விடுதலைப்புலிகளை கோரமான கொலையாளிகளாக காட்டும் பிரசாரப் படம்!
குற்றப்பத்திரிக்கை
இயக்கம் ஆர் கே செல்வமணி
ராம்கி, ரகுமான், ரோஜா, ரம்யா கிருஷ்ணன்
ஶ்ரீபெரும்புதூரில் நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையும், அதற்கு காரணமான விடுதலைப்புலிகள் பற்றிய விசாரணையும்தான் கதை.
படம் அரசாங்க பிரசாரப்படம் போலவே எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, படத்தில் ஒரே கோணமே காட்டப்பட்டிருக்கிறது. இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப்படுகிறார். அதற்கான திட்டத்தை எப்படி விடுதலைப்புலிகள் தீட்டினர், செயல்படுத்தினர். அதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரை எப்படி பயன்படுத்திக்கொண்டனர் என்பதைக் காட்டுகிறார்கள். கூடவே, அரசியல் படுகொலையோடு நிற்காமல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளையும் கூட கொல்ல நினைக்கும் கொலைவெறி கொண்டவர்களாக சித்திரிக்கிறார்கள். அங்குதான் மொத்த படத்தின் நோக்கமே வீழ்ந்துபோகிறது. பார்வையாளர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறது.
படம் பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் வழக்குகளை சந்தித்து வெளியாகியிருப்பதை டைட்டில் கார்டில் காட்டுகிறார்கள். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை புகைப்படமாக எடுத்து அதை படத்தில் புகைப்படக்காரரான லிவிங்ஸ்டன் எடுப்பதாக காட்டியிருக்கிறார்கள். அதை இயக்குநர் புதுமையானதாக நினைத்து செய்திருக்கிறார். நடந்த சம்பவத்தை திரும்ப உருவாக்குவதை ஒழுங்காக செய்தாலே அந்தக் காட்சி நன்றாக வந்திருக்கும்.
ராம்கி, ரகுமான் ஆகியோர் காவல்துறை விசாரணை சார்ந்து நகரும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் காதல் காட்சிகள் உண்டு. அதில் தேர்ச்சி பெறுபவர், ராம்கி மட்டுமே. படத்தின் தீவிரத்தை சற்று குறைக்கும் நோக்கத்தில் காதல் காட்சிகள் உள்ளதாக வைத்துக்கொள்ளலாம். ரகுமான், ரோஜா காதல் காட்சிகள் விரக்தி தருகின்றன. இவர்களின் காதலும், பிரிவுமே கூட வினோதமாக கடந்துசெல்கின்றன.
விடுதலைப்புலிகள் ராம்கியைக் கொல்ல அவரது மனைவியைக் கடத்துகிறார்கள், அவரது ஜீப்பில் வெடிகுண்டு நிரப்பிய கார் வைத்து மோதுகிறார்கள். இறுதியாக கடற்கரையில் உள்ள ராம்கி, ரகுமானைக் கொல்வதற்காக துப்பாக்கியுடன் ஒருவர் நின்று திரும்பி பார்வையாளர்களை கோபத்துடன் பார்க்கிறார். படம் அதோடு நிறைவடைகிறது. இயக்குநருக்கு படுகொலை மீது அருவெறுப்பு இருக்கலாம். அவர் கருத்தியல் ரீதியாக போராளிகளை வெறுக்கலாம். ஆனால், அந்த தரப்பின் வாதத்தையே முழுக்க மறுத்து திரைப்படத்தை ஒரு சார்பாகவே எடுத்திருக்கிறார். அதுதான் படத்தை முழுமையான படமாக ஆகாமல் தடுக்கிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக