சர்வாதிகார அரசுக்கு எதிரான போராட்டம்!
மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள், வன்முறையை கையாளக்கூடியதாக கருதுகின்றன. போராட்டத்தில் அதுவும் ஒருவகை பாணி. மற்றபடி யாராவது தனிநபர்களை படுகொலை செய்வதோ, காவல்துறையை தாக்கி வீழ்த்துவதை அவர்கள் ஊக்குவிப்பதில்லை. பெருநிறுவனங்களை தாக்குவது கூட முதலாளித்துவத்தை எதிர்க்கும் கருத்தை வெளிப்படுத்த மட்டுமே. அதிலுள்ள ஊழியர்களை, தாக்குவதோ கொல்வதோ நோக்கமல்ல.
மேலாதிக்கம் கொண்ட அரசுகள், தங்களை விமர்சிக்கும் தனிநபர்கள் அல்லது பத்திரிகை நிறுவனங்களை தாக்குவது, நெருப்பிட்டு எரிப்பது, இணைய இணைப்பை தடுப்பது என பல்வேறு வழிகளில் அச்சுறுத்தலை விடுக்கின்றன. ஆந்திரத்தில் ஆட்சிக்கு வந்த முன்னாள் நடிகர் தொடங்கிய கட்சி, தனது கட்சியை விமர்சித்த ஆங்கிலப் பத்திரிகையை குண்டர்கள் விட்டு தாக்கியது. அச்சு எந்திரங்களை அடித்து உடைத்தது. மேலதிகமாக, அங்குள்ள பெண் பணியாளர்களை மானபங்கம் செய்ய முயன்றது. இதுபோன்ற ஆட்களிடம் நீங்கள் அகிம்சை போராட்டம் சாத்தியம் என நினைக்கிறீர்களா என்ன? இதனால்தான் ரௌடிகளுக்கு புரியும் மொழியில் நாங்கள் பேசுவோம் என காவல்துறையினர் கூறுகிறார்கள். இதில் வெளிப்படும் செய்தி பற்றி சொல்பவருக்கும், கேட்பவருக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் தெளிவாக தெரியும். ஆனால், எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருப்பார்கள். ஒரு மேலாதிக்க அமைப்பு, அதற்குப் பழகிப்போன சமூகம் அப்படித்தான் இருக்கும்.
தனிநபராக இருக்கும்போது இருக்கும் கட்டுப்பாடு, கூட்டமாக இருக்கும்போது இருக்காது. வன்முறை ஒருவர் தொடங்கினாலும் கூட்டமாக இருக்கும்போது எளிதாக வன்முறை மூர்க்கம் பிறருக்கும் தீயாய் பரவுகிறது. இந்தியாவில் பாபர் மசூதியை இடித்த பெரும்பாலான ஆட்கள் சூத்திரர்கள். இங்கு சூத்திரர்கள் என்று குறிப்பிடுவதற்கு காரணம், வலதுசாரி இந்து தீவிரவாத இயக்கம் பார்ப்பனன் தவிர பிறரை அப்படித்தான் சுட்டுகிறது. பார்ப்பன குழந்தைகள் இயல், இசை, நாடகம் என பயிலும்போது, சூத்திரர்கள் கையில் துப்பாக்கி, கத்தி, கழி என ஆயுதங்களைக் கொடுத்து பயிற்சி அளிக்கிறார்கள். எதற்கு வழிபாட்டுத்தலங்களை இடிக்க, சிறுபான்மையினரை அடித்து உதைத்து படுகொலை செய்ய. இப்படியான வன்முறையை சிறுவயதில் இருந்தே கலாசாரம் என்று பெயர் சொல்லி வளர்த்தெடுத்து அதை ஊதி மதக்கலவரமாக்குகிறார்கள். கட்சி அதை அறுவடை செய்யும்போது, சூத்திரப் பிள்ளைகளை சிறையில் தள்ளப்பட்டிருப்பார்கள். அவர்களது வாழ்க்கை குற்றவாளியாகவே துண்டுப்பட்டுப் போகும்.
சமூக புரட்சி செயல்பாடுகளில் வன்முறை என்பதற்கு பெரிய ஆதரவு இருப்பதில்லை. மக்கள் அதிகாரத்தை வேறு ஒரு உலகம் என்று கூறினாலும் கூட வன்முறையை திட்டமிட்டு செயல்படுத்துவதை உறுதியாக மறுக்கிறார்கள். அதை யாரும் ஊக்கப்படுத்துவதில்லை. அரசு, அமைப்பு ரீதியான வன்முறையை அவர்கள் ஏற்பதில்லை. அகிம்சையான சமூகம் என்பது லட்சியக் கனவுதான். ஆனால், அதை அடையும் வழி முழுக்க அகிம்சையானதுதானே என்றால் இன்றைய சூழலில் எந்த உறுதியையும் கூற முடியாது. அரசியல் பாதை அப்படித்தான் இருக்கிறது. அகிம்சை பாதையில் நடக்கிறோம் என்பதற்காக மேலாதிக்க அரசு போடும் கொடூர சட்டங்களை ஏற்றுக்கொண்டு தலையை உயர்த்தாமல் மக்கள் வாழ முடியுமா என்ன? அது ஒட்டுமொத்த சமூகத்தையே பிளவுபடுத்தி அழித்துவிடும் அல்லவா?
