மக்கள் அதிகார அமைப்புகளில் அரசியல் வன்முறைக்கான இடம்!
அரசின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் மையப்பொருளில், அடக்குமுறையைப் பற்றி பேசிவிட்டோம். ஆனால் அதற்கு பதிலடியாக மக்கள் அதிகாரத்துவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி இன்னும் பேசவில்லை அல்லவா? அதைப்பற்றி இனி பேசுவோம்.
இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளாகவே போராட்டம் நடக்கிறது. அதில், சில தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தும் போயிருக்கிறார்கள். போராட்டங்களை ஒடுக்க,போராட்டக்காரர்களை இழிவுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை செய்கிறது. காவல்துறையை ஏவி விவசாயிகளை அடித்து உதைக்கிறது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசுகிறது. சாலையில் வாகனங்கள் வராமல் இருக்க ஆணிகளை பதிக்கிறது. வேலைகளை அமைக்கிறது. இத்தனைக்கும் விவசாயிகள் போராட்டம், சீனாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம் போன்ற கொரில்லா தாக்குதல் முறைகளைக் கொண்டதல்ல. அகிம்சை போராட்டத்திற்கு இத்தனை எதிர்ப்புகள், ஏளனங்கள், அடக்குமுறைகள். இப்படி அடிபட்டு, உதைபடும் விவசாயிகள் அனைவரும் பொறுமையாக இருப்பார்கள் என நம்ப முடியுமா?
காவல்துறை நவீன ஆயுதங்களை வைத்திருக்கலாம். ரஷ்ய, அமெரிக்க, பிரான்ஸ் நாட்டு ஆயுதங்கள் அவர்களுக்கு உதவக்கூடும். விவசாயிகள் எளிமையாக கற்கள், கழிகளை தங்கள் கையில் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அரசு இவர்களை தன் கையில் உள்ள ஊடக வலிமையை வைத்து தேச துரோகிகளாக கட்டமைக்கிறது. இத்தனைக்கும் விவசாயிகள் கேட்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்துவது பற்றிக்கூட எதையும் பேசாமல், கையிலுள்ள ராணுவ, காவல்துறை வலிமையை ஏவுகிற அரசின் மேல் எப்படி இளைஞர்களுக்கு நம்பிக்கை வரும்? பதிலடி கொடுப்பவர்களுக்கு தடுப்புக்காவல், தீவிரவாதி , பயங்கரவாதி, வெளிநாட்டு ஆதரவு சக்தி என பெயர் சூட்டுவதில் கைக்கூலி ஊடகங்கள் சலிப்பதில்லை.
மக்கள் அதிகாரத்துவர்கள் வன்முறையை வேண்டுமென்று கையில் எடுப்பதில்லை. அது அவர்களிடம் திணிக்கப்படுகிறது. இப்படியான வன்முறை தாக்குதல்களை அரசியல் களத்தில் பலரும் கைக்கொள்ள நேரிடுகிறது. அதை தவிர்ப்பது கடினமானதாகவே இருக்கிறது. பலரும் இந்த தலைப்பு வரும்போது, அதை எதற்கு நாம் பேசவேண்டும் என்பது போல முடிவை எடுத்துவிடுகிறார்கள். ஈரான், ஈராக், பாலஸ்தீனம் என அனைத்து நாடுகளிலும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக வன்முறை பதிலடி நடைபெற்றிருக்கிறது.
ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் என்றால் இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கூறலாம். அதன் தலைவர் பிரபாகரன், தான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை முற்றிலும் அறிந்தவராகவே இருந்தார். அதன் விளைவுகளை அவர் எதிர்கொண்டார். அதில் அவருக்கு லட்சிய நோக்கம் இருந்தது. தெளிவு இருந்தது. இதை நீங்கள் அறியவேண்டுமென்றால், அவர் இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு பிரபாகரன் அளித்த நேர்காணலை வாசித்தாலே போதும்.
வன்முறையை யாரும் வேண்டுமென்று கையில் எடுப்பதில்லை. முடிந்தவரை வன்முறையைத் தவிர்ப்பதே நல்லது. ஆனால், ஒருவர் இதை எல்லாம் அறிந்தும் கூட ஒருகட்டத்தில் இரும்புத்துண்டை கையில் எடுத்து போராட நினைக்கிறார். அது ஏன், அது எந்த நிலை என்பதை புரிந்துகொள்ள முயல்வோம். 1999ஆம் ஆண்டு உலக வர்த்தக கழகத்தின் முன்னே மக்கள் அதிகாரத்துவர அமைப்புகள் ஒன்று கூடி போராட்டம் நடத்தின. 2001ஆம் ஆண்டு, ஜி8 மாநாட்டுக்கு எதிராக போராட்டக்காரர்கள் போராடினர். அதில், காவல்துறையின் வன்முறையில் ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டார். அதோடு, காவல்துறை போராட்டக்காரர்கள் ஓய்வெடுத்த டியஸ் என்ற பள்ளியிலும் சோதனை செய்ய முயன்றதால் வன்முறை வெடித்தது.
1991ஆம் ஆண்டு அமெரிக்கா வளைகுடா போரில் ஈடுபட்டது. இதை எதிர்த்த போராட்டக்காரர்கள், போராட்டத்தின் போது வங்கிகள், கடைகள், உணவகங்கள், எரிபொருள் நிலையங்கள் என பல்வேறு சொத்துக்களையும் சேதப்படுத்தினர். போலீசாரோடும் கடுமையாக மோதினர். பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கினர். காவல்துறை மீது கற்களை வீசுவது என்பது நெடுங்காலமாக நடந்து வந்த போராட்ட உத்திகளில் ஒன்று. கார்ல் மார்க்ஸ் கூறிய மார்க்சிய சித்தாந்தங்களைக் கற்ற லெனின், லக்சம்பர்க் ஆகியோர் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதை குறிப்பிட்ட நிலப்பரப்பு சார்ந்த சூழல்தான் தீர்மானிக்கும். அகிம்சை போராட்டங்களில் லியோ டால்ஸ்டாயின் தத்துவங்களை அடிப்படையாக கொண்டவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை எப்படியான பலன்களைக் கொடுத்தது என்பது, அவர்கள் எதிர்கொள்ளும் எதிரியைப் பொறுத்தே அமையும்.
அகிம்சை, வன்முறை என இரு துருவங்கள் போன்ற கருத்துகள் அனைத்து மக்கள் அதிகாரத்துவ அமைப்புகளிலும் விவாதப்பொருளாக இருப்பதுண்டு. இதை அவ்வளவு எளிதாக தவிர்க்க முடியாது. போராட்டங்கள் மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள் பங்கேற்கும்போது, அகிம்சையில் ஆர்வம் கொண்டவர்கள் அமைதியாக கூடாரம் அமைத்து அதில் உட்கார்ந்து கோஷம் போடுவதோ, கொடி பிடிப்பதையோ செய்வார்கள். அதேசமயம், தீவிரமான செயல்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் கடைகளை, பெருநிறுவனங்களின் கதவு, ஜன்னல்களை அடித்து உடைப்பதை செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை நேரடியாக செயல்பட்டால்தான் பயன் கிடைக்கும் என நம்புகிறார்கள்.
உலக வர்த்தக கழகம் முன்பு ஒரு பிரிவு அகிம்சை போராட்டம் நடத்திக்கொண்டிருக்க, இன்னொரு பிரிவு அதே தெருவில் இருந்த பன்னாட்டு நிறுவனங்களை தேடி அடித்து நொறுக்கியது. காவல்துறையை நேரடியாக சந்திக்காமல், கடைகளுக்கு மட்டும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பின்னர், முதலாளித்துவத்தை எதிர்க்கும் நோக்கத்தில் தாக்குதல் நடைபெற்றதாக செயல்பாட்டாளர்கள் கூறினர். இப்படி முதலாளித்துவத்தை எதிர்க்கும் நோக்கில் கடைகளை அடித்து உடைப்பதை அடிப்படை கருத்தியலாகவே மக்கள் அதிகாரத்து அமைப்பினர் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அதிகாரத்துவ அமைப்புகளில் ஏராளமான வகை உண்டு. அதை நீங்கள் புரிந்துகொண்டால் எந்த குழப்பமும் இருக்காது. போருக்கு எதிர்ப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு என பல்வேறு விதமாக மையப்பொருள் மாறினாலும் போராட்ட வடிவத்தில் வன்முறை இருப்பது இயல்பானதுதான். மக்கள் அதிகாரத்துவ அமைப்புகளின் வரலாற்றில் வன்முறைக்கு முக்கிய இடமுண்டு.
கருத்துகள்
கருத்துரையிடுக