மருந்து = நஞ்சு ஹோமியோபதி மருத்துவம் பற்றிய அனுபவங்கள்
மருந்து = நஞ்சு
ஹோமியோபதி மருத்துவம் பற்றிய அனுபவங்கள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஹோமியோபதி மருத்துவம் புழக்கத்தில் உள்ளது. ஒப்புநோக்கில், தெற்கை விட வடக்கில் ஹோமியோ மருத்துவர்கள் அதிகம். இதற்கு காரணம், ஆங்கில மருத்துவர்கள் அங்கு குறைவு. அவர்களை ஏனோ அரசு சரியான சம்பளத்தில் நியமனம் செய்யவில்லை. அரசின் அடிப்படை நோக்கமே அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதுதானே? மக்களுக்கு உதவ வேண்டும் என்பது அவசியமா என்ன? நாட்டின் ஆட்சித்தலைவரே போலி அறிவியலை மனமுவந்து ஊக்குவிக்கும்போது, அலோபதி பின்தங்குவதில் ஆச்சரியமென்ன?
சமுதாய மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் ஒன்றிய அரசு கொடுக்கும் நிதி குறைந்துவிட்டது. எனவே, தமிழ்நாடு அரசு மட்டுமே நிதி கொடுத்து குறைந்த மருத்துவர்களை வைத்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சிகிச்சை செய்கிறார்கள். அடிப்படை தேவைகளுக்கான நிதியை கோவில்களைகட்ட, சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களை இடிக்க, மதக்கலவரங்கள் செய்ய வடக்கு தேசம் பயன்படுத்துகிறது. அதேபோக்கு, தெற்கிலும் தொடங்க அச்சாரம் ஆந்திரத்தில் போடப்பட்டுள்ளது. அடிப்படையாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, மக்களின் கல்வி, மருத்துவம், உறைவிடம், தொழில் முனைவு ஆகியவற்றுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு குறைந்துகொண்டே வருகிறது. இதை முழுக்க மாநில அரசு ஈடுகட்டி நடத்துவது கடினம்.
இந்த நேரத்தில் ஹோமியோபதி மருத்துவம் மேலே எழுந்துவருகிறது. இந்த மருத்துவம், ஜெர்மனி நாட்டில் உருவானது. சாமுவேல் ஹானிமேன் என்ற மருத்துவரே, மூல கொள்கையை உருவாக்கினார். குறிப்பிட்ட நோய் உள்ளவருக்கு, அந்த நோய் உண்டாக்கிய காரணியை நீர்த்துப்போன வடிவில் கொடுத்தால், நோயாளியின் உடலில் இயற்கை நோய் எதிர்ப்புசக்தி தூண்டப்படும். அதன் விளைவாக நோய் குணமாகும். இதுதான் ஹோமியோபதியின் அடிப்படை. தடுப்பூசி மருந்துகளுக்கும் ஹோமியோபதிக்கும் உள்ளது ஒரே கொள்கைதான்.
ஒவ்வாமை பிரச்னை எனக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்தது. கையில் காசு இல்லாத நிலையில் சமுதாய மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை என அலைந்து திரிந்தேன். ஒன்று கிழக்கு திசையிலும், இன்னொன்று மேற்கு திசையிலும் இருந்தது. வேலையில்லாத காலம். சைக்கிளில் மருத்துவமனைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று வந்தேன். வக்கத்தவர்களுக்கான மருத்துவமனை அரசு மருத்துவமனை என கூறுவார்கள். குரூரமான உண்மை. எந்தவொரு அர்ப்பணிப்பும், நோயாளியின் நோயை புரிந்துகொண்டு சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாத மருத்துவர்கள்தான் சித்த பிரிவில் இருந்தனர். கொடுத்த மருந்துகளும் கூட தரமில்லாதவை. அந்த மருந்துகளை தயாரித்து சுயமாக விற்கும் நிறுவனம், பெரியார் பிறந்த மண்ணைச் சேர்ந்தது. அவர்களின் கடையில் காசுகொடுத்து வாங்கும்போது தரமாக உள்ள மருந்து, அரசின் ஒப்பந்தப்படி வழங்கப்படும்போது தரமற்றமாகிவிட்டது. அது என்ன மாயமோ, மந்திரமோ?
காலம்தான் ஒருவனுடைய நேர்மையை நிரூபிக்கும் ஒரே அம்சம் என சீன பழமொழி கூறுகிறது. உண்மைதான். பின்னாளில் வேலைக்கு சேர்ந்து கிடைத்த பணத்தில் காசுகொடுத்து தனியார் சித்த மருத்துவ நிறுவனம் கொடுத்த மருந்துகளை சாப்பிட்டேன். சற்று குணம் கிடைத்தது. ஆனால், மருந்துகள் ஒருமுறைக்கு இரண்டாயிரம் ரூபாய் என செலவு ஆனது. அந்த நேரம், தாயாருக்கான தைராய்டு சுரப்பி பிரச்னை உருவாக, அவருக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகளை வாங்கிக் கொடுக்கும் நிலை உருவானது. மாதம் சாப்பிடும் உணவுக்கான பொருட்செலவை விட மருத்துவ செலவு பலமடங்கு அதிகமாக வரத் தொடங்கியது. பிறகுதான். அண்டை வீட்டில் விசாரித்து, கால்நடை மருத்துவமனையில் உள்ள பணியாளர் வழியில் ஹோமியோபதி மருத்துவர் பற்றி தெரிந்தது.
