நக்சலைட் காதலியைக் காப்பாற்றும் போலீஸ் காதலன்!
ஹீரோ 2008 - நிதின், பாவனா |
ஹீரோ
நிதின், பாவனா
எலன் மஸ்க் செவ்வாயை காலனியாக்க துடிக்கிறார் அல்லவா? அங்கு திரையிடப்பட வேண்டிய படம். படத்தில் அனைத்துமே மிகையாக நம்ப முடியாமல் உள்ளது. இது வேறு உலகம் ப்ரோ.
நிதினின் அப்பா போலீஸ் கமிஷனர். அவருக்கு தனது மகனை தனது துறையில் வேலையில் சேர்த்துவிடவேண்டுமென நினைக்கிறார். ஆனால் அதற்கு அவரது மனைவி சரளா எதிராக நிற்கிறார். மகன் சினிமா ஹீரோ ஆகவேண்டும் என்பது அவரின் ஆசை. மகனுக்கும் அதுதான் லட்சியம். இந்த நேரத்தில் நியாய உணர்வு கொண்டவர்கள் போலீஸ்காரர்களாக மாறலாம் என மாநில அரசு சட்டம் கொண்டு வருகிறது.
நிதினை பயிற்சிக்கு அப்பா அனுப்புகிறார். மகனும் வேண்டாவெறுப்பாக மூன்று மாதத்தை கடத்த அங்கு வருகிறார். மூன்று மாத காலத்தில் போலீஸ் அகாடமியில் நடக்கும் காதல், நட்பு, தேசப்பற்று இதர சமாச்சாரங்கள்தான் கதை.
''என்னை எதுக்காக காதலிக்கிற? என்னோட கண்ணு, மூக்கு, வாய், உதடு, கழுத்து பிடிக்குமா?'’ என காதலி கிருஷ்ணவேணி கேட்க, சட்டென நாயகன் ராதாகிருஷ்ணன் அவளின் நீலநிற இடுப்புச்சேலையை விலக்கி தொப்புளை கையால் வட்டம் போட்டு தன் விருப்பத்தை சொல்லுகிறார். அம்புட்டுத்தேன். இதுதாங்க படம். இது, படத்தில் வரும் குத்துப்பாட்டுக்கான முன்னோட்ட காட்சி. இதுதான் இயக்குநரின் காதல் உணர்வை அப்பட்டமாக வெளிக்காட்டும் காட்சி. இந்த காட்சிக்கு பாவனாவின் தொப்புளுக்கு பாடி டபுள் உண்டா என்று தெரியவில்லை. படம் தெலுங்காக இருந்தாலும் மலையாள நாயகி படம், பாடல்காட்சி என அனைத்திலும் தொப்புள், மார்பகங்கள் வெளித்தெரியாமல் வந்து நடித்துவிட்டு போகிறார். என்னே கடமை உணர்ச்சி!
பாவனாவுக்கு பதில் லபாக்கி என்ற பாத்திரத்தில் வரும் நடிகையை கவர்ச்சிக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். கொஞ்சமேனும் ஆசுவாசம் தருவது அந்த அம்மணிதான். படத்தின் தொடக்க காட்சியில் போலீஸ் அதிகாரியை கூலிப்படை ஆள் முடிக்கப்படாத கட்டுமானத்தின் மேற்பரப்பில் நின்று கத்தியால் குத்திக்கொல்கிறார். இறப்பவரின் கண்ணில் தேசியக்கொடி பறப்பதைக் காட்டுகிறார் இயக்குநர். இறுதிக்காட்சியிலும் கூட தேசியக்கொடி பறக்கிறது. ஆனால் எதற்கு என்றுதான் புரியவில்லை. ஏதோ குறியீடு போல.... இயக்குநர் மாரி செல்வராஜ்தான் இதற்கு பதில் சொல்ல சரியான ஆள்.
