பணக்காரப் பெண்ணை எப்படியேனும் கல்யாணம் செய்துவிட்டாலே வாழ்க்கை ஈஸி!

 








அதிருஷ்டம்

இயக்கம் சேகர் சூரி

இசை தினா

எம் ஏ  தத்துவம் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் நாயகன் ஒருநாள் ஜோதிடம் பார்க்கிறார். அதில், அவருக்கு கல்யாணம் நடந்தால் இப்போதிருக்கும் அரி பரியான அவதி வாழ்க்கை இருக்காது என கூறப்படுகிறது. ஆனால், வேலையில்லாமல் சுற்றும் நாயகனை யார் கல்யாணம் செய்துகொள்வார்கள்? இப்படியான நேரத்தில் நண்பனின் ஆலோசனை பேரில் இளவரசி சுயம்வரத்தில் கலந்துகொள்கிறார். அதற்குப் பிறகு அவரது வாழ்க்கை என்னவானது என்பதே கதை.

 இயக்குநர், கடினமான காலகட்டத்தில் தனது வாழ்க்கையையொட்டி இந்த கதையை யோசித்து எழுதியிருப்பார் போல. நம்பிக்கை, காதல், நட்பு என எந்த விஷயமும் படத்தில் ஒட்டவில்லை. ரீமாசென்னை கவர்ச்சிப் பாடல்களுக்கென பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிடுகிறார்கள். நாயகி கஜாலாவுக்கான பங்கு படத்தில் மிகவும் குறைவு. நாயகன் பகிரங்கமாக அவருக்கு பலாத்கார முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார். அதைக்கூட அவர் தனது அழகுக்கான அங்கீகாரமாக ஏற்று அவரைக் காதலித்து மணம் செய்துகொள்கிறார்.

 படத்தில் ஒரே சுவாரசியமான விஷயம், நாயகிக்கு பலாத்கார முத்தம் கொடுத்துவிட்டு நாயகன் தப்பி ஓடுவது, நெடுஞ்சாலைகளில் ரீமாசென்னுடன்(ஆஷா) அலைந்து திரியும் காட்சிகள் மட்டுமே.

ஜோதிடத்தை உண்மையென கூறி படம் முடிகிறது. உண்மையில் இயக்குநர் ஜோதிடத்தை இந்தளவு நம்புகிறாரா என்று தெரியவில்லை. ஆனால, அவரது உழைப்பை நம்பியிருந்தால் படம் இன்னும் கொஞ்சம் நன்றாக வந்திருக்கும்.

தருண், வாடகை கொடுக்காமல் வீட்டில் தங்கியிருக்கிறார். ஓனர் பிரம்மானந்தம் வருகையில் நேக்காக தப்பி ஓடுகிறார். எனவே, அவரைப் பிடித்து வாடகைப்பணத்தை வாங்க துரத்துகிறார். அடுத்து, தருண் நண்பர் சிபாரிசு மூலம் பாரில் மேனேஜராக வேலைக்கு சேர்கிறார். அங்கு வரும் ரவுடியின் தலையில் பீர் பாட்டிலை அடித்து உடைத்து பிரச்னையாக, ரவுடி குழுவும் அவரை அடிக்க தேடுகிறது. ராஜவம்ச நாயகிக்கு வலுக்கட்டாய முத்தம் கொடுத்ததால், காவல்துறை அதிகாரியும் தருணை தேடி வருகிறார். இவர்களால் படத்தின் காட்சிகள் வேகம் பிடித்து சாகச சண்டை படமாக மாறுகிறது.

பணக்கார பெண்ணைக் கல்யாணம் செய்தால் விதி மாறிவிடும் என சொல்லி நிறைவடைகிறது படம்.

கோமாளிமேடைடீம்

கருத்துகள்