அரசியல் அழுக்குகளை அகற்ற தனிமனிதனாக நாயகன் செய்யும் கோணங்கித்தனமான வீரசாகசங்கள்!
துச்சாசனா
ஶ்ரீகாந்த், சஞ்சனா கல்ராணி
இயக்கம் பொசனி கிருஷ்ண முரளி
பொதுஜனம் என டைம்ஸ் ஆப் இந்தியாவில் வயசான மீசை வைத்த கோட்டு போட்ட உயர் நடுத்தரவர்க்க மனிதரை லக்ஷ்மண் வரைந்திருப்பார் அல்லவா? அதேபோல ஒரு பாத்திரம் உருவாகி வந்து, அரசியலை சீர்படுத்த த த்துபித்து கருத்துகளை கூறுவதுதான் படம்.
தலையில் தொப்பி, கருப்பு கோட், கருப்பு பேன்ட். இதுதான் நாயகனுடைய ஒரே உடை. நாயகன் பெயர் மகேஷ். இந்தப் பெயர் கூட படத்தில் இரண்டாவது மணிநேரத்தில் பார்வையாளர்களுக்கு தெரிய வருகிறது. முதல் காட்சியைப் பார்ப்போம். காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டரிடம் பேசுகிறார். அடுத்து, மருத்துவமனை சென்று கர்ப்பிணிகளை குழந்தைகளை கருக்கலைப்பு செய்யக்கூறுகிறார். அடுத்து அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று இறந்துபோன அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்ப சொல்கிறார். இதனால் காவல்துறை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. மனநல பிரச்னை என தீர்மானித்து நாயகனை மனநல மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். அங்கு நாயகன், மருத்துவர், செவிலியர்களை அடித்துப்போட்டுவிட்டு தப்பிக்கிறார். முதல்வரின் மகளைக் கடத்துகிறார். கூடவே டிவி9 தொலைக்காட்சி நிருபர் ஒருவரையும் சேர்த்து கடத்துகிறார். எதற்கு இந்த கடத்தல் என்று கேட்பதற்கு, என்னை சுதந்திரமாக திரிய அனுமதியுங்கள் என்கிறார். அப்படி அனுமதிக்கும்போது, அவர் செய்யும் தத்துபித்து தனங்களே படத்தை நகர்த்துகிறது.
இயக்குநர் பொசானி முரளிக்கு, மூளையில் நிறைய சிந்தனைகள் தோன்றுகின்றன. அதெல்லாம் தவறு கிடையாது. அதையெல்லாம் மக்களுக்கு சொல்லலாம். அதுதான் சரி என எப்படி முடிவு செய்தாரோ தெரியவில்லை. இத்தனைக்கும் சொந்த கைக்காசை போட்டு எடுத்திருக்கிறார்.
தமிழில் ஷங்கர் எப்படி கும்பகோண பார்ப்பனன் பார்வையை முன்வைப்பாரோ, இப்படத்தில் பொசானி முரளி வினோதமான கருத்துகளை கூறுகிறார். மந்திரிக்கு தனிப்பட்ட வாழ்க்கை கிடையாது. மக்களுக்கு எதுவோ அதுவேதான் அவருக்கும் என கூறுகிறார். தவறு செய்யும் இரு அமைச்சர்களை தன் கோட்டில் வைத்துள்ள பழைய செருப்பை வைத்தே அடிக்கிறார். அதை ஊடகங்கள் வேறு படம் பிடித்து ஒளிபரப்புகின்றன. ஷங்கரின் படத்தில் மக்கள் கருத்து இருக்கும். இப்படத்தில் மக்கள் கருத்து மட்டுமே முழுப்படத்தையும் நடத்துகிறது. டிவியில் காட்டும் அத்தனையையும் அரசியல் தலைவர்கள் தொடங்கி மக்கள் வரை நம்புகிறார்கள். எப்படி என்றே புரியவில்லை.
