வடஇந்திய பிரதமரைக் காக்க உயிரை தியாகம் செய்ய முனையும் கமாண்டோ படை தலைவர்!

 

 

 

 



 

 

 அசோகா
தமிழ்
பிரேம்,அனுஶ்ரீ, ரகுவரன், ஆனந்தராஜ்

படத்தை தெலுங்கில் எடுத்து தமிழில் டப் செய்திருப்பார்களோ என சந்தேகத்தை உருவாக்குகிறது. பிரதமரை காரில் அழைத்துச் செல்லும்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அதில், அவர் சுடப்படுகிறார். பாதுகாப்பு அதிகாரி அசோகா, அவரை தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று பாதுகாக்கிறார். பிரதமரை கொல்ல இரு கூலி கொலைகாரர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். நாயகன் அசோகா, பிரதமரை பாதுகாத்து எதிரிகளை அழித்தாரா என்பதே கதை.

ஆங்கில திரைப்படங்களை மனதில் கொண்டு உருவாக்கியிருக்கிற படம். நோக்கமே ஒரு நல்ல படத்தை உருவாக்கிவிட முடியாது என்பதற்கு இப்படமும் சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழ்நாட்டில் பிரதமர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் காவல்துறையிலுள்ள ஐஜி, சதித்திட்டத்தில் தொடர்புள்ளவராக இருக்கிறார். அதனால், கமாண்டோ படையினர் மட்டுமே பிரதமரை பாதுகாக்கும் பணியைச் செய்கிறார்கள். காவல்துறையினர், தரைதளத்தில் மட்டுமே நின்று பணியாற்றுகிறார்கள். அசோகா, தமிழ்நாடு காவல்துறையை நம்புவதில்லை. சரிதான் அதற்கான காரணங்களும் இருக்கிறது.

கூலிக்கொலைகாரனை தொடக்கத்தில் பயங்கர பில்டப்போடு காட்டி, மெல்ல அவரின் பாத்திரத்தை பலவீனமாக்கி பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு என்ன நடக்குமோ அதை செய்து காட்டுகிறார்கள். படத்தில் நாயகத்துதியும், கமாண்டோக்களின் தியாகமும் தூக்கலாக உள்ளது. அதிலும் நாயகி பாத்திரம் இருக்கிறதே, அதை எதற்கு வைத்தார்கள் என்றே தெரியவில்லை. இறுதியில் வரும் திருப்புமுனைக் காட்சிக்காக அவரை படம் நெடுக சகித்துக்கொள்வது பெரும்பாடு. படம் நெடுக நாயகன் தானே வந்து பலரையும் காப்பாற்றுகிறார். ஏன், எதற்கு? அவர் காமாண்டோ படை தலைவர் சரி. தீவிரவாதிகளை தாக்கும் சூழலில் கூட அந்த நேரத்திற்கு ஏற்றபடி காமாண்டோக்கள் சண்டை போடலாமே? நாயகன் இல்லாத நிலையில், அத்தனை பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் நொடியில் எதிரிகளின் கையில் சிக்கி இறந்துபோகிறார்கள். அதுவும் பெண் தீவிரவாதி துப்பாக்கியில் சுடப்பட்டு சாவதெல்லாம், அடுத்து யார்,நீயா டிஷ்யூம் டிஷ்யூம் என வரிசையாக வந்து சாகிறார்கள்.
 
காதல் காட்சிகள் எல்லாம் கிடையாது. நாயகியான நர்ஸ், அசோகாவிடம் பேசும் உரையாடல்களை காதல் என கொள்ளவேண்டியதுதான். நகைச்சுவை இல்லாத குறையை ரோப் கட்டி நாயகன் படிக்கட்டில் இருந்து கீழே குதிப்பது, வெடிகுண்டை அகற்ற கட்டிடத்தின் வெளியே நாயகன் செய்யும் நடவடிக்கைகள் தீர்த்து வைக்கின்றன. கயித்த ஒழுங்கா புடிலே என கத்திக்கொண்டே குதிப்பது போல முகபாவம் உள்ளது.
அம்மா சென்டிமெண்ட் வேறு. சகிக்கமுடியலடா சாமி.

ரகுவரன், ஆனந்தராஜ் என இரு நடிகர்களை ஒரு அறையில் அமரவைத்து வசனங்களை பேச வைத்து எடுத்துவிட்டார்கள். ரகுவரன், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத தலைவர், ஆனந்தராஜ், இந்தியாவின் துணை பிரதமர். ரகுவரன், ஆனந்தராஜை எடுத்து வளர்த்து இந்திய அரசியலை பழக்குகிறார். அதற்கான நன்றிக்கடனாக வட இந்தியரான பிரதமரை கொல்ல ஆனந்தராஜ் ஏற்பாடு செய்கிறார். அப்போதும் கூட அவருக்கு நாட்டை பாகிஸ்தானுக்கு ஆதரவாக ராணுவ ஆட்சிக்கு கொண்டு செல்லும் திட்டமில்லை. இறுதியாக வசனம் வழியாக அவரை முஸ்லீம் என்று கூறிவிடுகிறார்கள்.

முஸ்லீம், இந்திய தேசப்பற்றை நிரூபிக்க சாகவேண்டும். ஒரு வட இந்தியனைக் காப்பாற்ற தென்னிந்தியர்கள் உயிரை தியாகம் செய்யவேண்டும். திறமையாக பெண் சிஐடி அதிகாரியான நாயகியை கூட நாயகன் அசோகா, அழகாக இருக்காங்க என்று சொல்லுகிறார். இப்படியாக படம் நெடுக சொல்லும்,மறைமுகமாக சொல்லும் விஷயங்கள் நிறைய உள்ளன. படத்தில் எந்த இடத்திலும் நீங்கள் உணர்வுப்பூர்வமாக ஒன்றுபடவே முடியாது. பிரேமின் படத்தை விட சாய்குமார் நடித்த தெலுங்குபடத்தின் தமிழ்படத்தின் டப் படம் உணர்ச்சிகரமான காட்சிகளைக் கொண்டிருக்கும்.

நாயகனின் பாத்திரத்தை விட வேறு எந்த பாத்திரமும் நன்றாக இருந்துவிடக்கூடாது என்ற கவனத்தில் இயக்குநர் இயங்கியிருக்கிறார்.

இன்றைக்கு வலதுசாரி மதவாத கட்சிகள் காசு கொடுத்து எடுக்கும் மதவாத, தேசியவாத திரைப்படங்களுக்கு போட்டி ஏற்படுத்தக்கூடிய படம்.  தியாகமே உன்னை உயர்த்தும் என அபத்தமான சண்டைக்காட்சிகள் வழியாக சொல்ல முயல்கிறார்கள்.
கோமாளிமேடை குழு

 

 

Release date: February 1, 2008 (India)
Directors: Prem Menon, Prem
Music composed by: Sabesh-Murali
Producer: Indira Prem
Screenplay: Prem Menon
Language: Tamil

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்