவர் வந்து தனது மகளை காணவில்லை என புகார் கொடுக்கிறார். அதை முதல் வழக்காக எடுத்து வேலை பார்க்கிறார்கள். அதில் என்ன கண்டுபிடித்தனர், ஜோம்பிக்கு தன்னுடைய கடந்த காலத்தை கண்டுபிடிக்க முடிந்ததா இல்லையா என்பதை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்கள்.


ஜோம்பி, காங் மின்கோ என இரண்டு பாத்திரத்திலும் நடித்த நடிகர் நன்றாக நடித்திருக்கிறார். தன்னை மனிதனாக மாற்றிக்கொள்ள முயல்வது, தவிர்க்கமுடியாத அகோர பசியால் தவிப்பது, பிபி க்ரீமை வாங்கி பூசிக்கொண்டே இருப்பது, மனிதர்களை, நாயை பூனையை பார்க்கும்போது கூட சாப்பிடும் வேட்கையில் எச்சிலை விழுங்கியபடி தவிப்பது என நன்றாக தன்னை பாத்திரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.


இரக்கமும், தயாள குணமும் கொண்டவராக காங் சன்ஜி பாத்திரம் உள்ளது. இறுதியில் ஜோம்பியை காதலிக்கும் பெண்ணாக மாறுகிறார். புரோபயாடிக் பானங்களை விற்கும் சிவப்பு லிப்ஸ்டிக் பூசும் அக்கா, அவளின் குறும்பு மகன், ஜோம்பி படம் எடுத்து தோற்றுப்போன இயக்குநர் மாமா என வித்தியாசமான செட்டப் கொண்ட பின்னணி சுவாரசியமாக உள்ளது. காமெடிக்கு என வேர்ல்ட் கிங் டிடெக்டிவ் ஏஜென்சி ஆட்கள் இருவர் இருக்கிறார்கள்.


மனிதர்கள் தங்களின் சுயநலன்களுக்காக பிறரை எப்படி கவலைப்படாமல் பலி கொடுக்கிறார்கள் என தொடரில் இயக்குநர் காட்டியிருக்கிறார். ஒருகட்டத்தில் ஜோம்பி கூட மனிதர்களை சாப்பிடாமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் நிலையில், சுயநலமான மனிதர்கள் பிறரை அழிப்பதில் கவலையே கொள்வதில்லை. அதனால், பார்வையாளர்கள் ஜோம்பியை விரும்பத் தொடங்குகிறார்கள்.


ஜோம்பி இரு வழக்குகளை எடுத்துக்கொண்டு அதைக் கண்டுபிடிக்கிறார். இதன் வழியாகவே பெரும்பாலான மர்மங்கள் வெளியே வந்துவிடுகின்றன. ஜோம்பியும் தான் யார் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார். ஆனால் இதில் பலவீனமாக இருப்பது, காவல்துறைதான். அவர்கள் எதையும் உருப்படியாக செய்வதில்லை. எந்த குற்றமும் செய்யாத நிலையில் ஜோம்பியை சந்தேகப்பட்டு அவரின் பின்னே சுற்றுகிறார்கள். நிறைய மனிதர்கள் காணாமல் போன சம்பவம் நடந்த இடத்தைக் கூட மிக தாமதமாகவே கண்டுபிடிக்கிறார்கள். பரிதாபம்.


ஏறத்தாழ கதையை நினைத்தது போலவே முடிக்கிறார்கள்.


கோமாளிமேடை டீம்

 

First episode date: 21 September 2020 (South Korea)
Final episode date: 27 October 2020
Executive producer: Ki Min-soo (KBS)
Genre: Comedy; Fantasy; Mystery
Hangul: 좀비탐정
Original language: Korean
 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்