பாசநேச நண்பர்களின் அடுத்த தலைமுறை வாரிசுகளின் காதல் கதை!

 









நுவ்வு லேக்கா நேனு லேனு

தெலுங்கு

தருண், ஆர்த்தி அகர்வால்

இயக்கம் காசி விஸ்வநாத்

இசை ஆர் பி பட்நாயக்

 

இரண்டு பாசநேசமான நண்பர்கள். ஒன்று சேர்ந்து வணிகம் செய்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணவேணி. இருவரும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இருவருக்குள்ளும் காதல் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை. அதை வெளியே சொல்லும்போது கிருஷ்ணவேணிக்கு இன்னொருவருடன் கல்யாணம் நிச்சயமாகிறது இறுதியாக அவர்கள் காதல் வென்றதா, ஒன்றாக சேர்ந்தார்களா என்பதே கதை.

ராதாகிருஷ்ணன், கிருஷ்ணவேணி என இருவரும் ஒன்றாக படிக்கிறார்கள். ஒருவரையொருவர் கிண்டல் செய்வதும், கேலி செய்வதுமாக இருக்கிறார்கள். ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இருக்க முடிவதில்லை. இதை கிருஷ்ணவேணியே முதலில் உணர்கிறாள். அவள்தான் தனது காதலை கூறுகிறாள். ராதாகிருஷ்ணனுக்கும் அவள் மீது காதல் இருக்கிறது. ஆனால் அதை அவன் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை.

அப்படி தீவிரமாக எடுத்துக்கொள்ள நினைக்கும்போது குடும்ப வணிகத்தில் பிரச்னை ஆகிறது. இதில் அவர்களுக்கு ஒருவர் உதவுகிறார். அதன் காரணமாக நன்றிக்கடன் சிக்கல்கள் உருவாகிறது. தனது காதலியை காதலை ராதாகிருஷ்ணன் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. அதை அவன் கண்ணீரோடு செய்வதோடு, கிருஷ்ணவேணியையும் எதற்காக அதை செய்தான் என கூறி விளக்குகிறான். ஆனால் அவளோ அதை ஏற்பதில்லை. இறுதியாக இருவருக்கும் மணமானதா இல்லையா என்பதே கதை.

எஸ்பி புரடக்‌ஷன் தயாரிப்பு படம். குடும்பம் சார்ந்த படம். எனவே, பெரிதாக எதிர்மறை பாத்திரங்களோ, விஷயங்களோ இல்லை. வில்லனும் கூட இறுதியாக திருந்திவிடுகிறார். என்ன பிரச்னை? ஒருவர் வணிகம் சார்ந்து செய்த உதவியை இன்னொருவர் தனது வாழ்க்கையை தியாகம் செய்து அடைப்பதுதான் சிக்கலாகிறது. உதவியைக் கேட்காமலேயே ஒருவர் தேடி வந்து செய்கிறார். அதேநேரம், நட்புக்கு அடையாளமாக தனது மகனுக்கு நண்பர்களில் ஒருவரின் மகளை  பெண் கேட்கிறார். அந்த பெண்ணோ, தனது பக்கத்து வீட்டு பையனுடனேயே காதலில் இருக்கிறாள். இதை அவள் எப்படி வெளிப்படுத்துகிறாள், காதலை காப்பாற்றிக்கொள்கிறாள் என்றெல்லாம் படத்தில் காட்டவில்லை.

பெற்றோரிடம் நட்பாக பழக கூடிய தன்மை ஆண், பெண் என நாயக, நாயகிக்கு இருந்தும் கூட அவர்கள் தங்கள் திருமண வாழ்க்கை பற்றி ஏன் வெளிப்படையாக பேசமாட்டேன்கிறார்கள்?

கோயிலுக்கு உடுத்தும் உடைகளில் கண்ணியம் தேவை என கிருஷ்ணவேணியிடம் கூறும் ராதாகிருஷ்ணன், வணிகம் சார்ந்து உதவி செய்தவர் பதிலுக்கு பெண் எடுக்க நினைக்கிறார் என்றதும் தனது காதலை ஏன் வெளிப்படுத்தி பேசவில்லை. வணிகம் வேறு, குடும்ப உறவு வேறு. அதை ஏன் அவர் பிரித்துப் பார்க்க மறுக்கிறார்?

பெரும்பாலான காட்சிகளை உள் அரங்குகளில் எடுத்திருக்கிறார்கள். யு சர்டிபிகேட் வாங்கிய படம். குடும்ப படம். அதற்காக படம் பார்ப்பவர்கள் பார்க்கலாம்.

கோமாளிமேடை டீம்

 

 

கருத்துகள்