சுயநலமான மனிதர்கள், சமூகம், அரசியல்வாதிகளால் சுரண்டப்படும் உள்நாட்டு அகதியின் வாழ்க்கை!

 

 

 

 


மனோரஞ்சன் பியாபாரி, எழுத்தாளர்

 

 

இன்ட்ரோகேட்டிங் மை சந்தால் லைஃப்

மனோரஞ்சன் பியாபாரி


சிறுவயதில் தான் பிறந்தவுடனே தனது நாக்கில் வைக்க வீட்டில் தேன் இல்லை என்று மனோரஞ்சன் கூறுகிறார். அப்படி இனிப்பு வைக்கப்படும் குழந்தைக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை. நூலில் இந்த பகுதியை படிப்பவர்களுக்கு இது பெரிதானதாக தோன்றாது. ஆனால் மனோரஞ்சனின் வாழ்க்கை மோசமாகவே அமைகிறது. இனிப்பு என்ற சுவையே உண்ணாதவன், அறியாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும்? இவரது வாழ்க்கையும் அப்படித்தான். இந்த சுயசரிதை பலரையும் அச்சப்படுத்தக்கூடியது. பீதியூட்டக்கூடியது. அந்தளவு சாதியால், துரோகத்தால் வஞ்சிக்கப்பட்ட மனிதர்.


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மனோரஞ்சன். இன்று அவர் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிவிட்டார். ஆனால் அவரது தொடக்க, மத்தியகால கட்ட வாழ்க்கை என்பது புழுத்த நாய் குறுக்கே போகாது என வசைபாடுவதைப் பற்றி தி.ஜா கூறுவார். அதைப்போலத்தான் உள்ளது. அந்தளவு நெருக்கடிகள். வறுமை, வேலை செய்து சம்பளம் கிடைக்காதது, ரயில்வே ஸ்டேஷனில் தூங்குவது, ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணப்படுவது, ஓரினச்சேர்க்கைக்கு பலவந்தமாக பயன்படுத்தப்படுவது, சந்தால் என்ற தாழ்ந்த சாதி என்பதால் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றப்படுவது, அரசியல் காரணங்களுக்காக கொலை செய்ய முயற்சிப்பது, சாதி காழ்ப்பால், அரசியல் சார்ந்து அடித்து உதைக்கப்படுவது, நக்சல் அமைப்பினர் காயமுற்றவரை கைவிடும் பகுதி என படிக்க படிக்க வலியும் வேதனையும் வாசகர்களுக்கு நெஞ்சில் திரண்டு பீதியாகிறது.

மனிதர்களின் அடிப்படையான குணம் பொறாமை, சுயநலம் என்று கூறுவார்கள். மனோரஞ்சன் தனது வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள் பலரும் வன்மமும் சுயநலனும் கொண்டவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அவரது வாழ்க்கை சற்றே மலர்ச்சி பெற்றதாக மாறுவது, எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியை சந்தித்த பிறகுதான். சிறையில் எழுத படிக்க கற்றவர், அதற்குப் பிறகு நூல்களை தேடி தேடி படிக்கிறார். மகாஸ்வேதா தேவியின் இதழில் எழுதுகிறார். மெல்ல புகழ் பெறுகிறார். இதனால் அவருக்கு பொருளாதார பயன்கள் உடனே கிடைக்கவில்லை. நிரந்தர வேலைக்காக அலைகிறார். இறுதியில் பள்ளியில் கழிவறைகளைக் கூட ஆறுமாதம் போல தூய்மை செய்கிறார். ஆனால் அதற்கு கூட சம்பளம் கிடைப்பதில்லை.


எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியின் அறிமுகம், மனைவி அனிதா வாழ்க்கைத்துணையாக ஏற்பது என சில விஷயங்கள் நடந்தபிறகுதான் மனோரஞ்சனின் வாழ்க்கை சற்றேனும் ஆசுவாசம் பெறுகிறது.

கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகள். அதிலும் சந்தால் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அரசு, மக்கள் என எங்குமே ஆதரவு கிடைக்கவில்லை. அவமானங்களும், சுரண்டல்களும்தான் நடக்கிறது. வங்கத்தில் தங்கியிருந்த முகாம்களில் மக்களின் வாழ்க்கை பற்றி விவரிக்கும் இடம் மிகுந்த வலியை ஏற்படுத்தக்கூடியது.


நூல் முழுக்க காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமது அரசியலுக்காக மக்களை எந்தளவு இக்கட்டில் தள்ளின என்பதைப் பற்றி சில இடங்களில் பகடியாக சில இடங்களில் வேதனையாகவும் விளக்கியிருக்கிறார். ஒரு தீவு ஒன்றில் மக்கள் தங்குவதற்காக செல்ல, அங்கு சென்ற காவல்துறை நிகழ்த்திய வன்முறை ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்றது என கூறி அந்த சம்பவத்தை விளக்கி எழுதியிருக்கிறார். பசியும் பட்டினியுமாக கிடந்த மக்களை அடித்து உதைத்து கொன்றும், பல நூறு பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கியும் காவல்துறை தனது எஜமானர்களுக்கு விசுவாச சேவை புரிந்திருக்கிறது.


சிபிஎம் என்ற கட்சியின் பெயர் எழுதிய சுவரில் கட்சி பெயரில் எல் என்ற எழுத்தை சேர்க்கிறார் மனோரஞ்சன். இதற்காக சிபிஎம் குண்டர்கள் அவரை கட்டி வைத்து உதைக்கிறார்கள் குற்றுயிராக கிடப்பவர் மெல்ல உயிர் மீள்கிறார். பிறகுதான் நக்சல் அமைப்பு அறிமுகம் கிடைக்கிறது. அதுதான் அவரது வாழ்க்கையை மாற்றுகிறது. அந்த கட்சியில் சேர்ந்து இயங்கி பின்னாளில் சிறை தண்டனை பெறுகிறார். சிறையில் எழுத படிக்க கற்கிறார். அதற்குப் பிறகு ஏராளமான நூல்களை வாசிக்கிறார். தனது வாழ்க்கையை வேறுவிதமாக அமைத்துக்கொள்கிறார். நூலை படித்தவர்களுக்கு எந்த மனிதர்கள் மீதும் நம்பிக்கை வருவது கடினம். நல்ல மனிதர்களே இல்லையா, மனோரஞ்சனுக்கு உதவி செய்யவில்லையா என்றால் முழுக்க இல்லை என்று கூறமுடியாது. ஒப்பீட்டளவில் அவரை ஏமாற்றியவர்களின் பட்டியலை பார்த்தால் உதவியவர்கள் மிக சொற்பம்.


உள்நாட்டில் ஆதரவற்ற அகதி. சாதியிலும் தாழ்ந்தவன் எனும்போது அவனை உடல், மனம், சமூகம் என பல்வேறு வகையில் மொத்த சமூகமே சுரண்ட முயல்கிறது. அதைப்பற்றிய விசாரணை என்று நூலைப்பற்றிய விமர்சனத்தை முன்வைக்கலாம்.

கோமாளிமேடை டீம்





கருத்துகள்