கவர்ச்சியை விட்டு கதையைப் பார்த்தால் எளிமைதான். அரசியல்வாதிகளை, அவர்களின் ஊழலை வெளிப்படுத்துவேன் என்று சொன்ன காவல்துறை அதிகாரி படுகொலையாகிறார். அவரை கொலை செய்தவனைக்கூட பிடித்துவிடுகிறார்கள். லாக்கப்பில் வைக்கப்படுபவனிடம் அதிகாரி விட்டுச்சென்ற ஊழல் கோப்பு உள்ளது. அதைப்பெற அரசியல்வாதி, கொலைகாரனை காப்பாற்றி உதவ வேண்டும் என்பதே இருதரப்பிற்குமான டீல். இவர்களுக்கு இடையில் போலீஸ் வருகிறது.
கொலைகாரன் கொன்ற வீடியோகாட்சி கமிஷனருக்கு கிடைக்கிறது. ஆனால் நேரடி சாட்சியம் தேவைப்படுகிறது. கொலையைப் பார்த்தவர் வேறு யாருமில்லை, பாந்தமாக நடிக்கும் நாயகி கிருஷ்ணவேணிதான். அவர் சாட்சி சொன்னால் குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்கும். ஆனால் அரசியல்வாதி பிரேம்குமார், ஊடக ஆட்களோடு கைகோத்துக்கொண்டு கிருஷ்ணவேணியை நக்சலைட் என வதந்தி பரப்புகிறார். இதனால் யாருக்கும் தெரியாமல் போலீஸ் அகாடமியில் பயிற்சி எடுத்து வருகிறார் கிருஷ்ணவேணி. அவரைப் பற்றிய நக்சலைட் என்ற செய்தி பரவலாக தெரிய வரும்போது விடுதியில் இருந்து யாரோ ஒருவரால் கடத்தப்படுகிறார். உண்மையில் கிருஷ்ணவேணியின் உண்மை அடையாளம் என்ன, தனது தொப்புளை அதீதமாக விரும்பும் நிதினை அவர் காதலித்தாரா, குற்றவாளிக்கு எதிராக சாட்சி சொல்ல முடிந்ததா, அவரைக் கடத்தியவர்கள் யார் என்பதெல்லாம் படத்தில் வரும் காட்சிகள். பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் படத்தைப் பார்க்கலாம். ஒன்றும் அதிர்ச்சியானவை நடப்பதில்லை.
நாகபாபு, கோவை சரளா காட்சிகளை காமெடி என்று சொன்னால், மாதவப்பெருமாள் சாட்சியாக நாம் ரத்தம் கக்கித்தான் சாக வேண்டும். படத்தில் அடுத்து, நீயா, நானா போல பொதுமக்கள், போலீஸ்காரர்கள் விவாதம் நடக்கிறது. அம்மம்மா! பார்க்கும் பார்வையாளர்களுக்கு வாயில் நுரை தள்ளாததுதான் குறை. அப்படியொரு அபத்த வாதங்கள். நிகழ்ச்சிக்கு நடுவர் உள்துறை அமைச்சர், கூடவே போலீஸ் கமிஷனர் அருகில் இருக்கிறார். இதில் எடுக்கும் முடிவுதான். வயது, உடல் தகுதி எல்லாம் அப்புறம். நீதி உணர்வே போலீசுக்கு முக்கியம் என்ற தீர்மானம். இப்படி கேலிக்கூத்தாக தொடங்கும் படம் கடைசி வரையில் அப்படியே பயணிக்கிறது. முடிகிறது. அதுவே பெரிய மகிழ்ச்சி.
படத்தின் தலைப்பு ஹீரோ. ஆனால் அப்படியான எந்த பாத்திரத்தையும் நாம் பார்க்கவே முடியவில்லை. பிரம்மானந்தம், போலீஸ் அகாடமி பயிற்சி அதிகாரிகள் இருவர் மட்டுமே படத்தில் தேறுகிறார்கள்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக