மனநல குறைபாடு கொண்ட தம்பியின் பெயரில் கொலைகளை செய்யும் போலீஸ் அதிகாரி அண்ணன்!

 




ஹரே ராம் - கல்யாண் ராம், பிரியாமணி





ஹரே ராம்

கல்யாண்ராம் 1,2, பிரியாமணி

இரு பிள்ளைகள். ஒருவன் மென்மையானவன். இன்னொருவன் பிறப்பாலே வன்முறை எண்ணம் கொண்டவன். வன்முறை என்பதற்காக சீரியல் கொலை செய்பவன் அல்ல. யாராவது அவனை தூண்டிவிட்டால் எரிச்சல் ஊட்டினால் அவர்களை சும்மா விடுவதில்லை. மாறுகை மாறுகால் வாங்கும் அளவுக்கு கோபம் கொண்டவனாக இருக்கிறான். மனநல குறைபாட்டை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம். அதுதான் படத்தின் பெரும் குறை.

ஹரி நிதானமானவன், ராம் வன்முறையான ஆள். அம்மாவுக்கு இரு பிள்ளைகளும் முக்கியம். எனவே, தனது இரட்டையர்களாக பிறந்தவர்களைக் காக்க தானே ராமைக் கூட்டிக்கொண்டு தனியாக செல்கிறாள். அவளது கணவர் ஹரியை வளர்க்கிறார். ராமை திட்டியதால் மனைவி பிரிந்துபோனாள் என மனம் கலங்கி உடல் நலம் கெட்டு இறக்கிறார்.  

நகரில் ஹரி உதவி கமிஷனராக உள்ளார். அங்கு சில நாட்களுக்கு முன்னர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டி வரும் பத்திரிகையாளர் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். அதை முதலில் தற்கொலை என அனுமானித்தாலும் ஹரி அது கொலை என்று கூறி சந்தேகங்களை அடுக்கிறார். அடுத்து, அரசியல்வாதியின் மருத்துவர் தம்பி ஒருவர் அவரது மருத்துவமனையிலேயே படுகொலையாகிறார். இதற்கு டாக்சி ஓட்டுநர் சாட்சியாகிறார். அவர் ஹரியை கொலைகாரன் என்கிறார். அப்போதுதான் ஹரியின் தம்பி ராம் பற்றி தெரிய வருகிறது.

இந்த நேரத்தில் வங்கியில் கடன் வசூல் பிரிவில் உள்ள பிரியாமணி, ஹரியை ஸ்டாக்கிங் செய்து காதலிக்கிறார். எதற்காம்? ஹரியின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக கடனை வசூலிக்கவாம். என்னே ராஜதந்திரம், இயக்குநருக்கு ஹேட்ஸ் ஆஃப்.

பின்னாளில்தான் அவர் சிபிஐ என்று தெரிய வந்து அந்த துறை மீது நம்பிக்கையே போகிறது. இப்படிப்பட்ட லூசு பெண்களையெல்லாம் அங்கே வைத்திருப்பார்களா என்ன?

நாயகி, ஹரி தான் கொலைகளை செய்கிறார் என்ற உண்மையைக் கண்டுபிடிக்கிறார். தந்திரமாக காதல் வலை வீசி பிடித்து, அவரை கைது செய்கிறார். ஆனால், இதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை. வெறும் வாய்பேச்சு வழியாக கொலைகளை செய்தேன் என ஹரி கூறுகிறார். இதை சிபிஐ அதிகாரி நம்புகிறார். அடச்சே என்ற காட்சி இது.

ஆனால் இறந்த மருத்துவரின் அரசியல்வாதி அண்ணன் கொன்றது ஹரி அல்ல ராம் எனும் அவனின் இரட்டைத் தம்பி என்று நம்புகிறார். கூடவே, டிவி சேனல் ஒன்றின் உரிமையாளரும் ஹரியை துவேஷிக்கிறார். கொல்ல நினைக்கிறார். இவர்களை ஹரி எப்படி பழிவாங்கினார் என்பதே கதை.

உண்மையில் ராம் உயிரோடு இருக்கிறாரா, அவருடைய வன்முறை எண்ணம் என்னவானது, அம்மாவின் நிலை என்ன, இரு கொலைகளுக்கான மூல காரணம் என்ன என்பதை சொல்கிறார்கள். அந்த திருப்பம் படத்தில் நன்றாக உள்ளது.

கண்ணில் லென்ஸ் மட்டுமே இரட்டையர்களை தனியாக பிரிக்கிறது என்பது பொருத்தமாக இல்லை. உடல்மொழியில் அதிக் வேறுபாடு இல்லை. எனவே, ராம் ஹரி என இருவருமே ஒரே மாதிரியே இருக்கிறார்கள்.

பிரமானந்தம், ரகு, வேணு காமெடி படத்தின் வேகத்திற்கு பெரும் தடை. அதிலும் பிரியாமணி காட்சிகள் எல்லாம் பொறுமையை சோதிக்கின்றன. அவரின் காதல் நாடகமும், பின்னாளில் அவர் ஹரியை காதலிப்பதாக சொல்வதும் இனி சங்கீதா வயசுக்கு வந்தா என்ன வராட்டா என்ன என்ற கவுண்டமணியின் வசனத்தை நினைவுபடுத்துகின்றன.

சிபிஐ லாக்கப் அறையில் இருந்து நாயன் ஹரி தப்பியதை இறுதி வரை கூறாமலேயே இருந்திருக்கலாம். அதை சொல்லி சிபிஐயை மஞ்ச மாக்கானாக மாற்றியிருக்கிறார்கள்.

கோமாளிமேடை டீம்

Release date: 18 July 2008 (India)
Music director: Mickey J Meyer

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்