வில்லனின் வீட்டிற்கு சென்று கடத்தி வரப்பட்ட காதலியை கல்யாணம் செய்யும் தைரிய நாயகன்!
சீதாராமுலு கல்யாணம் லங்காலோ
நிதின், ஹன்சிகா, சுமன், அலி, பிரம்மானந்தம்
கல்லூரியில் படிக்கும் நிதின், அவரை சிகரெட் பிடிக்காதே என்று சொல்லும் நாயகியால் ஈர்க்கப்பட்டு காதலிக்கிறார். காதல் செய்தவுடனே கல்யாணம் நடந்துவிட்டால் படத்தை குறும்படமாகவே முடிக்கவேண்டியது வரும் என காதலியின் அப்பா கிராமத்தில் பெரிய ரவுடி, அவருக்கு எதிரியாக ஒரு ரவுடிக்கூட்டம் இதற்கு இடையில் மாட்டிக்கொள்ளும் காதலர்கள் என கதையைக் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள்.
படத்தில் உருப்படியான விஷயம் பிரம்மானந்தம் மட்டுமே. அவரின் காமெடி மட்டுமே சற்று ஆறுதலாக உள்ளது.
சுமன் பெரிய ரவுடி. சுருட்டி பிடித்தபடி அவர் நிதினை கேட்பது, உன்னால் என் மகளை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியுமா, அப்படி முடிந்தால் பெண்ணைக் கட்டித்தருகிறேன் என்கிறார். உடனே நிதினும் முதுகில் மாட்டியுள்ள ரோஷன் பேக்கோடு வருங்கால மாமனாரின் ஆட்கள் நால்வரை உதைத்து மலைப்பாதையில் உருட்டிவிடுகிறார். பிறகுதான் சுமன் மனம் மாறி சூப்பர் செலக்ஷன் என தைரியம்கொள்கிறார். ஆனால் கர்மா ஈஸ் பூமராங் அல்லவா? எதிரிகள் மாப்பிள்ளையை விட இந்தமுறை மாமனாரை வகுந்துவிடுகிறார்கள். மகளை கடத்தி செல்கிறார்கள். அவர் வயிற்றில் பேண்டேஜோடு கிடக்கிறார். வருங்கால மருமகன், தனது மாமனாருக்காக தனது காதலியை மீட்க லங்கா என அடைமொழியோடு அழைக்கப்படும் இடத்திற்கு செல்கிறார். சண்டை போடவில்லை. சாதுரியமாக புத்திசாலித்தனமாக காதலியை மீட்கிறார். இதுதான் படத்தின் எரிச்சலூட்டும் பகுதி.
வில்லனை ராவணனாக இயக்குநர் காட்டுகிறார். அவரின் தவறு, விருப்பமின்றி நாயகியை கடத்தி வந்தது மட்டுமே. மற்றபடி அவரை வல்லுறவு செய்து தன்னுடைய குடும்பத்தில் சேர்க்க நினைக்கவில்லை. வல்லுறவு செய்யலாம் என அவரது கூட்டத்தினரே ஐடியா கொடுத்தும் கூட அதை ஏற்பதில்லை. மனைவியை அதற்கான மரியாதையோடு நடத்த வேண்டுமென நினைக்கிறார். அதை கடைசிவரையில் கடைபிடிக்கிறார். திருமண நிச்சயத்தில் நாயகனின் பெற்றோரை தனது பெற்றோராக கருதி உட்கார வைத்து மரியாதை செய்கிறார். முரட்டுத்தனமானவர் சரி. ஆனால் குயுக்தியான ஆள் கிடையாது. அவரது மகளை திருமணம் செய்துகொள்ள நேரடியாக சென்று கேட்கிறார். அந்தளவு துணிச்சலும் நேர்மையும் உள்ளவர்தான்.
இறுதியாக நாயகன், வில்லனை அடித்து உதைத்து இரும்புக்கம்பியில் தூக்கி வீசி கொன்றுவிட்டு அதே இடத்தில் மகிழ்ச்சியாக திருமணம் செய்துகொள்கிறது காதல்ஜோடி.
வன்முறையை கைவிடுவது பற்றிக்கூட ஒரு வார்த்தை பேசாத அறம் சார்ந்த காதல் நிதினுடையது. ஏறத்தாழ வருங்கால மாமனாரின் வாரிசாக மெல்ல மாறுகிறார். அவரும் கொலை செய்யத் தொடங்குகிறார். ஹன்சிகா இருக்கிறாரே, அவரும் அப்பா செய்வதை அறிந்திருக்கிறார். தன்னை பார்க்கவரும் அப்பாவை அதுபற்றி செல்லமாக கோபிக்கிறார். ரசிக்க முடியவில்லை.
அரசு, திரைப்படங்களில் முகேஷை வைத்து விளம்பரம் செய்தால் கூட அரசாங்கம் மீது யாருக்கும் பிரியம் அக்கறை வருவதில்லை. ஆனால் ஹன்சிகா புகையால் அவருக்கு மூச்சுதிணற, சிகரெட் பிடிக்காதே என நாயகனிடம் கூறுகிறார். நிதினுக்கு உடனே சிகரெட் மீது அலர்ஜி வந்துவிடுகிறது. கூடவே தன்மீது அக்கறையோடு புகை பிடிக்காதே என சொன்னதாக கற்பனை செய்து ஹன்சிகாவை ஸ்டாக்கிங் செய்யத் தொடங்குகிறார். உடல்ரீதியாக அத்துமீறல் செயல்களைக் கூட செய்கிறார். கல்லூரிக்குள் அவரின் இடுப்பைக் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கும் காட்சி உதாரணம். இயக்குநருக்கு கற்பனை வளம் கோதாவரியாக பெருகியிருக்கிறது.
கோமாளிமேடை டீம்
Directed by | Eshwar |
---|---|
Written by | Vikram Raj |
Starring | |
Cinematography | Malhar Bhatt Joshi |
Edited by | Kotagiri Venkateswara Rao |
Music by | Anup Rubens |
Release date |
|
Country | India |
Language | Telugu |
கருத்துகள்
கருத்துரையிடுக