அந்த மருத்துவரும் ஆரம்ப சுகாதார நிலையம் (நலவாழ்வுமையம்), வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வருபவர். அவரிடம் முதலில் தைராய்டு பிரச்னைக்காக தாயார் சென்றார். மருந்துகளை எழுதிக் கொடுத்தார் என்றாலும் தனியாக கிளினிக் வைத்து நடத்தியதால், அங்கு வாருங்கள் என கூறினார். ஆனால், அப்படி வந்து சிகிச்சை செய்யவேண்டுமானால், அரசு மருத்துவமனைக்கு வரவேண்டிய அவசியம் என்று என்று தாயார் கேட்டார். காசு சம்பாதிக்கும் வெறியில் அந்த ஹோமியோபதி மருத்துவர் இருந்தார். இடைஇடையே அரசு மருத்துவமனையில் தைராய்டு சோதனை இருந்தாலும், மாவட்டத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி அதில் கமிஷன் பார்க்கத் தொடங்கினார். அப்போதுதான், நானும் சித்த மருத்துவம் ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால், அதை தொடர காசு அதிகம் செலவாகிறது என்பதால் ஹோமியோபதிக்கு மாற முயன்றேன்.
அப்போது எனக்கு தெரிந்தவரை வழியில் சந்தித்தேன். அவராகவே காக்காய் வலிப்புக்கு ஹோமியோவில் எடுத்த சிகிச்சை, எப்படி வலியை அதிகரித்து துடிக்க வைத்தது என்று கூறினார். தற்போது அலோபதியில் மருந்துகளை சாப்பிட்டு வருவதாக கூறினார். அவர் கூறியது சற்று பீதியூட்டுவதாக இருந்தாலும். பொருளாதார சிக்கலில் வேறு வழியும் இல்லை. எனவே, ஹோமியோபதிக்கு மாறி என்ன விளைவு ஏற்படுகிறது என பார்க்க நினைத்தேன்.
இதோ இக்கட்டுரையை எழுதும் இந்த நேரம், ஒவ்வாமைக்காக சாப்பிட்ட மருந்துகளின் விளைவாக இரு கைகள், கால்கள் இரண்டுமே சற்று உணர்வுத் தன்மையை இழந்துவிட்டன. மரத்துப்போன தன்மையில் உள்ளன. இதைப் பற்றி மருத்துவரிடம் கூறியபோதும், அவருக்கு ஒன்றும் புரிபடவில்லை. அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. பிறகு நான் அக்கேள்வியை அவரிடம் கொண்டு செல்லவில்லை. அடிப்படையில் நோயாளிகள், மருத்துவரை நம்ப வேண்டும் என்பார்கள். கண்ணை மூடிக்கொண்டு அதை செய்யவேண்டியதில்லை. நீங்கள் என்ன உண்கிறீர்களோ, அதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள உங்களுக்கு உரிமையுண்டு. மருந்துகளைப் பற்றி நீங்களே இணையத்தில் தேடி அறிந்துகொள்ளலாம். சித்தம், ஹோமியோபதி என எந்த மருத்துவமுறை என்றாலும் அதைப்பற்றிய நூல்கள் தமிழ் மின்னூலகம், அல்லது வேறு வலைத்தளங்களில் ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் நூல்கள் உள்ளன.அவற்றை வாசித்து புரிந்துகொள்வது முக்கியம்.
இன்றைக்கு மருத்துவர்கள் நோயாளிகளிடம் தாங்கள் அளிக்கும் சிகிச்சை, நேரடிவிளைவு, பக்கவிளைவு பற்றி மனம் திறந்து பேசுவதில்லை. அரசு மருத்துவமனை என்றால், நோயாளியை மருத்துவர் முறையாக சோதிப்பதே கிடையாது. தனியாரில் லாபவெறி என்றால், அரசு மருத்துவமனைகளில் அக்கறையின்மை, அலட்சியம் பெருகிக்கிடக்கிறது. இன்றைக்கு மருத்துவமனைகள், படுக்கைவசதி, சொகுசு என விளம்பரம் செய்கிறார்களே ஒழிய, நல்ல அக்கறையுள்ள மருத்துவர்கள் உள்ளனர் என்று மறந்தும் கூறுவதில்லை. இந்த சூழலில் நோயாளிகள் தம்மைத் தாமே காத்துக்கொள்ள மருத்துவம் பற்றிய அடிப்படை அறிவை பெறுவது அவசியம்.
கருத்துகள்
கருத்துரையிடுக