விவசாயிகள் அகிம்சை முறையில் கொள்முதல் விலையை உயர்த்த போராடுகிறார்கள். விளையாட்டு வீராங்கனைகள் தங்கள் மீது, விளையாட்டு அமைப்பினர் செய்யும் பாலியல் அத்துமீறல்கள் மீது நடவடிக்கை கோரி போராடுகிறார்கள். இரண்டுமே அரசின் அடக்குமுறையால் நிலைகுலைகிறது. விவசாயிகளை, வீராங்கனைகளை அடித்து உதைத்து பலவந்தமாக கலைக்கிறார்கள். வழக்கு பதிவு செய்கிறார்கள். இதுதொடர்பாக செய்தி வெளியிடும் ஊடகங்களின் இணைய இணைப்பு துண்டிக்கப்படுகிறது. நாளிதழ், டிவி சேனல்கள் அலுவலகங்கள் மீது அமலாக்கத்துறை ஏவிவிடப்படுகிறது. இப்படியான சூழலில் கற்கள், பாட்டில்கள், பெட்ரோல் குண்டுகளை எறியாமல் அரசை எதிர்த்து போராட முடியுமா? வன்முறைக்கு எதிராக அகிம்சை போராட்டம் எடுபட்ட காலம் ஒன்றுண்டு. அதெல்லாம் மனசாட்சி மிக்கவர்களுக்கு எதிராக பயன்படலாம். எப்படியேனும் பொறுக்கித் தின்னலாம். அதற்கு எத்தனை பேர் குடியை அழித்தாலும் பரவாயில்லை என்பவர்களை என்ன செய்வது?
இத்தாலியில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைப் பார்ப்போம். மிலன் நகரில் உணவு விலைவாசி பற்றி கோபம் கொண்ட மக்கள் கூட்டம் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தியது. ஆனால், அரசர் உம்பெர்டோ, கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டார். இதன் விளைவாக, பல நூறு பேர் படுகொலையானார்கள். இதைப் பார்த்த மக்கள் அதிகாரத்துவ செயல்பாட்டாளரான கட்டானோ பிரெசி என்பவர், 1990ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதியன்று, அரசர் உம்பெர்டோவை துப்பாக்கியால் மூன்று முறை சுட்டார். காயமுற்ற உம்பெர்டோ, சிகிச்சை பயனின்றி இறந்துபோனார். உம்பெர்டோ அப்பாவி மக்களைக் கொன்றார். அதற்கு பிரெசி பழிவாங்கினார். காவல்துறையில் பிடிபட்ட பிரெசியை சிறையில் அடைத்தனர். அங்குள்ள சிறைக்காவலர்கள் அவரை அடித்து சித்திரவதை செய்து கொன்றனர்.
மக்கள் அதிகார செயல்பாட்டாளர்கள் பலர் தங்கள் பேச்சு, எழுத்து செயல்பாட்டிற்காக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கூட இந்துமத மூடநம்பிக்கை சர்வாதிகாரத்திற்கு எதிராக பேசியதற்காக பத்திரிகையாளர்கள் கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர் ஆகியோர் கொல்லப்பட்டனர். நாத்திதவாதிகள், அறிவியலாளர்கள் மத அடிப்படைவாதிகளால் கொல்லப்படுவது உலகிற்கு புதிது கிடையாது. பழிவாங்குதல் வழியாக அமைப்பாக லட்சியத்தை அடைந்துவிடலாம் என்றால் அப்படியெல்லாம் கிடையாது. தனிநபருக்கு பழிவாங்குதல் மகிழ்ச்சியை தருகிறது. அதை அவர் செய்கிறார்.
அமெரிக்கர்கள் உதவியால் தாலிபன் தீவிரவாத அமைப்பு உருவாகிறது. பின்லேடன் உருவாக்கப்படுகிறார். பின்னாளில் அவர் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தி வணிக கட்டுமானங்களைக் குலைக்கிறார். மேற்கு நாடுகள். தங்கள் நாடான ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து பலவந்தம் செய்வதை தாலிபன் ஏற்கவில்லை. எனவே, திட்டமிட்டு பல்வேறு தாக்குதல்களை செயல்படுத்துகிறார்கள். தங்களைப் பற்றி மக்களுக்கு தெரிவிக்கிறார்கள். மத அடிப்படைவாதிகளாக இருந்தாலும், தங்களுடைய தேசத்தில் தாங்களே மேலாதிக்கம் செய்ய நினைக்கிறார்கள். குறிப்பிட்ட அளவு வளரும் வரை பிறரின் உதவியைப் பெற்றாலும் தொடர்ச்சியான முதலாளி,வேலைக்காரன் என்ற வகையிலான உறவு அவர்களை யோசிக்க வைக்கிறது. இதன் விளைவாக, நிலப்பரப்பு ரீதியான அரசியல் மாற்றமடைகிறது. இந்த வகையில்தான் தாலிபன்கள், ஆப்கானிஸ்தானை மீண்டும் தங்கள் கைக்கு கொண்டு வந்தனர். அமெரிக்கா அங்கிருந்து வெளியேறியது.அதுவரையில் அங்கு பல்வேறு நாடுகள் செய்த முன்னேற்றப்பணிகள் அனைத்துமே நின்றுபோனது.
மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அனைத்து பலமும் பொருந்திய அரசுக்கு எதிராக புரட்சியாளர்கள் அமைதியான முறையில் போராடி உயிரை பறிகொடுக்க முடியுமா? இன்று நவீன உலகில் ஜனநாய தேர்தல் வழியாக சர்வாதிகார தலைவர்கள், அடிப்படைவாத நோக்கம் கொண்ட வலதுசாரி கட்சிகள் வெற்றி பெற்று வருகின்றன. இதன் பொருள், மக்கள் அதிகாரத்துவ போராட்டங்கள் மீண்டும் தொடங்கி நடைபெறும் என்பதுதான் நாம் அறிய வேண்டியது. அதற்கான அத்தனை சூழல்களும் மீண்டும் உருவாகி வருகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக