வில்லியிடம் இருந்து காதலியை மீட்கும் நாயகனின் போராட்டம்!

 











சகியா

தெலுங்கு

தருண், நவ்ஹீத் சைருஷி

 

கிராமத்தில் உள்ள சக்திவாய்ந்த பெண்மணியின் மகளை கூட்டி வர ஸ்விட்சர்லாந்து செல்லும் நாயகன், காதலில் விழுகிறார். பெண்மணி கூறியபடி அவரது மகளை கூட்டி வந்தபிறகுதான் தெரிகிறது. அந்தபெண்மணி, அவரது அம்மா கிடையாது. எதிரி குடும்பத்து பெண். பழிவாங்குதலுக்காக அவரை ஏமாற்றி தனது மகளென கூறி வரவைத்திருக்கிறார் என்று. இப்போது நாயகன் எப்படி அவரிடமிருந்து அந்த அப்பாவி பெண்ணை மீட்டு திருமணம் செய்கிறார் என்பதே கதை.

படத்தில் ஒரே ஒரு உருப்படியான விஷயம் ஆங்கில நடிகையான நவ்ஹீத் சைருஷிதான். அவரை படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள். மற்றபடி படத்தில் பாத்திரமாக சந்தனா என்று வருகிறார். அதில் பெரிய மாற்றமோ, ஆச்சரியமோ இல்லை. லூசுப்பெண் போல காட்டுகிறார்கள். துயரம். அதிலும் அவர் ஒரே மாதிரியான உடையில் படத்தில் பெரும்பாலான நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறார். எதற்கு என அவருக்கும் தெரிவதில்லை. நமக்கும் தெரியவில்லை.

ஹரி பாத்திரத்தில் தருண் நடித்திருக்கிறார். முதல் காட்சியில் தனது அண்ணன் பற்றி மாற்றிப் பேசி அவர் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள உதவுகிறார். ஆனால் அதற்குப் பிறகு இந்த புத்திசாலித்தனம் காணாமல் போகிறது. வில்லியான துர்காதேவி இழுத்த இழுப்பிற்கு செல்கிறார். அப்படித்தான் படம் நகர்கிறது.

ஸ்விட்சர்லாந்து காட்சிகளில் எந்த ஒரு லாஜிக்கும் இல்லை. மேஜிக்கும் இல்லை. குறைந்தபட்சம் பனிமலை முகடுகளைப் பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை.

 ஆந்திராவுக்கு வந்தபிறகுதான் கதையில் மாற்றங்கள் வருகிறது. கதை நகருகிறது என்ற உணர்வே பார்வையாளர்களுக்கு அப்போதுதான் வருகிறது. ஆனால் அப்போதும் கூட ஹரி, சந்தனா காதல் என்பது அழுத்தமான ஒன்றாக, அவர்களின் பிரிவு நம்மை வருத்துவதாக இல்லை. ஏனெனில், ஹரி சந்தனாவை ஸ்டாக்கிங் செய்வது தவிர ஸ்விஸில் வேறு எதுவும் செய்வதில்லை. அவர்களுக்கு இடையில் உணர்வுரீதியான எந்த பகிர்தலும் இல்லை. குறிப்பாக தங்களது சொந்த உறவுகள் பற்றிக்கூட பேசுவதில்லை. இந்த லட்சணத்தில் சந்தனா ஹரி பெயரை பச்சை குத்துவது என்பது என்ன மாதிரியான மனநிலை என புரியவில்லை.

எம்பி எம்எல்ஏ காவல்துறை என அனைத்தையும் தனது கையில் வைத்திருக்கும் துர்காதேவி, மகனுக்கு கல்யாணம் செய்யவேண்டுமெனில் சந்தனாவை எப்போதே கட்டி வைத்திருக்கலாம். ஆனால் அவர் எதற்கு காலம் தாழ்த்துகிறார்?

ரவுடியான துர்காதேவியின் மகனை கல்யாணம் செய்வதற்கு, சாதாரண மனிதர்களின் வீட்டுப்பெண்ணை, அதுவும் அடுத்தநாள் கல்யாணமாகும் பெண்ணை தூக்கி வந்து மணம் செய்ய முயன்று தோற்றுப்போகிறார். அவரது அந்தஸ்திற்கு பெண் பார்த்தால் எளிதாக கிடைக்குமே? எதற்கு யாரும் பெண் கொடுக்க மாட்டேன்கிறார்கள் என அங்கலாய்ப்பு, அதற்குப் பிறகு வன்மத்தை மனதில் வைத்து தொடர்கிறார் என்று புரிவதேயில்லை.

சந்தனா தள்ளிவிட்டு துர்காதேவியின் மகன்  முகம் கருகி அலங்கோலமாகிறது.  அந்த காரணத்திற்காகவே அவரை சந்தனாவுக்கு கல்யாணம் செய்துகொடுத்து அவரை வேதனைப்படுத்தவேண்டும் என துர்க்காதேவி சொல்கிறார். இதன் அர்த்தம், மகன் முகம் கொத்துக்கறி போல ஆகிவிட்டது என அவரே கூறுகிறாரா என்ன? அதை அசிங்கம் என வேறு வார்த்தைகளில் கூறுகிறார் என புரிந்துகொள்ளலாம்.

எனக்கென்னவோ பார்த்தால் கல்யாணம் செய்ய முடியாமல் துயரத்தில் இருப்பது துர்க்காதேவியின் மகன்தான் என்று தோன்றுகிறது. உள்ளூரில் பெண்ணைக் கொடுக்க மாட்டேன்கிறார்கள். அடுத்தாநாள் கல்யாணமாகும் பெண்ணை தூக்கி வந்தால் கூட அந்த பெண்ணே தற்கொலை செய்துகொண்டு இறக்கும் நிலை. அம்மாவின் வன்மத்திற்காக ஸ்விஸ் பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள காத்திருக்கிறார். 

துர்க்காதேவி, நாயகனை கொல்வதற்காக திலகமிடுபவர். பிறகு அதை மறந்துபோய்விடுகிறார் என்பதே பரிதாபம்.

 படத்தில் நாயகன், நாயகி தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் இல்லை. இந்த பாத்திரங்களும் அழுத்தமாக நம்மை பொருத்திக்கொள்வதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. தனி உலகில் வாழ்கிறார்கள். அரே ஏண்ட்ரா இதி?

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்