காதலை, அன்பை சுரண்டலுக்கு பயன்படுத்தும் பெண்களை கொள்ளையடிக்கும் புத்திசாலி!
புத்திவந்தா
கன்னடப்படம்
உபேந்திரா, சலோனி, பூஜாகாந்தி, லஷ்மி
இயக்குநர் ராம்நாத்
இசை விஜய் ஆன்டணி
தமிழில் வந்த நான் அவன் இல்லை என்ற ஜீவன் நடித்த படத்தை கன்னடத்தில் உப்பி நடித்திருக்கிறார். ஐந்து பெண்களை ஏமாற்றி நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடிப்பதோடு, கல்யாணம் செய்து வைத்தால் காமத்தையும் அனுபவித்து எஸ்கேப் ஆகி, பிடிபட்டபிறகு நீதிமன்ற கூண்டில் கூட நான் அவன் அல்லா என்று சொல்லி வாதிடுவதே கதை.
படத்தின் கிளைமேக்சை மாற்றியிருக்கிறார்கள். அதுவும் நன்றாகவே இருக்கிறது. இறுதியாக நீதிபதியின் மகளான பூஜாகாந்தி, நாயகனை துணை சேர்கிறார். அது கொஞ்சம் காமிக்கலாக இருக்கிறது.
கல்யாண மன்னன், கல்யாண ராணி என பூந்தி பத்திரிகையில் விளக்கமாக எழுதுவார்களே அதுவே. பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம். கல்யாண மன்னன் எப்படி ஏமாற்றுகிறான் என்பதை விரிவாக காட்டுகிறார்கள். விஜய் ஆன்டணி பின்னணி இசையில் சோபிக்கவில்லை. ஆனால், தமிழ் பாடல்களை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள். பாடல்களை கன்னடத்தில் எழுதிவிட்டார்கள் என்பதால் ரசிப்பதில் பிரச்னை இல்லை.
வெளிப்பகட்டுக்கு மயங்கி பேராசைப்படும் பெண்கள். அவர்களை பஞ்சாமிர்தம் என்ற உபேந்திரா பயன்படுத்திக்கொள்கிறார். இதில் தெலுங்கு பாத்திரமான சமர சிம்ஹா ரெட்டி மட்டும் தெலுங்கு நாயகர்களை பகடி செய்வது போல இருக்கிறது.
கல்யாணம் செய்து ஏமாற்றுவது என்பது எவர்க்ரீன் மேட்டர். மூலக்கதை தமிழில் திரைப்படமாக வந்த ஜெமினிகணேசனின் நான் அவன் அல்லதான். கன்னடத்தில் இறுதியை மட்டும் மாற்றியிருக்கிறார்கள்.அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. தமிழில் நாயகன் பணத்தைத்தான் குறிவைக்கிறான். ஆனால், பெண்ணின் உடலும் கிடைத்தால் அந்த சுகத்தையும் விடுவதில்லை. சொகுசுதான் ஆடம்பரம்தான். கிடைக்கிறதே என அனுபவிக்கிறான். இந்த படத்தில் உபேந்திரா இரு பெண்களை திருமணம் செய்து டூயட் பாடுகிறார். அதாவது முதலிரவு நேரப்பாட்டு. அப்படி இருந்தும் பூஜா காந்தி பாத்திரம் எப்படி இறுதியாக நாயகனை கரம் பிடிக்கிறார், காதல் சனியன் எப்படி வருகிறது என்று புரிவதில்லை.
படத்தில் பஞ்சாமிருதம் பாத்திரம், பெண்களின் பேராசையைப் பற்றி சொன்னால் பரவாயில்லை. பெண் மாடலாக வேலை செய்வதை வேறு ஆபாசம் என்கிறார். அதை எப்படி புரிந்துகொள்வது? இங்கு யாருமே குறிப்பாக நாயகனை புகார் கூறியவர்கள் திருமண வாழ்க்கை பற்றிய எந்த அடிப்படையும் தெரியாமலேயே அதை செய்துகொள்கிறார்கள். காரணம், ஒரு பெண்ணுக்கு பணத்தின் வழியாக பாதுகாப்பு கிடைக்கிறது. அண்ணனுக்கு கட்டுமான ஒப்பந்தம் கிடைக்கிறது. இன்னொரு பெண்ணுக்கு சினிமா பைத்தியம். சினிமாவில் வருவது போல தன்னை மணப்பவன் நடந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறாள். இன்னொருத்திக்கு மணமகன் கடவுள் அவதாரமாக இருக்கவேண்டுமாம். அத்தனை பேருக்கும் நாயகன் வாயில் வாழைப்பழத்தை கொடுத்து தப்பிச் செல்கிறான்.
இந்தப்படம் ஏமாற்றினான் என்று நாயகனைக் குறிப்பிடுகிறது. ஆனால் உண்மையில் நீதிமன்றத்தில் நாயகனே கூறுகிறான். என்னை கைகாட்டி ஏமாத்துனான்னு சொல்றாங்களே இவங்களோட முட்டாள்தனத்திற்கு, இன்னொருத்தன் கூட வந்து ஏமாத்திட்டு போயிருவான் என்கிறான். பேராசைப்பட்டு ஏமாந்த அனைவருமே செல்வாக்கான பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். யாரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. திருமணமான பெண்களில் ஒரே ஒருவரிடம் மட்டும்தான் புகைப்படம் உள்ளது. மற்ற பெண்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. இந்த இடத்திலேயே வழக்கு தோற்றுவிடுகிறது. அப்புறம் எதற்கு, வழக்கு போட்டு அதை விசாரித்து, அதற்கு நாயகன் பதில் சொல்லி.. மிகவும் நீளமாக செல்கிறது. ஏதாவது ஆதாரங்கள் இருந்து அதை நாயகன் சாமர்த்தியமாக உடைப்பது போல இருந்திருந்தால் கதை இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கக்கூடும். முதல் வழக்கிலேயே நாயகன்தான் வெல்லப்போகிறான் என்று தெரிந்துவிடுகிறது. அப்புறம் என்ன இருக்கிறது? படத்தின் சில இடங்களில் தமிழின் ரீமேக்கா, அல்லது அதை கேலி கிண்டல் செய்து எடுத்திருக்கிறார்களா என்று கூட சந்தேகம் வருகிறது. உப்பியின் நடிப்பு அப்படி இருக்கிறது.
அன்பு, பாசம், திருமணம், கடவுள் பக்தி என்ற பெயரில் ஒருவனை எப்படி வேண்டுமானாலும் சுரண்ட முடிகிறது என்பது இன்றைக்கும் திகைப்பை ஏற்படுத்துகிறது. காதல், திருமணம் என்றால் உண்மையில் என்ன, சுரண்டலுக்கு மற்றொரு பெயரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக