ஆன்மா இடம் மாறுதலால் வம்புச்சண்டை மாணவனின் வாழ்க்கையில் நடக்கும் தலைகீழ் மாற்றங்கள்!
சேம் கைய்
மங்கா காமிக்ஸ்
மங்காகோ.காம்
50 அத்தியாயங்கள்---
இரண்டு பள்ளி மாணவர்கள். ஒருவன் படிப்பில் ஈடுபாடு கொண்டவன். அப்பாவி. இன்னொருவன், அடிதடி ஆள். எப்போதும் யாராவது அவனுக்கு எதிராக விரல் உயர்த்தினால் கூட கையை அடித்து முறிப்பவன். இவர்கள் இருவரும் எதிர்பாராதபடி ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். அதன் விளைவாக, இருவரின் ஆன்மா மாறுகிறது. இதனால் ஏற்படும் விவகாரங்களே கதை.
இது ஒரு தற்காப்புக்கலை கதை. எனவே, கதையில் அடிதடி விஷயங்களே அதிகம். படக்கதை முழுக்க கருப்பு வெள்ளை என்பது வாசிக்கவே புதிய அனுபவத்தை தருவதாக உள்ளது. நாயகன் காங் டு ஜி உடலில் அப்பாவி மாணவன் சூன் ஆன்மா புகுந்துவிட, படிப்பதா, ஏற்கெனவே உள்ள எதிரிகளை அடித்து துவைப்பதா என அவன் யோசிக்கும் இடத்தில் கதை வேகம் பிடிக்கிறது.
காங் டு ஜி உடல் அபாரமான தற்காப்புக்கலை ஆற்றல் கொண்டது. ஆனால் அதை இயக்கும் ஆன்மா, மாறிவிடுகிறது.அடிதடி என்றாலே மன்னிப்பு கேட்டுக்கூட தப்பித்து ஓடிவிடலாம் என நினைப்பவன், அவனுக்கு அவரும் எதிர்பாராத சவால்கள் மூலம் தற்காப்புக்கலை கற்க முயல்கிறான். அக்கலை பெயர் கோ மு டு. தற்காப்புக்கலை காமிக்ஸ் என்பதால் அடிதடி மட்டுமே தொடர்ச்சியாக வருகிறது. முக்கியமான உணர்ச்சிகரமான சில கட்டங்கள் தவறவிடப்பட்டுள்ளன.
பேராசை பிடித்து பெண் ஆராய்ச்சியாளர் ஒருவரால், காங், சூன் ஆன்மாக்கள் இடம் மாறுகின்றன. அதை அவர் அறிந்துகொள்ளும்போது இருவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். கொரியாவிலிருந்துஅமெரிக்காவுகு ஒருவரை அனுப்புவது, அமெரிக்காவில் உள்ளவரை கொரியாவுக்கு அனுப்புவது போன்ற எந்திரத்தை ஆராய்ச்சியாளர் கண்டுபிடிக்கிறார். அது ஒரு டெலிபோர்டர் போல. ஆனால், அந்த எந்திரம் இரு நபர்களின் குண இயல்புகளை, ஆன்மாவையே மடைமாற்றம் செய்துவிடுகிறது. நாயையும் பூனையையும் வைத்து சோதிக்கும்போதே நாய் மீனை டேபிளில் தொற்றி ஏறி சாப்பிடும், பூனை, எலும்புத்துண்டை கடிக்க முயலும்.
காங்கின் வாழ்க்கை மட்டுமே ஐம்பது அத்தியாயங்களுக்கும் மேல் கூறப்படுகிறது. சூன் வாழ்க்கை பற்றி ஏதுமே கூறப்படவில்லை. காங்கின் ஆன்மா அவனிடம் இருக்கிறது. ஆனால், அவனுக்கு பழைய நினைவுகள் அழிந்துவிடுவதாக கதை நகர்கிறது. காங்கின் உடலில் சூன் இருப்பது சரி. அவன் படிப்பதாக காட்டும் காட்சிகள் கூட ஆழமாக இல்லை. உணர்வுப்பூர்வமாக சில காட்சிகள் கூட வலுவாக அமையவில்லை. எல்லாமே திரும்ப திரும்ப பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஈகோ சண்டைகளாகவே வருகின்றன.
மாணவிகளுக்கென சில காட்சிகள் வருகின்றன. அவர்களும் கூட கவர்ச்சிக்காகவே பயன்படுத்தப்படுகிறார்கள். பரிதாபம். காங்கை பலிவாங்க வரும் ஒருவனின் பாத்திரம் மட்டுமே பரவாயில்லை என உருவாக்கப்பட்டிருக்கிறது. அவன், தன்னுனடைய எதிரியை அவனுடைய நண்பன் பைக்கில் வந்து அடித்து வீழ்த்தியதற்கு கோபமுறுகிறான். என்னுடைய பழிவாங்கும் திட்டம் கெட்டுபோனது என்று சொல்லி அவனை அடிக்கிறான். பின்னாளில் காங்குடன் சண்டையிட்டு வலது கை உடைந்து போகிறது. அவனையும் காங்கே மருத்துவமனையில் சேர்த்து, கை ஊனமாகாமல் காக்கிறான். அதனால் பழி, வன்ம பாதையில் இருந்து விடுபடுகிறான். காங்குடன் நட்பாகிறான். இந்த காட்சிகளை விளக்கும் ஓவியங்கள் சிறப்பாக உள்ளது. வாசிக்கும்போது அவற்றை எவரொருவரும் உணரலாம்.
ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை வேண்டும் என்பவர்களுக்கான மங்கா காமிக்ஸ். இப்படக்கதையை சிறிய சிறிய பேனல்களிலும் நுட்பமாக வரைந்திருக்கிறார்கள். காங், தற்காப்புக்கலை மையத்தில் அந்த நிலத்தை ஆக்கிரமிக்க வருபவனிடம் போடும் சண்டை திகைக்க வைக்க கூடியது. அந்த சண்டையில் காங்கின் உடலில் சூன் உள்ளதை பலவீனமாக்கி தப்பும் தவறுமாக கற்றுக்கொண்ட வித்தையை செயல்படுத்துவதை எழுத்தாளர் விளக்கியிருக்கிறார். ஓவியர் அதை சரியாக புரிந்துகொண்டு வரைந்திருக்கிறார்.
ஒரு பெண் பாத்திரம் கூட வலுவாக இல்லை. திரும்ப திரும்ப பள்ளி மாணவர் சண்டைகளே வருவது மட்டுமே குறை.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக