வெப்டூனிலுள்ள இரண்டு சுவாரசியமான காமிக்ஸ் கதைகள்.....

 

 





 அப்சொல்யூட் ரெய்ன்
வெப்டூன்.காம்
காமிக்ஸ்

பழங்களை விற்கும் வணிகரின் மகன்தான் நாயகன். இஞ்சியோன் ஜியோக். தொடக்க காட்சியிலேயே பரபரப்பை பற்ற வைக்கிறார்கள். ஒரு வணிகரின் கைகளை வெட்டிவிட்டு, அவரின் சொத்துக்களை கொள்ளையிட்டு போனவனை, ஒழித்துக்கட்ட சில ஆட்களை அனுப்புகிறார்கள். நாயகனை கொல்ல கூலிக்கொலைகாரன் வருகிறான். அவன் பல்வேறு இடங்களில் விசாரிக்க, அதன் வழியாக கதை நகர்கிறது. அவன் பெண்களை விரும்பும் லோபி, எளியோருக்கு இரங்குபவன், சூதாடி, குடிகாரன் என நிறைய விஷயங்கள் சொல்லப்ப்படுகிறது. இறுதியாக நாயகன் தங்கியுள்ள இடத்திற்கு கூலி கொலைகாரன் செல்லும்போது, அவனை மூன்று வீரர்கள் தாக்கி கொல்கிறார்கள். அவர்கள் மூவருமே மாபெரும் வீரர்கள். அவர் எதற்கு நாயகனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே கூலி கொலைகாரன் செத்துப்போகிறான்.

அடுத்து நாயகிக்கான அறிமுகம். வாள் இனக்குழுவின் தலைவராக இருப்பவரின் மகள், வாள் பயி்ற்சி செய்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் முன்னேற முடியவில்லை. அவர்களது இனக்குழுவை விட வலிமையாக உள்ள இன்னொரு இனக்குழுவைச் சேர்ந்தவன். நாயகியை மணம் செய்துகொள்ள முயற்சிக்கிறான். ஆனால் நாயகிக்கு அவனுடைய பெண் சபலம் தெரியும் என்பதால், அதை நிராகரிக்கிறாள், டிராகன், பீனிக்ஸ் போட்டிக்கு நாயகி தயார் செய்துகொண்டிருக்கிறாள். அதில் வெற்றி பெற்று தனது இனக்குழுவை புகழ்பெற்றதாக மாற்ற முனைகிறாள். அந்த சமயத்தில்தான் நாயன் ஜியோக், நாயகியை சந்திக்கிறான். நாயகிக்கு, நாயகனை பெரிதாக பிடிக்கவில்லை. அவனை சபலம் கொண்டவன் என நினைக்கிறாள். பிறகு அவள் உணவகத்திற்கு போகும்போது அங்கு, நாயகன் ஜியோக் முன்னமே அமர்ந்தே சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறான். அங்குதான், நாயகன் நாயகி என இருவருமே ஒன்றாக சேர்ந்து போட்டியில் பங்கேற்க முடிவு செய்கிறார்கள்.

நாயகன் ஜியோக்கிற்கு டிராகன் பீனிக்ஸ் போட்டி, ஹெவன்லி டிராகன் போட்டி என இருபோட்டிகளில் வெல்லும் லட்சியமிருக்கிறது. கூடுதலாக அவன் ஹூபெய்யை ஆள நினைக்கிறான். வெப்டூனில் அதிக அத்தியாயங்கள் இல்லை. படித்தவரை கதை சுவாரசியமாகவும், நாயகன் யார், அவனது பின்னணி பற்றி அறியும் ஆவலை தூண்டும் வகையில் கதையை எழுதியிருக்கிறார்கள்.

டாங் கிளான் எண்டோமோலஜிஸ்ட்
வெப்டூன்
பொதுவாக டாங் கிளான் என்ற இனக்குழுவைப் பற்றி நல்லவிதமாக கதைகள் எழுதப்பட்டதில்லை. நஞ்சை வைத்து ஆராய்ச்சி செய்பவர்கள், மருத்துவத்திற்கு புகழ்பெற்றவர்கள் என்று கூறுவதோடு சரி. இப்போது புதிதாக கதை எழுதுபவர்கள், அந்த இனக்குழு பற்றி தனியாகவே கதை எழுதுகிறார்கள். அது மகிழ்ச்சிக்குரியது. அந்த வகையில் இந்தக்கதை முக்கியமானது.

நவீன காலத்தில் உள்ள விலங்குகள், பூச்சிகளை ஆராய்பவன் திடீரென பாம்பு கடித்து தொன்மைக்காலத்திற்கு செல்கிறான். அங்கு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள வீட்டில் பூச்சிகளை கொண்டு வந்து வைத்து வளர்த்து வருகிறான். தற்காப்புக்கலை தெரியாது என்பதால், உணவுக்கு பாம்பு, ஓணான் என பிடித்து சாப்பிட்டு வருகிறான். அந்த நேரத்தில் டாங் இனக்குழு ஆட்கள் அத்தீவிற்கு வருகிறார்கள். அவனது வீட்டைப் பார்த்துவிட்டு தங்குவதற்கு இடம் கோருகிறார்கள். அவனுக்கு என்ன சொல்வது என்று தெரிவதில்லை. தான் தங்கிக்கொள்ளும் அறை தவிர்த்து பிற அறைகளை பயன்படுத்திக்கொள்ள சம்மதிக்கிறான்.

நாயகனைப் பொறுத்தவனை விலங்குகளை அவன் கொல்ல நினைப்பதில்லை. அவற்றை கொண்டு வந்து வளர்ந்து முட்டையிடச் செய்கிறான். அவற்றின் வளர்ச்சியை பார்த்து மகிழ்கிறான். அவ்வளவே அவன் செய்வது....டாங் இனக்குழு தலைவருக்கு, அந்த சிறுவன் அங்கே தனியாக வாழ்வது ஆச்சரியமாக உள்ளது. அவனிடம் பேச்சுக் கொடுக்கிறார். அதில் அவர் எதையும் தெரிந்துகொள்வதில்லை. பதிலாக தான் எதை தேடிவந்திருக்கிறோம் என்று கூறுகிறார். ஒரு விஷப்பூச்சி. அதாவது பூரான் போன்றது, சென்டிபீட் என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அதைக்கொன்று அதன் உடலிலுள்ள நஞ்சை எடுத்து அவரது மகளுக்கு கொடுத்தால், நோய் தீரும். நாயகன் சோரியங் அதற்கு உதவுகிறான். அந்த சென்டிபீட் எங்கே இருக்கும் என சொல்கிறான். கூடுதலாக, அதன் இடத்திற்கு சென்று சென்டிபீட் முட்டைகளை எடுத்து வந்துவிடுகிறான். அவற்றை தூய்மை செய்து வளர்ப்பதே எண்ணம். அந்த முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளியே வந்து அவனை தங்களது தாயாக நினைக்கத் தொடங்குகின்றன. விலங்குகள் பிறந்த உடனே கண்ணில் தெரியும் அசையும் விலங்கை தனது தாயாக கருதும்.

மூன்று பெண் சென்டிபீட் குஞ்சுகள் அவனது உடல் மீது ஊர்ந்துகொண்டே வளர்கி்ன்றன. அதை சோரியங் விலக்கவும் முடியவில்லை. அவை பிரியமாக அவனது உடலுடன் ஒட்டியபடியே உள்ளன. இந்த நிலையில் அந்த டாங் இனக்குழு தலைவருக்கு சென்டிபீட்டுடன் சண்டையிட்டு நஞ்சைப் பெற்றாலும் கை உடைந்து போகிறது. அவர் சோரியங்கை தேடி வருகிறார். நஞ்சை தனது தந்தையிடம் கொடுத்து மகளை அதாவது அவரின் பேத்தியைக் காப்பாற்ற விரையுமாறு கூறுகிறார்.

உதவி என்றால் இரண்டு மடங்கு, பகை என்றால் பத்து மடங்கு என டாங் இனக்குழு கொள்கைப்படி உதவி செய்த, சோரியங்கிற்கு நன்றி சொல்ல இனக்குழு தலைவர் வருகிறார். அப்போது அவனுடைய அறைக்குள் நுழைந்து பார்க்கும்போது, அவள் ஏராளமான விஷ ஜந்துகளை வளர்ப்பது அவருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. சில பிராணிகளை அவன் இனப்பெருக்கமும் செய்ய வைத்திருக்கிறான். உண்மையில் இப்படியொரு முயற்சியை டாங் இனக்குழுவில் கூட யாரும் செய்யவில்லையே என யோசிக்கிறார். இப்படியொரு திறமைசாலி நம்முடைய இனக்குழுவில் இருந்தால், விஷத்தை கூட பலமடங்கு புதிதாக அதிக மடங்கில் தயாரிக்க முடியுமே என தீர்மானம் செய்யத்தொடங்குகிறார்.

அவனை எப்படியாவது தனது இனக்குழுவிற்கு கூட்டிசெல்ல கேட்கலாம் என நினைக்கிறார். சோரியாங்கிற்கும் முதலி்ல் டாங் இனக்குழுவோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தொழில் செய்ய ஆசையிருக்கிறது. ஆனால், இனக்குழு தலைவரே அதை கூறும்போது என்ன சொல்வது, சரி என தொடக்கத்தில் சொல்லாமல் இருக்கிறான். கிராமத்தில் உள்ள மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தபிறகு டாங் இனக்குழுவில் சேர்வதாக கூறுகிறான்.

டாங் இனக்குழு தலைவருக்கு அவரது மகளை சோரியாங்கிற்கு மணம் செய்துகொடுத்து அதன் வழியாக பிள்ளை பிறந்தால், இனக்குழுவை ஆள வழிபிறக்கும் என்று ஆசை. அதை சொன்னாலும் சோரியாங் அதை பெரிதுபடுத்துவதில்லை. ஏனெனில் அவனுக்கு விலங்கு, பூச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சியே அனைத்தையும் விட முக்கியமானது. பத்து அதிக விஷம் கொண்ட பிராணிகளை பிடிப்பது பற்றியே யோசிக்கிறான்.

இக்கதை, பிறரை பழிவாங்குவது என்றில்லாமல் பூச்சி, வண்டுகளை பராமரிப்பது, அவற்றை வளர்ப்பது என செல்வது சற்று ஆறுதலாக உள்ளது. நவீன அறிவியல் அறிவோடு, தொன்மைக்கால நோய்களை அறிந்து சோரியாங் தீர்வுகளை கூறுவது முக்கியமான பகுதி.

கோமாளிமேடை குழு


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்