ஓமியோபதி மருந்துகளை எப்படி சாப்பிடுவது?
ஹோமியோபதியில் நான் சிகிச்சைக்கு சென்றபோது, ஆறே மாதம் நோய் தீர்ந்துவிடும் என மருத்துவர் சூளுரைத்தார். இதை தன்னம்பிக்கை அல்லது அகங்காரம் என எப்படி வகைப்படுத்துவது என தெரியவில்லை. பரவாயில்லை. ஆனால், அவர் சொன்ன காலகட்டம் எல்லாம் எப்போதே தாண்டிவிட்டது. தற்பெருமை கொண்டவர்களிடம் அவர்களின் திறமையின்மை பற்றி சொல்லக்கூடாது. கோபம் கொண்டுவிடுவார்கள்.
அடிப்படை தத்துவத்திற்கு வருவோம். உங்களுக்கு ஒரு நோய் உள்ளது. அந்த நோயை எந்த காரணி உருவாக்குகிறதோ, அதை நீரைச் சேர்ந்து நீர்த்துப்போன வடிவமாக மாற்றி மருந்துகள் உருவாக்கப்படுகிறது. பிறகு, மருந்தின் வீரியத்தை காக்க சர்க்கரை, ஆல்கஹால் என இரண்டில் பதப்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகளிலும் அதன் தூய்மை, வீரியம் சார்ந்து மருந்துகளின் விலை பல்லாயிரம் வரை செல்கிறது.
குறிப்பாக தாய் திராவகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஆங்கிலத்தில் மதர் டிங்க்சர் என்று கூறலாம். தாய் திராவகத்தை மருத்துவர் உள்ளுக்கும் சாப்பிடச்சொல்வார். வெளியில் கூட தடவலாம். ஏதாகிலும் அதை மருத்துவரே பரிந்துரைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வழங்கும் மருந்துகள் மூன்று நாட்களுக்குத்தான் வழங்குவார்கள். அதற்குள் நோய் கட்டுப்படாதபோது திரும்ப வரவேண்டும். அதிக மருந்துகளை வழங்க கூடாது என விதிகள் உள்ளன. ஆனால், உள்ளூரில் இந்த விதிகளை மருத்துவர்கள் நடைமுறையில் கடைபிடிப்பதில்லை. மூன்று நாள் கொள்கையை கடைபிடித்தால், ஒரு மாதத்தில் நோயாளி எத்தனை முறை மருத்துவமனைக்கு வரவேண்டும் என்பதை கணக்கிட்டு பாருங்கள். நோயை தீர்த்துக்கொள்ளும் சமயம், சோறின்றி பட்டினியால் இறந்துபோயிருப்பார்.
தாய் திராவகத்தில் பதினைந்து துளி மருந்தை பீங்கானில் எடுத்து, சற்று நீர்விட்டு நீர்த்துப்போகச்செய்து அருந்தவேண்டும். மருத்துவர் பரிந்துரைத்தபடி, உணவுக்கு முன் என்றால் அரைமணிநேரத்திற்கு பிறகு உணவு உண்ணவேண்டும். உணவுக்குப்பிறகு மருந்து, மாத்திரைகளை உண்ணவேண்டுமா, அப்போதும் அரைமணி நேரம் தேவை.
ஹோமியோபதி மருந்துகளை உண்ணும்போது அதை உணவோடுசேர்த்து, தண்ணீரோடு சேர்த்து விழுங்க கூடாது. மாத்திரைகள் அனைத்துமே இனிப்பு தடவியவை. எனவே, அதை வாயில் இட்டு எச்சிலில் மெல்ல மூழ்கடித்து சப்பி தின்றால் போதும். இதிலும் கூட நீரின் தேவை குறைவு. சிறிய உருண்டை மருந்து என்றால், எட்டு அல்லது பத்து. பெரிய மாத்திரை என்றால் மூன்று போதுமானவை. மருந்துகளை வாயிலிட்டு சப்பி தின்னவேண்டும். அவசரமாக கடித்து விழுங்க கூடாது. நிதானம் முக்கியம்.
மருந்துகளை குளிர்ந்த இருட்டான இடத்தில் வைத்து பயன்படுத்தவேண்டும். மருந்துகளின் மீது வெயில் படக்கூடாது. மின்காந்த அலைகளும் தொடக்கூடாது. செல்போன், கணினி, மின்விளக்கு வெளிச்சம் என எதுவுமே மருந்துகள் இருக்கும் இடத்தில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் மருந்தை அப்புறப்படுத்தவேண்டும். மேற்சொன்ன அனைத்து அம்சங்களுமே மருந்தின் வீரியத்தை குறைப்பவை.
தாய் திராவகத்தை கண்ணாடி அல்லது பீங்கானில் ஊற்றி குடிக்கவேண்டும். வேறு எந்த உலோகப் பொருளையும் பயன்படுத்தக்கூடாது. ஹோமியோபதி மருந்து வீரியமாக இருந்தாலும் நோயாளியின் உடலில் தானாகவே வேலை செய்யாது. அவரின் நோய் எதிர்ப்புசக்தியை மருந்து தூண்டிவிடுகிறது. சிலசமயங்களில் நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்து வேலை செய்யத் தாமதம் ஆகும்.
இம்மருந்துகளை, மாத்திரை மூடப்பட்டுள்ள புட்டிகளின் மூடியில் எடுத்து அப்படியே வாயில் போட்டுக்கொள்வது நல்லது. முடிந்தவரை மாத்திரைகளை கையில் தொடாமல் இருப்பது நன்று. ஹோமியோபதி, ஒருவரின் உளவியலை கவனம் கொண்டு சிகிச்சை அளிக்கிறது. மனநலத்தை சீர்செய்தால், உடலிலுள்ள பிணிகள் தீர்ந்துவிடும் என்பதை நம்புகிறது. இதில், சித்த மருத்துவமும் ஒன்றாக இணைகிறது. சொரியாசிஸ் நோய்க்கு மன அழுத்தம் முக்கியக் காரணம் என்று கூறுகிறார்கள் அல்லவா?
எனக்கு முன்னர் செய்த வேலையில் கடுமையான மன அழுத்தம் இருந்தது. மனச்சிதைவு கொண்ட மனிதர்கள், என்னைச் சுற்றி இருந்தனர். அந்த சூழலில் இருந்து உறுதியான முடிவு எடுத்து வெளியே வந்தபிறகு எனக்கு மெல்ல உடல், மன நலம் தேறியது. எனக்கு சிகிச்சை அளித்த ஹோமியோபதி மருத்துவர் அரசு வேலையோடு, தனி கிளினிக்கையும் நடத்தி வந்தார். எனவே, அவரிடம் நோயைப் பற்றி கூறுவதே பெரிய வீரச்செயலாக மாறியது. ஒரு போன் அழைப்பை பேசிவிட்டு, அப்புறம் என கேட்பார். நான் நோயைப் பற்றி கூறும்போது அவருக்கு இன்னொரு அழைப்பு வந்துவிடும். ஒரு அழைப்பிற்கும், இன்னொரு அழைப்பிற்கும் இடையில்தான் நோயைப் பற்றி, அறிகுறிகள் பற்றி விளக்கவேண்டியதிருந்தது. மருந்துகளை எடுக்க செவிலியர் தேவை. செவிலியர் இருந்தால் மருந்துகளை எடுக்க ஒருமணிநேரமும், இல்லையென்றால் அரைமணி நேரம் தேவைப்பட்டது.
ஹோமியோபதி பற்றி தெளிவு கிடைக்க இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் நூல்களை நாடலாம்.
தாவரம், உலோகம், விலங்கு என பல்வேறு பொருட்களிலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மருந்து நோயைத் தீர்க்கிறது என்றால், சரி. அதேசமயம், அனைத்து மருந்துகளிலும் பக்கவிளைவு உண்டு, ஆங்கிலம், சித்தம், ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் எந்த மருத்துவமுறையும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
கருத்துகள்
கருத்துரையிடுக