சைக்காலஜி என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ஆன்மா அல்லது மனது என்று பொருள்.

 






அறிவியலில் பல்வேறு துறைகள், கிளைப்பிரிவுகள் உள்ளன. பெரும்பாலானவற்றை நாளிதழ்கள்,, மாத, வார இதழ்கள் வழியாக மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், அதிலும் சற்று உள்முகமானதாக மர்மமானதாக இருப்பது உளவியல் துறை. மர்மம் என்றால், புரியவில்லை என்றாலோ, புரிந்துகொள்ளும் திறன் இல்லை என்றாலோ மக்கள் அதைப்பற்றி என்ன சொல்லுவார்கள்? அதேதான். பல்வேறு மூடநம்பிக்கைகளை உருவாக்கி பரப்பினர்.

பொதுவாக உளவியல் பற்றி பொதுபுத்தியில் என்னவிதமான சித்திரங்கள் இருக்கும்? எலிகளைப் போல மூடிய லேபில் ஆய்வு செய்பவர்கள், பிறரை உட்கார வைத்து ஹிப்னாடிசம் செய்வார்கள் என்றுதானே? திரைப்படங்கள், டிவி தொடர்களைப் பார்த்து இப்படித்தான் மக்கள் புரிந்துகொண்டு வாழ்ந்தனர்.

சைக்காலஜி என்ற சொல்லே நிறைய குழப்பங்களை பயத்தை விளைவித்து வருகிறது. சைக்காலஜி என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ஆன்மா அல்லது மனது  என்று பொருள். லாஜி என்ற சொல்லுக்கு ஆய்வு என்று அர்த்தம். இதற்கு நிறைய பொருட்கள் உண்டு. ஆனால், பொதுவாக அறியப்படுவது மனம் மற்றும் அதன் குணநலன்கள் என்பவை பற்றி மட்டும்தான்.

தத்துவம், உடல்நலவியல் என இரண்டுக்கும் பாலமாகவே உளவியல்துறை அமைந்துள்ளது. உடல்நலவியல் என்பது, உடல் உறுப்புகளை, மூளையை, நரம்பு மண்டலத்தை விளக்குகிறது. உளவியல், மூளையில் நடைபெறும் செயல்பாடுகளை விளக்குகிறது. சிந்தனை, செயல்பாடு, பேச்சு, குணம் ஆகியவை எப்படி உருவாகிறது என்று கூறுகிறது. சுருக்கமாக கூறவேண்டுமெனில் நமது மனம் எப்படி இயங்குகிறது என்பதை விவரிக்கிறது.

அறிவியலும், அறிவியல் செயல்பாடுகளும் தத்துவங்களிலிருந்து உருவானவைதான். இதில் சற்று தாமதமான வளர்ச்சியை அடைந்தது உளவியல்துறை. தன்னுணர்வு நிலை, கோணம், நினைவு ஆகியவற்றின் அடிப்படையில் தத்துவ நிலையில் இருந்து மெல்ல அறிவியல் செயல்பாடுகளுக்குள் வந்தது.அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தத்துவத்தின் ஒரு பகுதியாகவே உளவியல் துறை இருந்தது. ஜெர்மனியில் அறிவியல் செயல்பாடுகளை செய்யுமளவுக்கு உளவியலில் நிலைமை மாறினாலும் முழுமையாக நிலைமை மாற பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதிவரையிலான காலம் தேவைப்பட்டது. பிறகுதான் உளவியல் துறை தனக்கான தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றது.   

1879ஆம் ஆண்டு வில்ஹெம் வுண்ட் என்பவர் லெய்ப்ஸிக் பல்கலைக்கழகத்தில் எக்ஸ்ப்ரிமென்டல் சைக்காலஜிக்கென தனி ஆய்வகத்தை அமைத்தார். அப்போதுதான் உளவியலை ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று பலரும் நம்பத் தொடங்கினர். இருபதாம் நூற்றாண்டில் உளவியல் துறை சிறப்பாக வளர்ச்சி பெற்றது. பழமையான பல்வேறு கோட்பாடுகள் இன்றும் கூட உளவியலில் நடைமுறையில் உள்ளது. இதன் கூடவே புதிய கண்டுபிடிப்புகளும் இணைந்து வருகின்றன.

தொடக்க காலத்தில் உளவியல், அதன் செயல்பாடுகள் என்பதற்கு பல்வேறு பொருட்கள் இருந்தன. மக்களும் அப்படித்தான் புரிந்துகொண்டனர். இதை சரி, தவறு என தனித்து கூறமுடியாது. அமெரிக்காவில் உளவியலுக்கான வேர் என்பது தத்துவத்தில் இருந்தது. தன்னுணர்வு, சுயம் என்பதை தத்துவம் கையாண்டு வந்தது. புலனுணர்வு கோணங்கள், நினைவு ஆகியவை ஆய்வகத்தில் வைத்து கணிக்கப்பட்டன. உளவியலாளர் ஹெர்மன் எபிங்ஹாஸ் ஆகியோர் தாங்கள் அறிந்த உளவியல் கருத்துகள் அடிப்படையில் ஆய்வுகளை செய்து வந்தனர். அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கூட அறிவியல் ஆய்வுகளை நடத்தி முடிவுகளைப் பெற ஏதுவாக தங்களது திட்டங்களை சீரமைத்தனர். 

pinterest

கருத்துகள்