மாஃபியா கூட்ட கொலையாளிக்கு கிடைக்கும் காதலும், அதை தக்க வைக்க செய்யும் போராட்டமும்! அந்தம் - ஆர்ஜிவி

 

 

 

 



 

 

 

 

 


அந்தம் 

telugu

இயக்கம் ஆர்ஜிவி

நாகார்ஜூனா, ஊர்மிளா மடோன்கர்


ஷெட்டி என்ற மாஃபியா தலைவரின் குழுவில் முக்கியமான ஆள், ராகவ். தலைவர் சொல்லும் ஆட்களை போட்டுத்தள்ளுவதோடு கடத்தல் வேலைகளை செய்து வருகிறான். எதிர்தரப்பில் உள்ள சங்கர் நாராயணன் என்பவரின் கூட்டத்தையே தனியாளாக நின்று அழிக்கிறான் ராகவ். இதனால் காவல்துறையில் உள்ள கிருஷ்ணா என்ற கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர், ராகவை கைதுசெய்ய முயல்கிறார். இந்த நேரத்தில் ராகவிற்கு கிருஷ்ணாவின் தங்கை பாவனா மீது காதல் உருவாகிறது. இதன் விளைவுகள் என்னவாயின என்பதே கதை.

இதே டெம்பிளேட்டை வைத்து பவன் கல்யாண் நடித்த பஞ்சா என்ற படத்தை விஷ்ணுவர்தன் என்ற இயக்குநர் இயக்கியிருக்கிறார். அந்த படத்தில் பவன் சற்று ஸ்டைலாக காட்டப்பட்டிருப்பார். மற்றபடிமூலக்கதை அந்தம் என்ற படத்தைப் போலவே இருக்கும். சில விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கும். நகலை விட்டுவிடுவோம். அசலைப் பார்ப்போம்.

ராகவ், ஒரு குடும்பத்தால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறான். ஆனால் ஒருமுறை நகை காணாமல் போக அவனது குடும்பமே காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து சித்திரவதை செய்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்களுடன் செல்லாமல் காவல் நிலையத்திற்கு வெளியே உட்கார்ந்திருப்பவனை ஷெட்டி ஆதரித்து தனக்காக வேலை செய்ய கூட்டிச் செல்கிறார். இருவருக்குமான உறவு என்பதை அப்பா, மகன் போலவே இருக்கிறது. இறுதிக்காட்சியில் ஷெட்டி சுடும்போது கூட ராகவ் அவரை சுடுவதில்லை.

''வாழ்க்கையில தேவைன்னு இருக்கிறவங்க பயப்படுவாங்க. எனக்கு பணம், பதவி அப்படினுன்னு எதுலயும் ஆசையில்லை'’ என ஒரு இடத்தில் ராகவ் பேசுவான். அதுகூட அவன் காதலியான பாவனாவிடம்தான். வேலையை செய்துமுடித்துவிட்டு தன்னுடைய வீட்டில் அமைதியாக உட்கார்ந்து மௌத் ஆர்கன் வாசிப்பதுதான் அவன் செய்யும் பொழுதுபோக்கு வேலை.

பாவனாவை சில ரௌடிகளிடம் இருந்து காப்பாற்றிய பிறகு ராகவின் வாழ்க்கை மாறுகிறது. ஒருவகையில் அந்த பெண்ணின் அன்பு, அவனுக்கு அவன் வறட்சியான வாழ்க்கைக்கு தேவையாக இருந்திருக்கலாம். அந்த அன்பிற்காக தனது அடையாளத்தை மறைத்து பெயரை சேகர் என்று கூறுகிறான். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவிற்கு ஆதரவாக உள்ள மேயரை ராகவ் கொல்லும்போதே படத்தின் முடிவு நிச்சயமாகிவிடுகிறது. கிருஷ்ணா, மாஃபியா ஆட்களுக்கு எதிரானவன். இரக்கமே காட்டாதவன்.

ராகவ் அகவயமானவன் . பாவனா, புறவயமானவள். இந்த தன்மைகள் ஈர்ப்பது போக, பாவனாவின் இயற்கை மீதான  உயிரினங்கள் மீதான காதலும் இரக்கமும் ராகவிற்கு தான் இத்தனை ஆண்டுகளாக எதை இழந்துவிட்டோம் என்பதை நினைவுபடுத்துகிறது. கொலை, கடத்தல் என வாழ்ந்ததில் அவன் இசை, பாடல், நடனம், மகிழ்ச்சி என்பதையே மறந்திருக்கிறான். பாவனா அதை நினைவுபடுத்துகிறாள். இறுதிக்காட்சியில் ''உன்னப் பார்க்கமுடியாதோன்னு பயமாக இருக்கு'’ என்று சொல்லி உயிரைவிடுகிறான். மனிதர்களின் சுயநலம், பொறாமை, பேராசை  ஆகிய உணர்வுகளையே பார்த்து வளர்ந்தவனுக்கு கண்களில் நிச்சலனமே இருக்கிறது. பயம் இல்லை. இது பாவனாவை தொடக்கத்தில் அச்சுறுத்துகிறது. ஆனாலும் அவனது மனதை அவள் மெல்ல புரிந்துகொள்கிறாள். ராகவ், அவளது நட்பை, உடனிருக்கும் நேரத்தை விரும்புகிறான். அந்த நேரம் அவள் யாரென்பதை தனது தலைவர் மூலம் அறியும்போதே, அவனது முடிவு தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.

பாவனா தான் அவனை காதலிப்பதை ராகவிற்கு சொல்கிறாள். உலகிற்கு வேண்டாதவனாக கருதப்பட்டவனை, சுயநலனிற்கென பயன்படுத்தி தூக்கி எறியப்பட்டவனுக்கு அது எப்படிப்பட்ட தருணமாக இருக்கும்? நாகார்ஜூனா அகவயமான உணர்வுகளை மனதிற்குள் கொண்ட மனிதராக நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் அவரது உணர்ச்சிகள் தவறுவதில்லை. கடைசி நேரத்தில் பாவனாவை பாதுகாக்க முயல்கிறான். இதற்கான தனது கூட்டத்தினரையே அழிக்கிறான். அந்த முயற்சியில் அவனும் இறந்துபோகிறான். ஒருவகையில் முதல்முறையாக சுயநலமில்லாத அன்பை மனப்பூர்வமாக தரிசித்தபடியே, நிம்மதியுடன் கரைகிறான்.

டெங் ஜோங்போ, சலீம் கௌஸ் என அனைவருமே அவரவருக்கான பாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தை சற்றேனும் கொண்டாட்டமாக மாற்றுவது பாவனா பாத்திரத்தில் நடித்துள்ள ஊர்மிளாதான். பறவைகளை ஆராய்ச்சி செய்யும் கல்லூரி மாணவியாக வருகிறார். பாடல்களை ஆர்டி பர்மன், மணிசர்மா உருவாக்கியிருக்கிறார்கள். அனைத்து பாடல்களுமே காட்சியாகவும், தனிப்பாடல்களாக கேட்கவுமே நன்றாக இருக்கின்றன.  

கோமாளிமேடை டீம்  

Release date: 11 September 1992 (India)
Director: Ram Gopal Varma
Cinematography: Teja

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்