மதுபானக்கடை போலவே விபச்சார விடுதி ஒன்றை நாயகன் தொடங்கி அதை தொழில்துறை அமைச்சரை கொண்டு வந்து ரிப்பன் கட்டி தொடங்குகிறார். அங்கு ஒரு தொப்புள் டான்ஸ். அதில் அமைச்சரும் செம குத்து குத்துகிறார். பிறகு வெளியே வந்தால் மக்கள் அவர் மீது கல் எறிகிறார்கள். நாயகன், மது, பான்பராக் உயிரைக் கொல்லுமே ஏன் அதை தடுக்கவில்லை. விபச்சாரத்தை மட்டும் தடுக்கிறீர்கள் என முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியை கேட்கிறார்.
நாயகன் மகேஷ் விரைப்பாக நடப்பதால், கேள்விகள் கேட்பதால் அவர் புத்திசாலியெல்லாம் கிடையாது. இரண்டாவது மணி நேரத்தில் வரும் முன்கதையைக் கேட்டால் பரிதாபத்திற்கு பதில் நாயகன் மேல் கோபம்தான் வருகிறது. கலப்பட மது கடத்தி, தேர்தலுக்கு விநியோகம் செய்வதை ஊரே தெரிந்துகொண்டு அமைதியாக உள்ளது. ஆனால், நாயகன் அதை காவல்நிலையத்தில் புகாரை பதிவு செய்கிறான். வில்லன்களில் ஒருவன், நாயகன் மனைவி விலைமாது என புகார் கொடுக்கிறான். இரண்டையுமே ஆதாரம் கேட்டு இன்ஸ்பெக்டர் விசாரிப்பதில்லை. அப்பாவியான நாயகன் மனைவியை விபச்சாரி என தீர்மானித்து ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு காசு வாங்குகிறாய் என பெண் போலீஸ் அடித்து உதைத்து கேட்கிறார். பொருளாதார அறிக்கை ஏதேனும் தாக்கல் செய்யப்போகிறார்களா என்ன? இறுதியாக நாயகன் மனைவியை லாக்கப் தாக்குதலில் இருந்து மீட்க அமைச்சரின் மகன் மீது கொடுத்த கலப்பட மது புகாரை வாபஸ் வாங்கிக்கொள்கிறான். ஆனால் விபச்சார புகாரை வில்லன் வாபஸ் பெறுவதில்லை. பதிலாக நாயகன் விபச்சார குற்றச்சாட்டில் லாக்கப்பில் வைத்து அடித்து உதைக்கப்பட்ட மனைவியை ஜாமீன் எடுத்து கூட்டிச்செல்கிறார்.
அடுத்து, விபச்சாரி என நாயகனே கையெழுத்து போட்டு ஒப்புக்கொண்டான் அல்லவா? அமைச்சரின் மகன் நாயகனின் மனைவியை வல்லுறவு செய்ய காசு கொடுத்து அழைக்கிறான். இந்த தகராறில், நாயகனின் மனைவி வயிற்றி்ல் சுட்டுக் கொல்லப்படுகிறாள்.அதை புகார் செய்ய காவல்நிலையம் போனால், நாயகன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவன் இந்தியக்குடிமகன் இல்லை என்று பேசுகிறார்கள். இந்த ஒரு காட்சி மட்டுமல்ல படம் நெடுக அதீத நாடகத்துவம் நிறைந்துள்ளது.
படம் நிறைவுப்பகுதியில், நாயகன் மனைவியை விபச்சாரி என ஒப்புக்கொண்டு அவளை மீட்டானோ அதேபோல இன்னொரு காட்சி. டிவி நிருபரின் வயிற்றில் அமைச்சர் ஆட்கள் கடப்பாரையை இறக்குகிறார்கள். வெறும் கத்தி குத்து அல்ல மக்களே. அவளைக் காப்பாற்றி சிகிச்சை அளிப்பதற்காக, நாயகன் அதுவரை செய்த வீரதீர கேள்விகளை, அமைச்சர்களை செருப்பால் அடித்து நியாயம் கேட்டதை தவறு என ஒப்புக்கொள்வதாக காட்டுகிறார்கள். இதற்குள்ளாகவே அவன் வலது கையில் துப்பாக்கி காயம் ஆகிறது. இடது தொடையில் கோடரி வெட்டு விழுகிறது. இத்தனையும் தாண்டி நாயகன் கடப்பாரை சண்டை போட்டு அத்தனை பேரையும் வீழ்த்துகிறான். ஒருவனை மட்டும் வாயில் கடப்பாரையை செலுத்தி கொல்கிறான். செத்தவன் கடப்பாரை நிலத்தில் ஊன்றியிருப்பதால் கீழே விழாமல் நின்றபடியே செத்துப்போகிறான். அம்மாடியோவ்...
படத்தின் அனைத்து காட்சிகளுமே அதீதம். அதீதாதீதம். படத்தின் முன் காட்சிகளில் நாயகன் பல்வேறு இடங்களுக்கு போய் தகராறு செய்கிறான் அல்லவா, அது எல்லாமே அவன் மனைவி வல்லுறவுக்கு உள்ளாகாமல் தப்பிக்க ஓடும்போது கதவை சாத்திக்கொண்ட ஆட்கள். அத்தனை பேரும் நாயகன் வாழ்ந்த தெருக்காரர்கள். வாக்களிக்கவில்லையா, அரசு சலுகைகள் கிடையாது. குடிநீர் கிடையாது. கேஸ் கிடையாது. மின்சாரம் கிடையாது என அத்தனை வசதிகளையும் நாயகன் உடைத்து தள்ளுகிறான். அஞ்சல்துறையில் வேலை செய்பவரை துப்பாக்கி காட்டி மிரட்டி வீட்டை காலி செய்கிறான். இதில் கர்ப்பிணி மனைவி உள்ள ஆள் மட்டும் தப்பிவிடுகிறார்.
பொதுவாழ்க்கை என்பதற்கு மனநிம்மதியை விட்டுக்கொடுத்துவிடவேண்டும் என நாயகனுக்கு தெரியாதா? காவல்துறையினர் அமைச்சரோடு கைகோத்துக்கொண்டது அறிந்தும் கூட மனைவி படுகொலையான பிறகு உடலைத் தூக்கிக்கொண்டு காவல்நிலையத்திற்கு எதற்குப் போகிறார்? அங்கு வாக்காளர் பட்டியல் பற்றிய காட்சி. எரிச்சலோ எரிச்சல்.
தனது மனைவியைக் கொன்று, தோழிகள் இருவரைக் கொன்ற அமைச்சர்கள் மூவரை நாயகன் மன்னித்து சட்டத்தின் பிடியில் விட்டுவிடுகிறார். பிறரை குண்டு வெடிப்பில் இருந்து காக்கிறார். முதல்வரின் மகள் உடலிலுள்ள உடையை முழுக்க அகற்றி நிர்வாணம் ஆக்கி எதற்கு வெடிகுண்டை எடுக்கவேண்டும். இடுப்புத்துணியை மட்டுமே மேலே விலக்கினால் போதுமே? பலர் கூடியுள்ள சபையில் நாயகன், பிணத்தின் உடலிலுள்ள துணியை வேகமாக அகற்றி, வயிற்றைக் கீறி வெடிகுண்டை எடுக்கிறார். வில்லன்கள் இரு பெண்களை கடப்பாரையால் குத்திக் கொல்கிறார்கள். இயக்குநரின் சிந்தனையோ சிந்தனையப்பா..
ஒருகட்டத்தின் நீதிபதி மனநல சிகிச்சையை நாயகனுக்கு அளிக்க உத்தவிடுகிறாரே அதுகூட சரிதானோ என்று தோன்றுகிறது....
இதே இயக்குநர் எடுத்த ஆபரேஷன் துரியோதனா படம்தான் தமிழில் தீ என்று பெயர் வைத்து எடுத்தார்கள் வட இந்தியாவைச் சேர்ந்த குஷ்பு புருஷன் சுந்தர் சி நடித்திருப்பார். அதிர்ச்சியை ஏற்படுத்தவேண்டுமென இயக்குநர் நினைத்திருக்கிறார். ஆனால் பார்வையாளர்களுக்கு ஒவ்வாமையே வந்துவிட்டது. தனி உலகில் நடக்கும் கதை என எடுத்துக்கொண்டால் கதையை எந்த வித நெருடல் இன்றி பார்க்கலாம்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக